மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு?

(கோப்புப்படம்) படத்தின் காப்புரிமை FEDERICO SCOPPA
Image caption (கோப்புப்படம்)

மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுமார் 117 பேர்கள் இருந்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது.

ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் கூறுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

53 பேரோடு பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு கப்பலொன்று, மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

கப்பல் கவிழ்ந்தபோது உயிர் தப்பி சுமார் 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இருந்தபோதிலும், முழு கப்பலும் மிகச் சரியாக எந்த பகுதியில் கவிழ்ந்தது, அதிலிருந்தவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இரண்டாவது கப்பல் கடந்த சனிக்கிழமையன்று லிபியாவிலிருந்து புறப்பட்டதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கப்பல் லிபியாவின் கரபுள்ளி என்னுமிடத்திலிருந்து புறப்படும்போது அதில் 120 பேர் இருந்ததாக விபத்திலிருந்து உயிர் பிழைத்த மூன்று பேர் தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் பிளாவியோ டி கியாகோமோ என்று கூறியுள்ளார்.

லிபிய கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை பார்த்த இத்தாலிய விமானப்படையினர் விமானத்திலிருந்து இரண்டு தெப்பங்களை வீசியதாக அந்நாட்டின் ராய்நியூஸ்24 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பல் கவிழ்ந்தவுடன் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர் செல்லும் வரை தத்தளித்துக்கொண்டிருந்த மூன்று பேர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு லாம்பெடுசா தீவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இத்தாலிய கடற்படையின் அதிகாரி பாபியோ தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மட்டாயோ சால்வினி

இந்த ஆண்டின் முதல் 16 நாட்களில் மட்டும் சுமார் 4,216 குடியேறிகள் இந்த கடற்பகுதியை கடந்து சென்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகும் என்று இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீப ஆண்டுகளாக இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள இத்தாலியின் துணை பிரதமர் மட்டாயோ சால்வினி, "ஐரோப்பாவின் துறைமுகங்கள் திறந்திருக்கும் வரை, துரதிருஷ்டவசமாக கடத்தல்காரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்