ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டு வணிக பிரச்சனையை தீர்க்கும் புதிய பாலம் மற்றும் பிற செய்திகள்

இரு நாடுகளை இணைக்கும் புதிய பாலம்

படத்தின் காப்புரிமை AFP

மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நதி மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பல தசாப்தங்களாக இருந்து வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை நீக்குவதோடு, வணிகத்தையும் பெருக்கவுள்ளது.

நதியின் இரு பக்கங்களிலும் இருக்கும் நிலம் காம்பியா. செனிகர் நாட்டின் மூன்று பக்கங்களையும் இந்த நதியே சூழ்ந்துள்ளது.

இரண்டு பக்கங்களிலும் இருக்கும் காம்பியா நாட்டை இந்த பாலம் இணைப்பதோடு, செனிகலின் வடக்கு பகுதியில் இருந்து தென் செனிகல் மாகாணத்தையும் இந்த 1.9 கிலோ மீட்டர் பாலம் இணைக்கிறது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தில் கார் போன்ற வாகனங்கள் செல்ல 5 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும். லாரி போன்ற பிற கனரக வாகனங்கள் வரும் ஜூலை மாதம் முதல் இதில் செல்லலாம்.

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம்

படத்தின் காப்புரிமை SUBHANKAR CHAKRABORTY/ HINDUSTAN TIMES VIA GETTY I

காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இந்த பணிகளை அவர் கவனிக்க தொடங்குவார் என்றும் அந்த கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியின் வருகை உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்க உத்வேகமளிக்கலாம். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சக்தி வாய்ந்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள அவரால் முடியுமா?

"பிரியங்கா காந்தியின் வருகை தொண்டர்கள் மட்டத்தில் பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. அவர் இதுவரை எதையும் சாதித்தவரில்லை. ஆனால், பலருக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக பெண்கள், அவரது வருகையால் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்" என்கிறார் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜயஷங்கர்.

ஜெயலலிதா குற்றவாளியா?

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களின் வரிப் பணத்தை, பள்ளிகள், மருத்துவமனைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லையென்பதால் அவரைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனக் கூறியுள்ளது.

ஆகவே கர்நாடக உயர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டதைக் கணக்கில் கொள்ளும்போது, அவரைக் குற்றவாளி என்று கூற முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு

ஜிம் (GIM) எனப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி நேற்று துவக்கி வைத்தார். பல நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் மூலம் பெருமளவு முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடுவதாக கூறுகிறது தமிழ்நாடு அரசு.

இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. பிபிசியிடம் பேசிய ஜப்பானியத் தூதர், தங்கள் நாடு மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்யவிருப்பதாகக் கூறினார்.

இந்த மாநாட்டின் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி

படத்தின் காப்புரிமை KERRY MARSHALL/GETTY IMAGES

களத்தில் இந்திய பந்துவீச்சாளர்களும், தடுப்பாளர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் நியூசிலாந்து அணியினர் தடுமாறினர். குறிப்பாக சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சளர் முகமது ஷமி, மார்ட்டின் கப்தில் உள்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டம் தொடங்கியவுடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறியதற்கு பெரும் காரணம் அவர்கள் ஆடுகளம் மற்றும் பந்துவீச்சை சரியாக கணிக்க தவறியதுதான். ஆனால், இரண்டாவதாக இந்திய அணி ஆடிய நிலையில், இந்த ஆடுகளம் சாதகமாக அமைந்தது என்னலாம். நியூஸிலாந்தின் பந்துவீச்சை இந்திய அணியினர் எளிதாக அடித்து ஆடினர்.

அதனால்தான் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 34.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட ரன்களை குவித்து இந்தியா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :