ஒரு பாம்பிற்கு மருத்துவம் பார்க்க திரண்ட மருத்துவர்கள் மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை CURRUMBIN WILDLIFE HOSPITAL

பாம்பின் உடலில் 500 உண்ணிகள்

உடலில் இருந்த 500க்கும் மேற்பட்ட உண்ணிகள் நீக்கப்பட்ட பாம்பு ஒன்று உடல் மிகவும் நலிவடைந்துள்ளதாகவும், ரத்தசோகையால் அது அவதியுறுவதாகவும் ஆஸ்திரேலியாவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் கூறுகிறார்கள். குயின்ஸ்லாந்து பகுதியிலிருந்து மீட்கப்பட்ட அந்த மலைப்பாம்பின் உடலில் 511 உண்ணிகள் இருந்துள்ளன. அந்த பாம்பிற்கு தீவிரமாக மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதாகவும், குணமடைந்தவுடன், அது விரைவில் வனத்தில் விடப்படும் என்று வனஉயிர் காப்பக அமைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேயர் மரணம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டேன்சிக் நகர மேயர் பாவேவூ

அறக்கட்டளை கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட போலந்தின் டேன்சிக் நகர மேயர் பாவேவூ அடமோவிட்ச் மருத்துவமனையில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 53.ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையிலேயே அவர் குத்தப்பட்டார். உடனடியாக உள்ளூர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

விரிவாக படிக்க:மேடையில் கத்தியால் குத்தப்பட்ட போலந்து மேயர் மரணம்


வீட்டிற்குள் புகுந்த விமானம்

படத்தின் காப்புரிமை EPA

இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் ஃபாத் விமான நிலையத்தில் மோசமான வானிலையில் தரையிறங்கிய இந்த போயிங் 707 ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஒடுதளத்தை தாண்டி விமான நிலைய சுவற்றை இடித்துக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்தது.

விரிவாக படிக்க:இரானில் வீட்டில் புகுந்த சரக்கு விமானம்: 15 பேர் பலி


போகி மாசு

படத்தின் காப்புரிமை EPA

சென்னையில் போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் மாசு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்திருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போகிப் பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பதால், கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசு பாடு அதிகரித்துவந்தது. மாசுபாட்டினால், ஓடுபாதை தெரியாத காரணத்தில் கடந்த சில ஆண்டுகளாக போகிப் பண்டிகை தினத்தன்று சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டன. பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டன. சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

விரிவாக படிக்க:போகியால் மாசு: கடந்த ஆண்டைவிட குறைவு என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்


கழிவுநீரிலிருந்து குடிநீர்

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது குடிநீர் வாரியம். இந்த நிலையில்,  கழிவுநீரை மிகத் தூய்மையாகச் சுத்திகரித்து விநியோகிப்பது ஒரு தீர்வாக அமையக்கூடும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில்,  சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.

இந்த ஆண்டு மட்டுமல்லாமல், பெரும்பாலான வருடங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை  முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால், அடுத்த ஆண்டு இந்தக் குடிநீர் விநியோகம் துவங்கலாம்.

முதற்கட்டமாக, நெசப்பாக்கத்திலும் பெருங்குடியிலும் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகளை குடிநீர் வாரியம் துவங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :