காபி பயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறதா?

அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி? படத்தின் காப்புரிமை Getty Images

அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப கடினமாகதானே இருக்கிறது. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

இயற்கையாக காடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விதமான காபி மரங்கள் வளர்கின்றன. இப்போது நாம் உணவாகப் பயன்படுத்தும் இரண்டு விதமான காபி பயிரும் அதில் அடங்கும்.

இந்த ஆய்வு முடிவு கவலை அளிப்பதாக கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். நாம் பயன்படுத்தும் காபி பயிர் அழியாமல் இருக்க வேண்டுமானால், வன காபி ரகமும் காப்பாற்றப்படவேண்டும் என்கிறார்கள்.

உலகளவில் ஐந்தில் ஒரு செடி வகை அழிவின் விளிம்பில் இருக்கிறது என்றாலும் 60 சதவீதம் என்பது உண்மையில் அச்சம் தரும் ஒன்றுதான்.

ஏன் வன காபி ரகம்?

நாம் அருந்தும் காபி ரகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத போது, ஏன் காட்டில் உள்ள காபி ரகம் அழிவது குறித்து அச்சப்பட வேண்டும் என்கிறீர்களா?

படத்தின் காப்புரிமை Getty Images

காரணம் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ராயல் பொடானிக் கார்டனை சேர்ந்த ஆரொன் டாவிஸ், "காட்டு காபி ரகம் காப்பாற்றப்படவில்லை என்றால், நாம் அருந்தும் காபி ரகமும் ஒரு நாள் இல்லாமல் போகும்" என்கிறார்.

இதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

காபி பயிரிடல் தொடர்பான வரலாற்றை பார்த்தோமானால், காட்டு காபி ரகம், நாம் அருந்தும் காபி ரகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு உதவி இருக்கிறது என்பது புரியும் என்கிறார்.

காட்டு காபி ரகத்தை காப்பாற்ற பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சைன்ஸ் அட்வான்சஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. இது சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என்றும் கூறுகிறது.

75 சதவீத காபி ரகம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், 35 சதவீத ரகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், மீதமுள்ள 14 ரகம் குறித்து குறைவாகத்தான் தெரியும் என்பதால் அதுகுறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியேதான் 28 சதவீத வன காபி ரகங்கள் வளர்கின்றன என்றும், அதில் பாதிதான் விதை வங்கிகளில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றமும் காபியும்

அழிவில் இருக்கும் பயிர்களை பட்டியலிடும் ஐயூசிஎன் பட்டியலின்படி,பருவநிலை மாற்றத்தையும் கணக்கில் எடுத்து கொண்டால், அரபிகா காபி ரகமும் அழிவின் விளிம்பில் இருப்பதாக பட்டியலிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பருவநிலை மாற்றத்தினால், 50 சதவீத அரபிகா காபி பயிர் வகைகள் குறையும் என்றும், 2088ஆம் ஆண்டுக்குள் இந்தப் போக்கு மேலும் அதிகரிக்குமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரபிகா காபி ரகத்திற்கு தாய்நிலம் எத்தியோப்பியாதான். அது இயற்கையாக அந்நாட்டின் மழைகாடுகளில் வளர்கிறது.

வன காபி என்றால் என்ன?

பல காபி பிரியர்கள் இரண்டு வகை காபி பயிர்களைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம் என்பதே தெரியாது. நாம் பயன்படுத்துவது காபி அரபிகா மற்றும் காபி ரோபஸ்டா வகை தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாம் பயன்படுத்துவதை தவிர மீதமுள்ள 122 காபி ரகங்கள் இயற்கையாக காடுகளில் வளர்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை அருந்துவதற்கு நன்றாக இருக்காது. ஆனால், அந்த காபி ரகத்தின் ஜீன்கள்தான், இந்த பருவநிலை மாற்றத்திற்கு மத்தியில், நாம் அருந்தும் காபி ரகங்கள் எதிர்காலத்தில் உயிர்ப்புடன் இருக்க உதவி புரியும்.

காபியின் அழிவும், பிற பயிர்களின் அழிவும்

பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, காட்டுத் தேனீர் மற்றம் மா-வின் சில ரகங்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

எங்கு வன காபி வகை கண்டறியப்பட்டது?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்ரிக்கா உள்ளே உள்ள அடர்க் காடுகள், மடகாஸ்கர் தீவுகள் வெப்பமண்டல பருவநிலை நிலவும் இந்தியப் பகுதிகள், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளில் காட்டுக் காபி ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

அறிவியலாளர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான், இப்போது காபி பயிரிடுதலில் உள்ள பிரச்சனையையும், இந்த ஆபத்தையும் புரிந்து கொண்டு அதனை காப்பது குறித்தும் திட்டமிட வேண்டும் என்கிறார்கள்.

ஆய்வாளர் எலிமியர் நிக், "இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ள தரவுகளானது, எந்த வகை காபி ரகத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. அதன்படி நாம் திட்டமிட்டாலே நாம் பல ரகங்களை காப்பாற்றிவிட முடியும்." என்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: