அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி: பள்ளி சிறுவனின் துப்பு மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Greece Police Dept

அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி : பள்ளி சிறுவனின் துப்பும் நான்கு பேர் கைதும்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் போட்டிருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பருவ வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 1980 களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்கை இவர்கள் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டும் சதித்திட்டம் ஒரு பள்ளி சிறுவன் கொடுத்த துப்பு மூலமே தெரியவந்திருக்கிறது.

இஸ்லாம்பெர்க் சமூகம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் முகமாக இருக்கிறது என சிலர் இதனை ஒரு சதி நடவடிக்கையாக குற்றம்சாட்டிவந்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று ஆண்களும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

ஆண்ட்ரூ கிரைஸல் (18), வின்சென்ட் வெட்ரோமில் (19), ப்ரியன் கொலோனேரி என்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 16 வயது சிறுவனும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சீனப் பொருளாதார தேக்கத்தால் ஆசிய நாடுகள் பாதிப்படையுமா?

சீனாவின் வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் சிறிது கசப்பாகத் தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். பெய்ஜிங் சொல்வதைவிட, வளர்ச்சி அளவு மிகவும் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

உலக வங்கி அறிக்கையின்படி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு 6.3% ஆக இருந்த வளர்ச்சி அளவு 6% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் சுயநலப் பார்வையில் பார்த்தால், சீனாவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக ஆசியாவில் வளர்ச்சி மோசமான நிலையில் இருக்கிறது என்றே தெரிகிறது.

சீனாவில் மந்தமான வளர்ச்சி என்பது உலகின் மற்ற பகுதிகளுக்கும் வளர்ச்சியில் மந்த நிலையைக் கொண்டுவரும்.

மேலும் படிக்க - சீனாவின் பொருளாதாரத் தேக்கம் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சி.வி.விக்னேஸ்வரன்

"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்"

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள்.

முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பலதார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

மேலும் படிக்க - வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்: விக்னேஸ்வரன்

படத்தின் காப்புரிமை Hagen Hopkins

நியூசிலாந்தில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவக்கம் - இந்தியா சாதிக்குமா?

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டி தொடரில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நேப்பியரில் தொடங்குகிறது.

விராட் கோலிக்கு நிகராக சர்வதேச அளவில் பேசப்படும் சில வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் அந்த அணியின் கேப்டனாகவும், முன்னணி பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார்.

அவருக்கு பக்கபலமாக மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர் போன்ற பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சில் நியூசிலாந்தின் ஆடுகளங்களில் நன்றாக செயல்படும் டிம் சவுத்தி , ட்ரெண்ட் போல்ட் போன்றோரும் உள்ளனர்.

இதுவரை இந்திய- நியூசிலாந்து இடையே நடைபெற்ற 101 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 51 முறையும், நியூசிலாந்து 44 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிவடைய, 5 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெற்றி கொண்ட இந்திய அணி தற்போது மிகவும் நம்பிக்கையுடன் வலிமையாக காணப்படுகிறது.

மேலும் படிக்க - ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா நியூசிலாந்தில் சாதிக்குமா?

படத்தின் காப்புரிமை Getty Images

சசிகலாவுக்கு சலுகை - புகழேந்தி சொல்வதென்ன?

சிறையில் சட்டவிரோதமாக சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா மொட்கில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரித்த வினய் குமார் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையை கேட்டுக்கொண்டது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வினய் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு ரூபாவால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியது.

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறுகிறார்.

மேலும் படிக்க - சசிகலாவுக்கு சலுகை: லஞ்சம் தந்த குற்றச்சாட்டில் புகழேந்தி ஆஜராக உத்தரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்