சீனாவுக்கான கனடா தூதரை நீக்கிய ஜஸ்டின் ட்ரூடோ - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார் மெக்கலன். இதனை தொடர்ந்துதான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
பட மூலாதாரம், Reuters
ஜஸ்டின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் பதவியிலிருந்து விலகும்படி மெக்கலனை கேட்டுகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏன் என்று சொல்லவில்லை.
என்ன நடந்தது?
உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாவெய் உள்ளது.
இதன் அதிகாரி மெங் வான்ட்சொவை அமெரிக்கா கேட்டுகொண்டதற்கான கனடா அவரை கைது செய்தது. இதனால் சீனா கனடா மீது கோபம் கொண்டது. இரு நாட்டு உறவுகளும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டன.
இது குறித்து விரிவாக படிக்க: ஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா
பட மூலாதாரம், Reuters
இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை ஹூவாவெய் நிறுவனமும், அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொ-வும் மீறினார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஹூவாவெய் மறுக்கிறது.
பிரதமரும், தூதரும்
கனடா பிரதமர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் : "நான் ஜான் மெக்கலனை பதவி விலகும்படி கேட்டு கொண்டிருந்தேன். அவரின் ராஜிநாமா கடிதத்தையும் ஏற்றுகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த ராஜதந்திரியான ஜான், கனடாவின் கெளரவமிக்க பல பதவிகளில் வகித்ததாகவும், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்றி எனவும் கூறி உள்ளார்.
ஹுவாவெய் அதிகாரி மெங் வான்ட்சொ கைது விவகாரம் தவறான செயல் என்ற தொனியில் ஜான் மெக்கலன் கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சித்து இருந்தார்.
ஆனால், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாகவும், தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பும் கோரி இருந்தார்.
இந்த விவகாரமானது சீனா - கனடா உறவில் மேலும் விரிசலை உண்டாக்குமென கருதப்படுகிறது.
பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
ராபர்ட் லாய்ட் ஷெல்பெர்க்
முன்பே, கனடாவை சேர்ந்த நபருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து விரிவாக படிக்க: கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்