செஹுன்கஸ் தவளை: தனிமையில் தவித்த 'சிங்கிள்' தவளைக்கு 'ஜோடி' கிடைத்தது

ஜூலியட் படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation
Image caption ஜூலியட் - செஹுன்கஸ் தவளை

தவளைகளின் பல்வேறு இனங்கள் உள்ளன. டெல்மட்டோபிட்டே குடும்பத்தைச் சேர்ந்த செஹுன்கஸ் தவளையொன்று இந்த இனத்தை சேர்ந்த கடைசி தவளை என நம்பப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது தனிமையிலிருந்து அதற்கு விலக்கு கிடைக்கவுள்ளது.

ரோமியோ என அறியப்படும் அத்தவளை, பொலிவியாவில் உள்ள நீர் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பத்து ஆண்டுகளை தனிமையில் கழித்துள்ளது.

தொலைதூர பொலிவியன் மழைக் காடுகளில் ஒரு குழு பயணம் மேற்கொண்டு இந்த தவளைக்கு ஜோடியை தேடியது. தற்போது ரோமியோவுக்கு ஒரு ஜூலியட்டை கண்டறிந்துள்ளது.

ஒரு ஓடையில் ஐந்து செஹுன்கஸ் தவளைகளை பிடித்தது அக்குழு. தவளை கலப்பு செய்யும் லட்சியத்துடனும் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய அத்தவளைகளை மீண்டும் காட்டிலேயே விடுவதற்காகவும் இந்த தேடுதல் வேட்டையை நடத்தியது இக்குழு.

படத்தின் காப்புரிமை Stephane Knoll, Museo de Historia Natural Alcide d
Image caption தவளைகள் தேடும் பணி

கோச்சபாம்பா நகரத்தின் கண்காட்சியகத்தில் விலங்கியலில் ஒரு பிரிவான நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன குறித்த படிப்பான ஹெர்பட்டாலஜி துறையின் தலைவராக இருப்பவரும் இந்த தேடல் பயணத்தின் தலைவராக இருப்பவருமான தெரீசா கமாச்சோ படானி பிபிசியிடம் பேசினார்.

தவளைகளிலும் எதிர்பாலின ஈர்ப்பு உண்டு என அவர் நம்புகிறார். '' ரோமியோ உண்மையில் மிகவும் அமைதியாகவும் தளர்வாகவும் இருக்கிறது. அது பெரிதாக நகரவே இல்லை. அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். மேலும் உணவு உட்கொள்ள ஆர்வமாக இருக்கிறான். ஆனால் அவர் சற்று மந்தமான மற்றும் கூச்சமுடைய வகையைச் சேர்ந்தவன்'' என்கிறார் தெரீசா கமாச்சோ படானி.

படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation
Image caption ரோமியோ

ஜூலியட் ரோமியோவிடமிருந்து முற்றிலும் வித்தியசமான குணம் கொண்டவள் எனச் சொல்லும் தெரீசா ''அவள் உண்மையாகவே மிகவும் நல்ல ஆற்றலோடு இருக்கிறாள். நன்றாக நீந்தும் அவள், நிறைய உணவு உட்கொள்கிறாள். சில சமயங்களில் தப்பிக்கவும் முயல்கிறாள்'' என ஜூலியட் குறித்து விவரித்தார்.

ஐந்து தவளைகள் அப்பயணக்குழுவால் கண்டறியப்பட்டது. இதில் மூன்று ஆண் தவளைகள் மற்றும் இரண்டு பெண்கள் தவளைகள்.கடந்த தசாப்தத்தில் முதல் முறையாக காட்டில் காணப்பட்ட செஹுன்கஸ் தவளைகள் இவை. இதற்கு முந்தைய தேடுதல் நடவடிக்கையில் இவ்வகை தவளைகள் கிடைக்கவில்லை.

ரோமியோவை பொருத்தவரை பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரியியலாளர்களுக்கு கிடைத்தது. அப்போது செஹுன்கஸ் இன தவளைகள் அழிந்து வந்த ஒன்றாக இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். ரோமியட்டும் அழிந்துபோய்விடாமல் இருப்பதற்காக அவர்கள் பாதுகாத்து வந்தனர். ஆனால் இவ்வளவு காலம் ரோமியட் தனிமையிலேயே இருக்க நேரிடும் என அவர்கள் நினைக்கவில்லை.

கடந்த ஆண்டு ரோமியோவுக்கு டேட்டிங்கிற்காக அது குறித்த விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனால் அத்தவளை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

தற்போது கண்காட்சியகத்தின் பாதுகாப்பு மையத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இத்தவளைகள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

செஹுன்கஸ் தண்ணீர் தவளைகள் - சில உண்மைகள்

1. இவ்வகை தண்ணீர் தவளைகள் (Telmatobius yuracare) பொலிவியாவின் மழைக்காடுகளின் குளங்கள், சிறு ஓடைகள் மற்றும் நதிகளில் இருக்கும். அழிந்து வந்த இந்த இனத்தின் ஒரு தவளை மட்டும் சிறு ஓடையில் இருந்து எடுக்கப்பட்டது.

2. பொலிவியா, பெரு மற்றும் ஈக்வடார் நாடுகளில் இவ்வகை தவளைகள் வேகமாக அழிந்துவருகின்றன.

3. பல்வகையான அபாயங்களை இவை எதிர்கொள்கின்றன. பருவநிலை மாற்றம், வாழ்விடம் அழிப்பு மற்றும் நன்னீர் மீன்கள் படையின் அறிமுகம் உள்ளிட்டவற்றால் இவை அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன.

படத்தின் காப்புரிமை Stephane Knoll, Museo de Historia Natural Alcide d
Image caption தேடுதல் வேட்டையில் சிக்கிய மேலும் சில தவளைகள்

பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கும் உலகளாவிய வனஉயிர் பாதுகாப்பு அமைப்பின் கிறிஸ்ஜோர்டான், விலங்குகளை சிறைபிடிப்பதில் ஆபத்து உள்ளது என்கிறார். காட்டில் இருக்கும் வெகு சில தவளைகளே நீண்ட காலமாக சாத்தியமான தவளைகள் எண்ணிக்கையை பராமரிக்கின்றன என்றார்.

கைட்ரிடோமைக்கோசிஸ் எனும் தொற்று உலகம் முழுவதும் நீர்நில வாழ்வனவற்றை அழித்து வருகிறது. தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள தவளைகளுக்கு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக சிகிச்சையளிக்கப்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation
Image caption தெரீசாவுடன் ஜூலியட்

இந்த சிகிச்சை முடிந்ததும் ஜூலியட்டை ரோமியோ சந்திக்கும். இவை இணைந்து இனப்பெருக்கம் செய்வதற்கு முயற்சி செய்யப்படும். பின்னர் இவ்விரண்டு தவளைகளும் அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு அனுப்பப்படும்.

பொலிவியாவில் தவளைகள் முதலான 22% நீர் நில வாழ் உயிரினங்கள் அழிவுக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. வாழ்விட இழப்பு, மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள்.

நீர் நில வாழ்வானவற்றின் நிலை மீது கவனம் பெற ரோமியோவின் கதை முக்கியமானது என்கிறார் தெரீசா கமாச்சோ படானி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :