பார்ப்போரை பதற வைக்கும் மைக்கெல் ஜாக்சன் குறித்த ஆவணப்படம் மற்றும் பிற செய்திகள்

ஆவணப்படம் படத்தின் காப்புரிமை Tim P. Whitby

மைக்கெல் ஜாக்சன் குறித்த ஆவணப்படம்

ஒரு சிறுவனிடம் நகையை கொடுத்து, அதற்கு மாற்றாக பாலியல் நடவடிக்கையில் பிரபல பாப் பாடகரான மைக்கெல் ஜாக்சன் ஈடுபட்டதாக, புதிய ஆவணப்படமான Leaving Neverland படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்ப்போரை பதற வைக்கும் மற்றும் பாதிக்கும் இந்த ஆவணப்படமானது அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் நடைபெற்ற சூன்டன்ஸ் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது.

தாங்கள் சிறுவர்களாக இருந்த போது, மைக்கெல் ஜாக்சன் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் அளித்ததாக கூறும் இரண்டு ஆண்கள் குறித்த கதையே இந்த ஆவணப்படம்.

"ஜாக்சனின் பணத்தை சுரண்டுவதற்காக எடுக்கப்பட்ட பரிதாபமான முயற்சி இது" என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற பாப் பாடகரான மைக்கெல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகும் #GoBackModi

படத்தின் காப்புரிமை Getty Images

மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டாவது முறையாக இந்த ஹாஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வேறொரு விழாவுக்காக பிரதமர் மோதி சென்னை வந்த போது, இதே போல ஆனது.

ஆனால் இதே நேரத்தில், தற்போது மறுபக்கம் #TNWelcomesModi என்ற ஹாஷ்டாகும் ட்ரெண்டாகி வருகிறது.

பட்டேல் சிலை சுற்றுலா: சர்ச்சையான முதலைகளை இடமாற்றும் நடவடிக்கை

படத்தின் காப்புரிமை STATUEOFUNITY.IN

உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் சிலையைக்காண விமானம் மூலம், பார்வையாளர்கள் வந்துசெல்வதற்காக கிட்டத்தட்ட 300 முதலைகள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன.

நீரில் விமானம் வந்திறங்கும் வசதிக்காக சிலை வளாகத்திற்கு அருகிலுள்ள நீர்தேக்கத்திலிருந்து முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை இந்திய அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்.

9 அடி வரை நீளமுள்ள முதலைகள் சிலவற்றை உலோக கூண்டுக்குள் அடைத்து குஜராத்தின் மேற்கு பகுதிக்கு இவை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் படேல் சிலை குஜராத்தில் திறந்துவைக்கப்பட்டது.

சபரிமலை கனகதுர்கா: "மன்னிப்பு கேட்கமாட்டேன்"

படத்தின் காப்புரிமை Getty Images

சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்ததால் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவுடன் தனது வீட்டிற்கு மீண்டும் செல்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

"சபரிமலை கோயிலுக்குள் சென்றதற்காக இந்து அமைப்புகளிடமோ அல்லது எனது குடும்பத்தினருடமோ நான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே நடந்ததுடன், யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. எனது வீட்டிற்கு திரும்ப செல்வதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வேன்" என்று பிபிசியிடம் பேசிய கனகதுர்கா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைவதற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கனகதுர்கா தற்போது ஒரு தற்காலிக அரசாங்க தங்குமிடத்தில் தங்கியுள்ளார்.

India Vs NZ 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா

படத்தின் காப்புரிமை KERRY MARSHALL/GETTY IMAGE

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் பே ஓவல், மௌன்ட் மௌங்கானுய் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மாவும் (87 ரன்கள்) ஷிகார் தவனும் (66 ரன்கள்) சிறப்பாக ஆடி ரன் குவிப்பை தொடங்கி வைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :