வெனிசுவேலா சர்ச்சை: 'நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’

நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்'

தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் இடையே மோதல் முற்றிவரும் தற்போதைய சூழலில் இந்த கருத்தை குவான் குவைடோ வெளியிட்டுள்ளார்

அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்த நிலையில், அவரின் வருமான ஆதாரங்களை துண்டிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார்.

புதன்கிழமையன்று இவ்விரு தரப்புக்கும் இடையே முற்றிய மோதலில் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக வெனிசுவேலாவின் அதிபரான நிக்கோலஸ் அறிவித்தார்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக எதிர்க்கட்சித் தலைவரான குவான் குவைடோ தன்னை தானே அறிவித்துக்கொண்ட நிலையில், இதை அமெரிக்கா ஆதரித்துள்ளது.

பிற நாடுகளும் இப்படிச் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு கடும் சினத்தை ஏற்பத்தியது.

இதனிடையே, அமெரிக்காவை போல சில லத்தீன் நாடுகளும் குவான் குவைடோவின் அறிவிப்பை ஆதரித்தன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை பிடுங்கப்பார்ப்பதாக கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

குவைடோ இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதை ஆதரிப்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், ரத்தம் சிந்துவதற்கான நேரடிப்பாதை என்றும் கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோஃப், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏதோ சாக்குப் போக்கு கூறி ஆர்கனைசேஷன் ஆஃப் அமெரிக்கன் ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும், வெனிசுவேலா மீது அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்துவதாக கூறினார். தங்கள் நட்பு நாடான வெனிசுவேலாவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, அதிபர் ஹ்யூகோ சாவேஸ் மறைவை அடுத்து 2013-ல் அதிபர் பதவியேற்ற மதுரோ, மே மாதம் நடந்த தேர்தல் முடிவுகளை ஒட்டி இந்த மாதம் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்ததுடன், வாக்குப் பதிவு முறைகேடுகள் நடந்ததாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :