பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கவேண்டும்- டொனால்டு டஸ்க்

பிரெக்ஸிட்டை ரத்து செய்வதே ஒரே சாத்தியமான தீர்வு என்று குறிப்பால் கூறினார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரெக்ஸிட்டை ரத்து செய்வதே ஒரே சாத்தியமான தீர்வு என்று குறிப்பால் கூறினார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே தாக்கல் செய்த பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் படுதோல்வி அடைந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடித்திருக்கவேண்டும் என்று குறிப்பால் உணர்த்தினார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மார்ச் இறுதியில்பிரிட்டன் வெளியேறவுள்ள நிலையில், பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிரிட்டன் மேற்கொள்ளவேண்டிய வணிகம், போக்குவரத்து, குடியேற்றம் போன்றவை குறித்த ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் தொடர்ந்து பேச்சு நடத்தின. இரு தரப்பும் ஒப்புக்கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அது பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டி சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் தெரீசா மே தலைமையிலான அரசு தயாரித்த இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மத்தியிலேயே எதிர்ப்பு நிலவியது.

தெரீசா மே முன்வைத்த இந்த வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 432 எம்.பி.க்கள் எதிராகவும் 202 எம்.பி.க்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன் மூலம், ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களும், அரசியல்வாதிகளும், வருத்தத்துடன் இதற்கு எதிர்வினையாற்றினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெரீசா மே.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த டொனால்டு டஸ்க், "ஒப்பந்தமும் சாத்தியமில்லை, ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவும் யாருக்கும் விருப்பம் இல்லை என்றால், சாத்தியமான ஒரே தீர்வு என்ன என்பதை சொல்வதற்கான துணிச்சல் யாருக்குத்தான் வரும்?" என்று கேட்டுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த, வரலாறு காணாத தோல்வி இது. பிரதமர் தெரீசா மே-வின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதையும் படியுங்கள்:

இதன் மூலம் பிரெக்ஸிட் நடைமுறை மீதே ஐயம் ஏற்பட்டுள்ளது. அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் ஜெரமி கோர்பின்.

ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு பிரிட்டனுக்கு காலம் கடந்துகொண்டிருக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிளௌடீ ஜங்கர். "ஏறத்தாழ காலம் முடிந்துவிட்டதால் ஐக்கிய ராஜ்ஜியம் கூடிய விரைவில் தமது நோக்கங்களைத் தெளிவுபடுத்தவேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பு நடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பாவுக்கு கசப்பான நாள் என்று கூறியுள்ளார் ஜெர்மனியின் நிதியமைச்சரும் துணை சான்சலருமான ஒலாஃப் ஸ்கால்ஸ். "நாங்களெல்லாம் தயாராக உள்ளோம். ஆனால், ஒப்பந்தம் ஏதுமில்லாமல் பிரிட்டன் வெளியேறுவது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கவர்ச்சிகரமான தேர்வல்ல" என்று அவர் கூறினார்.

ஒப்பந்தமில்லாமல் பிரிட்டன் வெளியேறுவது மோசமான தேர்வு என்று ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் தலைவர் கிராம்ப்காரென்பியூவர் என்பவரும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :