அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் களமிறங்கும் கமலா ஹாரிஸ் மற்றும் பிற செய்திகள்

கமலா ஹாரிஸ் படத்தின் காப்புரிமை Reuters

ஜனநாயக கட்சியின் செனட்டர் கமலா ஹாரிஸ், 2020 அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தான் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் உள்பட இதுவரை எட்டு பேர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் செனட்டராக கடந்த 2016ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவியையும் கமலா வகித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், தான் தனது நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், நாட்டின் நலனுக்காக நான் போராடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதாக சர்ச்சை; லயோலா கல்லூரி வருத்தம்

சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட கலை விழா ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மனதை புண்படுத்துவதாக இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

லயோலா கல்லூரியும் மாற்று ஊடக மையம் என்ற அமைப்பும் இணைந்து "வீதி விருது" என்ற நிகழ்ச்சி ஒன்றை ஜனவரி 19-20ஆம் தேதிகளில் நடத்தின. இந்த விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் "கருத்துரிமை ஓவியங்கள்" எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஓவியங்களை முகிலன் என்பவர் வரைந்திருந்தார். இவற்றில் பல ஓவியங்கள் மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசையும் இந்து அமைப்புகளையும் விமர்சிக்கும் பாணியில் அமைந்திருந்தன. விழா முடிந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த இந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்வினையாற்றினர்.

விரிவாக படிக்க: ஓவியக் கண்காட்சி சர்ச்சை; லயோலா கல்லூரி வருத்தம்

பாஜக-வில் அஜீத் ரசிகர்கள்: அரசியலில் ஆர்வம் இல்லை என்கிறார் அஜீத்

பாரதிய ஜனதாக் கட்சியில் அஜித் ரசிகர்கள் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தனக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் என் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை தான் விரும்பவில்லையென்றும் அஜித் விளக்கமளித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இவர்களில் பலர் தங்களை அஜித் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, "திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித் என்றும், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் என்றும், அவரைப்போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள் இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்" என்று பேசினார்.

விரிவாக படிக்க: அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: அஜித்

"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்

படத்தின் காப்புரிமை Facebook

சீனாவிலுள்ள யுன்னான் மாநிலத்திலுள்ள யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார்.

அழிவின் விளிம்பில் இருக்கிறதா காபி?

படத்தின் காப்புரிமை Getty Images

அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப கடினமாகதானே இருக்கிறது. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

இயற்கையாக காடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விதமான காபி மரங்கள் வளர்கின்றன. இப்போது நாம் உணவு பொருளாக பயன்படுத்தும் இரண்டு விதமான காபி பயிரும் அதில் அடங்கும்.

ஆளப்போறான் தமிழனை மிஞ்சிய 'ரௌடி பேபி'| Most Viewed Tamil Songs |

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: