செவ்விந்திய பூர்வகுடி முதியவரை கேலி செய்த அமெரிக்க இளைஞர்கள்

Video படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்திய 'அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசம் ஆக்குவோம்,' எனும் பொருள்படும் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' (Make America Great Again ) என்ற வாசகம் பொறித்த தொப்பிகளை அணிந்த பதின்வயது இளைஞர்களின் குழு ஒன்று, வாஷிங்டன் டி.சி-யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கப் பூர்வக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பகடி செய்த நிகழ்வு பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

கெண்டகியின் கோவிங்க்டன் கேத்தலிக் ஹை ஸ்கூல் எனும் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள், ஒமாஹா இனத்தைச் சேர்ந்த நாதன் பிலிப்ஸ் எனும் முதியவர் டிரம்ஸ் இசைத்துக்கொண்டே பாடுவதை கேலி செய்யும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

அமெரிக்க இந்தியர்கள் இயக்கப் பாடலை ( இந்திய வம்சாவளியினர் அல்ல, அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள்) இருவர் பாடும்போது, கேலி செய்யும் வகையில் அக்குழுவினரும் பாடியுள்ளனர்.

தங்கள் மாணவர்களின் நடத்தைக்கு அப்பள்ளி பிலிப்ஸ் இடம் மன்னிப்புக் கோரியுள்ளது. நாதன் பிலிப்ஸ்க்கு தனிப்பட்ட வகையிலும், பூர்வகுடி மக்களுக்கு எதிரான பொதுவான செயல்களையும் தாங்கள் கண்டிப்பதாக அப்பள்ளி கூறுகிறது.

வெள்ளியன்று நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் கலந்துகொள்ள அந்த மாணவர்கள் அங்கு வந்திருந்தனர். அதே பகுதியில் நடந்த பூர்வகுடி மக்களின் பேரணிக்கு நாதன் பிலிப்ஸ் வந்திருந்தார்.

நாதன் பிலிப்ஸ் அமெரிக்காவுக்காக வியட்நாம் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, சுவரைக் கட்ட வேண்டும் என அந்த மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக நாதன் கூறியுள்ளார்.

"அமெரிக்கா பூர்வகுடிகளின் தேசம்; இது சுவர் எழுப்புவதற்கான இடம் அல்ல," என்று அவர் கூறியுள்ளார்.

"எங்களிடம் சிறை இருந்ததில்லை. முதியவர்களையும் குழந்தைகளையும் நாங்களாகவே பார்த்துக்கொண்டோம். அவர்களுக்கானவற்றை வழங்கி, சரி எது, தவறு எது என்று சொல்லி வளர்த்தோம்."

"அந்தத் திறனைப் பயன்படுத்தி அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசம் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று நாதன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பூர்வகுடியைச் சேர்ந்த முதல் பெண்களில் ஒருவரான டெப் ஹாலண்ட், அந்த மாணவர்களின் நடத்தை " அப்பட்டமான வெறுப்பு, அவமரியாதை மற்றும் சகிப்பின்மை" ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

அந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியும் வெட்கப்பட வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் கூறியுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்