தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை தானே வென்ற சிறுமி மற்றும் பிற செய்திகள்

தன்னை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியை வென்ற கடத்தப்பட்டு தப்பித்த சிறுமி

படக்குறிப்பு,

கடத்தப்பட்டு தப்பித்த சிறுமி தனது உறவினருடன்

தனது பெற்றோரை கொன்று, தன்னையும் கடத்தி சென்ற நபரிடம் இருந்து தப்பித்த 13 வயது சிறுமியான ஜெய்ம் கிளாஸ் , அவரை மீட்க அறிவிக்கப்பட்ட வெகுமதியான 25,000 அமெரிக்க டாலர்களை பெறுகிறார்.

இந்த சிறுமியின் பெற்றோர் பணியாற்றிய ஹார்மல் ஃபுட்ஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனம் கடத்தி செல்லப்பட்ட சிறுமி கிளாஸை மீட்க உதவிகரமாக யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு மேற்கூறிய பரிசுத்தொகை அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

கடத்தப்பட்டு 88 நாட்களுக்குப் பிறகு கிளாஸ் தப்பித்து வந்தார்.

சிறுமி கிளாஸ் தப்பித்து வந்ததை போலீசாரிடம் தெரிவித்த அவரின் அண்டை வீட்டார், அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையை சிறுமிதான் பெற வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர்.

தற்போது இந்த பரிசுத்தொகை இந்த சிறுமிக்கே செல்கிறது என்று ஹார்மல் ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலாம்சாட் V2: உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவிய இந்தியா

உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் V2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.

விண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே.

சென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவு தளத்தில் இருந்து இரவு இந்திய நேரப்படி 11.37க்கு செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட். இது சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களில் கலாம் சாட்டும் ஒன்று. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது மையத்தில் இருந்தனர்.

பொழுதுபோக்குக்கு நடத்தப்படும் ரேடியோ சேவைகளான ஹேம் ரேடியோ சேவைகளை நடத்துவோருக்கு இது உதவும். லாப நோக்கமற்ற இந்த ஹாம் ரேடியோ சேவைகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக் கோளாக கலாம்சாட் செயல்படும்.

இது பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு: "3 லட்சம் கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் புதிய முதலீடுகள்"

வியாழக்கிழமையுடன் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் புதிதாக மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும் இதன் மூலம் மூன்று லட்சத்து 441 கோடி ரூபாய் முதலீடுகள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 10 லட்சத்து 50 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஜெயலலிதா காலத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2.42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 62 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வந்திருப்பதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், முதல் மாநாடு முடிந்து நான்கு வருடங்கள் கழிந்த பிறகும்கூட, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 25 சதவீதம்கூட செயல்பாட்டிற்கு வரவில்லையென குற்றம்சாட்டியிருக்கிறார்.

நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்கா இடையே முற்றுகிறது மோதல்

படக்குறிப்பு,

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ள நிலையில், அவரின் வருமான ஆதாரங்களை துண்டிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.

புதன்கிழமையன்று இவ்விரு தரப்புக்கும் இடையே முற்றிய மோதலில் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலாவின் அதிபரான நிக்கோலஸ் அறிவித்தார்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக எதிர்க்கட்சித் தலைவரான குவான் குவைடோ தன்னை தானே அறிவித்துக்கொண்ட நிலையில், இதை அமெரிக்கா ஆதரித்துள்ளது.

பிற நாடுகளும் இப்படிச் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு கடும் சினத்தை ஏற்பத்தியுள்ளது.

இலங்கை மனிதப் புதைகுழி எச்சம்: மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கின்றன

இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்பட்டது.

இதுவரை மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் மூலம் 23 சிறுவர்கள் உள்ளிட்ட 277 பேரின் மனித உடல் மீதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :