`தாலிபன் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய படுக்கை': மிரள வைக்கும் நேரடி அனுபவம்

`தாலிபான்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றிய படுக்கை'

ஓராண்டுக்கு முன்பு கிரேக்க பைலட் வசிலெய்யோஸ் வசிலெய்யூ காபூலில் மலை உச்சி நகரில் ஆடம்பர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். சர்வதேச தரத்திலான அந்த ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்குவார்கள் - அதனால் ஜனவரி 20 ஆம் தேதி, துப்பாக்கி ஏந்திய தாலிபன் தீவிரவாதிகள் அங்கு திடீரென தாக்குதல் நடத்தி குறைந்தது 40 பேரைக் கொன்றனர். அதில் எப்படி தப்பினேன் என்பதை வசிலெய்யோஸ் வசிலெய்யூ விளக்குகிறார்.

டின்னருக்கு சீக்கிரமாக - ஆறு மணிக்கு - என்னுடைய நண்பர் மற்றொரு பைலட் மைக்கோல் பவுலிகாக்கோஸ் உடன் செல்ல நான் முடிவு செய்திருந்தேன். சர்வதேச ஓட்டலுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களாக வந்து சென்றிருக்கிறேன். முதன்முறையாக அன்றைக்கு தான் அப்படி முடிவு செய்தேன் - வழக்கமாக இரவு 8.30 மணியளவில் தான் டின்னருக்கு செல்வேன்.

Image caption காம் ஏர் என்ற ஆப்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வசிலெய்யோஸ் வசிலெய்யூ மற்றும் மைக்கோல் பவுலிகாக்கோஸ் பணியாற்றுகின்றனர்.

சுமார் 7.30 மணிக்கு நாங்கள் டின்னரை முடித்த பிறகு நான் மொட்டை மாடிக்கு முந்தைய தளத்தில் உள்ள என்னுடைய அறைக்கு - அறை எண் 522- சென்று சிலருக்கு போன் கால்கல் செய்தேன். இரவு 8.47 மணிக்கு ஏதென்ஸ் நகருக்கு போன் செய்து கொண்டிருந்தபோது, கீழே லாபியில் பெரிய வெடி சப்தம் கேட்டது.

பால்கனிக்கு சென்று பார்த்தேன். தரையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்தேன். ஓட்டலுக்கு உள்ளே இருந்தும், வெளியில் இருந்தும் துப்பாக்கி சப்தம் கேட்டது. அந்த நேரத்தில் உணவகத்தில் நான் இல்லாமல் இருந்தது எவ்வளவு நல்லதாகிவிட்டது என்று உணர்ந்தேன். ``நல்லது வசிலெய்யோஸ். உயிர்பிழைக்க நீ ஏதாவது செய்தாக வேண்டும்'' என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

பால்கனி கதவை திறந்தபடியே வைத்துவிட்டு, அறையின் கதவை மூடினேன். எனது அறையில் இரண்டு படுக்கைகள் இருந்தன. கையெறி குண்டுகளில் இருந்து என்னை காப்பாற்றிக் கொள்வதற்கு, அவற்றில் ஒரு மெத்தையை எடுத்து கதவின் பின்னால் வைத்தேன். சில படுக்கை விரிப்புகள், டவல்கள், துணிகளை எடுத்து கயிறு போல கட்டிக் கொண்டேன். தேவை ஏற்பட்டால் நான்காவது மாடிக்குச் செல்வதற்குப் பயன்படுத்துவதற்காக இதைச் செய்து கொண்டேன்.

நான் பைலட்டாக இருப்பதால் நெருக்கடியான சூழ்நிலையை எப்படி கையாள்வது, விரைந்து முடிவு எடுப்பது ஆகியவை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். எனவே உணவகத்துக்கோ அல்லது தியேட்டருக்கு போனால் கூட, கதவுக்கு அருகில் அல்லது அவசர காலத்தில் வெளியேறும் பாதைக்கு அருகில் அமர்ந்து கொள்வதற்கு சிந்திப்பேன் - அது தானாகவே நடக்கும், ஏறத்தாழ இரண்டாவது இயற்கை கடமையைப் போல நடக்கும்.

அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்கத் தொடங்கினேன். தாக்குதலில் ஈடுபட்டிருப்பது எத்தனை பேர் என்றோ அல்லது கட்டடத்தில் எங்கே அவர்கள் இருக்கிறார்கள் என்றோ எந்தத் தகவலும் தெரியாது. ஐந்தாவது மாடியில் இருந்து குதிப்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே ``வசிலெய்யோஸ் அறைக்குள் இருந்தபடியே உன்னைக் காத்துக் கொள்ள, முடிந்த வரையில் முயற்சி செய்'' என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

என்னால் விவரிக்க முடியாத சில காரணங்களால், எதிர்பாராத வகையில் நான் பதற்றம் இல்லாமல் இருந்தேன்.

மெத்தையுடன் கூடிய படுக்கையை கலைத்து போட்டுவிட்டு, மற்றதை - நான் மெத்தையை எடுத்துவிட்ட படுக்கையை - ஒழுங்காக இருக்கும்படி செய்தேன். விளக்கை அணைத்துவிட்டு, கனமான திரைச்சீலைகள் மற்றும் மரச் சாமான்களுக்குப் பின்னால் இருளில் மறைந்து கொள்ள முடிவு செய்தேன்.

சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்துவிட்டது. எனக்கு அப்போது தெரியாவிட்டாலும், அதற்குள்ளாக லாபி, உணவகம், ஓட்டலில் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்தவர்களில் ஏறத்தாழ அனைவரையும், தாக்குதல் நடத்தியவர்கள் கொன்றுவிட்டார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளைக் கடந்து ஐந்தாவது மாடிக்கு வந்துவிட்டார்கள். என் தலைக்கு மேலே மொட்டை மாடியில் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சர்வதேசப் படையினரின் ஹெலிகாப்டர்கள் வந்து இறங்குவதைத் தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வெளியில் நடந்து செல்லும் பகுதியில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. திடீரென ஓட்டலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Image caption லிப்டுகளுக்கு அருகே, நடப்பதற்கான பகுதியின் கடைசியில், துப்பாக்கி ஏந்தியவர்கள் ஐந்தாவது மாடிக்கு நுழைந்த பகுதி.

தாக்குதல் நடத்தியவர்கள் ஐந்தாவது மாடியில் முதலில் நுழைந்தது அறை எண் 521, என்னுடைய அறைக்கு அருகில் இருந்த அறையில். இரவு முழுக்க நீடித்த முற்றுகையில் அதுதான் அவர்களுடைய செயல்பாடுகளுக்கான மையமாக இருந்தது.

என்னுடைய அறையின் கதவில் துப்பாக்கியால் சுடும் சப்தத்தைக் கேட்டேன். ``மறைந்திருப்பதற்கு அது சரியான இடம் இல்லை'' என்று நினைத்துக் கொண்டேன்.

என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, மெத்தை இன்னும் இருந்த படுக்கைக்கு கீழே தரையில் படுத்து மறைந்து கொண்டேன். இந்த ஒற்றைப் படுக்கையை எனது கைகளாலும், கால் பாதங்களாலும் பிடித்துக் கொண்டேன்.

படுக்கை 10 சென்டிமீட்டர் தூக்கியபடி இருந்ததால் சிறிதளவுக்கு என்னால் பார்க்க முடிந்தது. கதவின் மீது அவர்கள் சுட்டனர். கனமான சுத்தியலைக் கொண்டு கதவில் அடித்தனர். நான்கு பேர் என்னுடைய அறைக்குள் வந்தனர். பால்கனி கதவு திறந்திருந்ததால், ஒருவர் அங்கே ஓடினார்.

கைத் துப்பாக்கியால் சுடும் சப்தத்தைக் கேட்டேன். ஒரு முறை சுட்டார். அடுத்த சில விநாடிகளில் நானும் சாகப் போகிறேன் என்று நினைத்தேன். என்னுடைய குடும்பத்தினர், குழந்தைகளின் முகங்களையும், என் வாழ்வில் நல்ல மற்றும் கெட்ட நேரங்கள் பற்றியும் நினைத்துப் பார்த்தேன்.

கதவு திறந்தே கிடந்தது. துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருந்தார்கள். பிறகு ஐந்தாவது மாடியில் மற்ற கதவுகளை அவர்கள் திறக்கத் தொடங்கினர். நடந்து செல்லும் பாதைக்கு எதிர்புறத்தில், என்னுடன் பணியாற்றிய விமான ஊழியர் ஒருவரும், பைலட்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் கொல்லப் படுவதற்கு முன்பு, சிறிது நேரம் அவர்களது அழுகுரல்களை நான் கேட்டேன். பின்னர் நிசப்தமானது.

ஐந்தாவது மாடியில் அனைத்து கதவுகளையும் திறந்து, அங்கு பார்த்த அனைவரையும் அவர்கள் கொன்றுவிட்டார்கள் என்று நினைத்தேன். அழுகுரல்கள், துப்பாக்கி சப்தம் - ஒரேயொரு குண்டு சப்தம் - கேட்டது - அடுத்த கதவில் அவர்கள் சாய்ந்தனர்.ஏதோ விளையாட்டு போல அல்லது பெரிய ஒரு பார்ட்டியைப் போல நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் சப்தமாக சிரித்துக் கொண்டனர்.

அதிகாலை சுமார் மூன்று மணியளவில் ஐந்தாவது மாடியில் பெரிய அளவில் தீ வைத்துவிட்டு, புகை அதிகமாக இருந்ததால் அவர்கள் வெளியேறிவிட்டனர். 20 - 25 நிமிடங்களுக்கு துப்பாக்கி சப்தம் எதுவும் கேட்கவில்லை. எனவே படுக்கையின் அடியில் இருந்து வெளியே வருவது என்று நான் முடிவு செய்தேன்.

அறையில் இருந்த மற்றொரு படுக்கையின் மீது அவர்கள் சுட்டிருப்பதையும், அடியில் யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்று படுக்கையின் மரப் பலகையை தூக்கிப் பார்த்திருப்பதையும், நான் வெளியே வந்த பிறகு பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

Image caption வசிலெய்யோஸ் தங்கியிருந்த அறை எண் 522. தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளே வந்தபோது எப்படி ஒளிந்திருந்தார் என்பதை அவர் விவரிக்கிறார்.

``இன்றைக்கு இரண்டாவது முறையாக நான் உயிர்தப்பி இருக்கிறேன்'' என்று நான் நினைத்தேன்.

என்னுடைய அறைக்குள் பெருமளவு புகை வரத் தொடங்கியதும், நான் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. எனவே வெளியே பால்கனிக்கு சென்றேன். எனக்கு இடதுபுறத்தில் நெருப்பு எரிந்தது, அது அதிகமாக இருந்தது. அறைக்குள் சென்றால் நான் பிழைக்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டேன்.

மீண்டும் வந்த குண்டுகள்

மேல் தளத்தில் இருந்து சில டி.வி. கேபிள்கள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவை நேராக தரை வரை சென்றன. என்னுடைய எடையை அவை தாங்குமா, அதன் மூலமாக கீழே சறுக்கி செல்ல முடியுமா என்று பார்ப்பதற்காக இழுத்துப் பார்த்தேன். ஆனால் அப்போது எனக்கு அருகில் துப்பாக்கிக் குண்டுகள் சென்றன.ஒரு குண்டு எனது இடது தோள்பட்டையில் இருந்து 20 சென்டிமீட்டர் அருகிலும், மற்றொரு குண்டு அரை மீட்டர் அருகிலும் சென்றன. எனக்குப் பின்னால் இருந்த கண்ணாடி ஜன்னலில் இரண்டு ஓட்டைகளை அவை ஏற்படுத்தின.

மறைந்திருந்த ராணுவ வீரர் ஒருவர் இரவில் பார்க்கும் கேமரா மூலமாக, நான் அறை எண் 522ல் இருந்து வெளியே வந்ததைப் பார்த்து, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் என்று நினைத்து என்னை நோக்கி சுட்டிருக்கிறார். அவ்வளவு தொலைவில் இந்த வீரர்களின் குறி எப்போதும் தப்புவது கிடையாது. ஆனால், டி.வி. வயர்களைப் பிடிப்பதற்கு நான் உடலை நகர்த்தியதால், கண் இமைக்கும் நேரத்தில், குண்டுகள் என் மீது படாமல் போனது.

உள்ளே போய்விடுவது என்று முடிவு செய்தேன். குளியல் அறைக்கு சென்றேன் - மிக, மிக மெதுவாக, சப்தம் வராத வகையில் நகர்ந்தேன். சிறிய கத்தரி ஒன்று என்னிடம் இருந்தது. படுக்கைக்கு கீழே சென்று, அதைப் பயன்படுத்தி படுக்கையின் மரப் பலகையின் கீழே மூடியிருந்த பிளாஸ்டிக்கில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தினேன். நான் தவழ்ந்து செல்வதற்கு மட்டும் போதிய அளவுக்கு இடம் இருந்தது.

என் அறையில் இருந்த சிறிய பிரிட்ஜில் இருந்து இரண்டு பாட்டில் தண்ணீர், சிறிது பாலும், ஒரு டி-சட்டையும் எடுத்துக் கொண்டேன். டி-சட்டையை சிறிய துண்டுகளாக வெட்டி, புகையை தடுப்பதற்காக என் மூக்கில் வைத்துக் கொண்டேன். இன்னொரு துண்டு துணியை என் வாயில் வைத்து, நிறைய பால் மற்றும் தண்ணீரை அதில் ஊற்றினேன். இரட்டை பில்ட்டர் போல அதை பயன்படுத்தினேன். ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பயிற்சியின் போது இதைக் கற்றிருக்கிறேன்.

Image caption அறை எண் 520 வலதுபுறம் உள்ளது. அதற்கடுத்து 521. அடுத்து வசிலெய்யோஸ் -ன் அறை 522.

நான் படுக்கைக்குப் பின்னால் சென்றதும் அவர்கள் திரும்பி வந்தனர். ஒருவர் நான் மறைந்திருந்த படுக்கையின் மீது உட்கார்ந்து கொண்டார். அவருடைய பாதத்தை என்னால் பார்க்க முடிந்தது. அவன் தொடர்ந்து தரையில் துப்பிக் கொண்டிருந்தான். என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய குரல் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. பிறகு அவர் குளியல் அறைக்குச் சென்றார். அதன்பிறகு அவர் பால்கனிக்கு சென்று ஏ.கே.-47 துப்பாக்கியால் சில முறை சுட்டார். சுட்டு முடிந்ததும் நிசப்தம் நிலவியதால், நான் சப்தம் எதுவும் எழுப்பி ஆபத்தைத் தேடிக் கொள்ள முடியாது.

அன்றைக்கு நான் சாகப் போவதில்லை என்று என் மூளைக்கு ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டிருந்தது. வழக்கமான நேரத்துக்கு டின்னருக்கு போகாததால் நான் உயிர் தப்பினேன். அந்த ஆட்கள் முதலில் என்னுடைய அறைக்குள் வந்து, இன்னொரு படுக்கையின் மீது சுட்டபோது, நான் ஒளிந்திருந்த படுக்கை மீது சுடாத போது நான் உயிர் தப்பினேன். ராணுவ வீரரின் துப்பாக்கிக் குண்டுகள் என் மீது படாதபோது நான் உயிர் தப்பினேன். இப்போதும் கூட நான் நன்றாக ஒளிந்து கொண்டிருக்கிறேன்.

எப்படியாவது சர்வதேசப் படைகள் வந்துவிடும் என்று நினைத்தேன். அதனால் அந்த இடத்திலேயே நான் ஒளிந்திருந்தால் போதும் என்று முடிவு செய்தேன்.

ஆனால் அதிகாலையில் சர்வதேசப் படையினர் ஒரு பீரங்கியில் இருந்து என் அறையை நோக்கி சுட்டனர். அவர்களுடைய குறி எனக்கு அருகில் இருந்த அறை எண் 521 மீது இருந்தது. ஆனால் துப்பாக்கிதாரிகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும், மற்ற இடங்களில் இருந்தும் படையினர் மீது சுட்டபடி இருந்ததால், மற்ற இடங்களை நோக்கியும் ராணுவத்தினர் சுட்டனர்.

பீரங்கியில் இருந்து கனமான குண்டு விழுந்த ஒவ்வொரு முறையும் ஓட்டலே அதிர்ந்தது. அதனால் ஏற்பட்ட சேதங்களை பின்னர் நான் பார்த்தேன் - மர சாமான்கள் அனைத்தும் தூளாகிப் போயிருந்தன. கூரையில் ஓட்டைகள் விழுந்திருந்தன. இன்னும் உயிரோடிருப்பது அதிர்ஷ்டம் என்று மீண்டும் நான் நினைத்தேன்.

Image caption வசிலெய்யோஸ் தங்கியிருந்த அறைக்கு இரண்டு அறைகள் தள்ளி, அறை எண் 520 - தாக்குதலுக்குப் பிறகு.

காலை சுமார் ஆறு மணிக்கு, இரண்டாவது முறையாக அவர்கள் என் அறைக்கு வெளியில் சுடத் தொடங்கினர். என்னுடைய அலமாரியில் இருந்து அவர்கள் சில துணிகளை எடுத்த ஓசையைக் கேட்க முடிந்தது. தரை விரிப்புகளையும் எடுத்து அவற்றின் மீது நிறைய டீசல் ஊற்றினார்கள். அவர்கள் இருந்த - அறை எண் 521-ஐ எரித்தார்கள்.

எனக்கு நெருக்கத்தில் நெருப்பு எரிந்தது. அந்தப் புகை மற்றும் வெப்பத்தில் 15 - 20 நிமிடங்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றியது. அதிகபட்சம் போனால் ஒரு மணி நேரம் தாக்குபிடிக்கலாம் என்று தோன்றியது. பால்கனி வழியாக எனது அறைக்குள் அதிக குளிரான காற்றில் கிடைத்த கடைசி ஆக்சிஜன் மூலமாக நான் சுவாசித்துக் கொண்டிருந்தேன்.

மரம் அல்லது தரைவிரிப்புகள் எரியும் போது வரக் கூடிய வழக்கமான வாடை அந்தப் புகையில் இல்லை. அது கெட்ட வாடை. மனித உடல்கள் எரியும் வாடை அது.

யாரும் இருப்பதற்கான ஓசையைக் கேட்க முடியவில்லை என்பதால், வெளியே வரலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், வெளியே வர முயன்றபோது, திடீரென ஜன்னல்களை உடைக்கும் சப்தம் கேட்டது. அது அறை எண் 521-ல் இருந்து வந்தது. ஆனால் எனது அறையிலும் அந்த சப்தம் கேட்டது. எனவே வெகு வேகமாக நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டியதாயிற்று.

வெளியில் இருந்த சர்வதேசப் படையினர் அழுத்தத்துடன் கூடிய தண்ணீர் ஜெட்கள் மூலம் அறையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தனர். அதனால் ஜன்னல்களில் உதறல் ஏற்பட்டது. சீக்கிரத்தில் நெருப்பு அணைக்கப்பட்டது. ஆனால், கொடூரமான காபூல் இரவில், ஜன்னல்கள் அல்லது கதவுகள் இல்லாத அறையில், நான் குளிர்ந்த நீரால் நனைந்து போயிருந்தேன். வெளியில் வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி சென்டிகிரேடாக இருந்தது. சீக்கிரத்தில் எனக்கு ஹைப்போதெர்மியா (உடல் சூடு குறைவது) ஏற்படும் போல தெரிந்தது.

Image caption தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில், அவசர காலத்துக்கான இந்த மாடிப்படிகள் வழியாக தப்பித்துச் செல்ல வசிலெய்யோஸ் யோசித்துள்ளார் - ஆனால் அவ்வாறு செய்யாதது அதிர்ஷ்டமாகிவிட்டது.

காலை 9.25 மணிக்கு லிப்டுகளின் அருகே நடந்து செல்லும் பகுதியில் துப்பாக்கி சப்தம் கேட்டது- அது மாறுபட்டிருந்தது. எனவே சர்வதேசப் படையினராக இருக்கும் என்று நினைத்தேன். அறை எண் 521ல் இருந்து துப்பாக்கி ஏந்திய ஒருவர் கலஷ்நிகோவ் துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்.

காலை 9.30க்கும் 11.15 மணிக்கும் இடையில் சர்வதேசப் படையினர் நிறைய கையெறி குண்டுகளை வீசினர். தரையில் அவை உருண்டு ஓடும் சப்தம் எனக்குக் கேட்டது. சில சமயங்களில் அவை அறை எண் 521-ல் விழுந்தன. சில நேரம் திறந்திருந்த எனது அறையின் கதவுக்கு வெளியே வெடித்தன. விமானத்தில் பயன்படுத்தும் ஒரு பெட்டியின் மீது ஒரு கையெறி குண்டு விழுந்து பள்ளமானது. அதை நினைவுக்காக வைத்திருக்கிறேன்.

சுமார் 11.30 மணியளவில் எனக்கு அருகில் - அறை எண் 521ல் - ஒரேயொரு துப்பாக்கி ஏந்தியவர் மட்டும் இருந்தார் போல தெரிந்தது. கலஷ்நிகோவ் துப்பாக்கியில் இருந்து கைத் துப்பாக்கியை அவர் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது தெரிந்தது. துப்பாக்கிக் குண்டுகள் அவரிடம் இல்லை. வேகமாக தீ பிடிக்கச் செய்யும் கருவி மூலம் நெருப்பு வைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அதில் கேஸ் இல்லை.

Image caption தாக்குதலுக்குப் பிறகு அறை எண் 521-ன் பால்கனி

நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன். வேகமாக அட்ரீனலின் சுரந்தது. சிரித்துவிடக் கூடாது என்பதால் கையை வைத்து வாயை மூடிக் கொண்டேன். சில நிமிடங்களில் அவர் காணாமல் போய்விட்டார்.

நான் மிகவும் களைப்பாகிவிட்டேன். இவையெல்லாம் தொடங்குவதற்கு முன்பு, நேற்றிரவு நான் தாமதமாக விமானத்தை இயக்கி வந்தேன். அந்த பகல் அல்லது இரவில் நான் தூங்கவில்லை. எனவே நான் 35 அல்லது 40 மணி நேரத்துக்கும் மேலாக விழித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு வேறு சப்தங்கள் கேட்டன. என் அறையை நோக்கி சிலர் நடந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்று என்னால் பார்க்க முடியவில்லை. சுமார் 11.40 மணிக்கு ``போலீஸ்! போலீஸ்!'' என்று. யாரோ ஆப்கானிய உச்சரிப்பு பாணியில் கூப்பிட்டார்கள், அது கெட்டவர்களாக இருக்கலாம் என்று நினைத்து, வெளியில் வர வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். 10 அல்லது 20 நிமிடங்கள் கழித்து ஆங்கிலத்தில் யாரோ ``போலீஸ்!'' என்று சப்தம் போட்டார். நான் மகிழ்ச்சியாகிவிட்டேன். படுக்கையின் அடியில் இருந்து தவழ்ந்து வெளியே வந்தபடி நான் உரக்க சப்தம் போட்டேன். வெளியே வருவதற்கு கஷ்டமாக இருந்தது. சுவாசிக்க கஷ்டப்பட்டேன் -படுக்கைக்கு கீழே நீண்ட நேரம், அசையாமல் ஒரே மாதிரி இருந்ததால் மார்பில் அழுந்தி இருந்தது.

புகையால் நான் கருப்பாக இருந்தேன் என்றதால் என்னுடைய முகத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை. நான்கு கமாண்டோக்கள் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி, ``கீழே படு! கீழே படு!'' என்று சப்தம் போட்டார்கள்.

``இது ஆவியாக இருக்கும்!'' என்று ஒருவர் முணுமுணுத்தார்.

நான் குளிரில் உறைந்து போயிருந்தேன் என்றாலும் ``காம் ஏர் விமானத்தின் பைலட் நான். தயவுசெய்து சுடாதீர்கள்!'' என்று சப்தமாகக் கூறினேன்.

அங்கு பார்த்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. எத்தனை மணி நேரமாக அங்கே இருந்தேன் என்று அவர்கள் கேட்டார்கள். தாக்குதல் தொடங்கியதில் இருந்தே அங்கிருந்ததைக் கூறினேன். படுக்கையைப் பார்த்த அவர்கள், எப்படி உயிர் தப்பினீர்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.

``ஓ.கே. நான் உங்களை கீழே கொண்டு செல்கிறேன். ஆனால் சொல்வதைக் கேளுங்கள். செல்வதற்கு முன்பு உங்களுடன் நான் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று அவர்களில் ஒருவர் கூறினார். அந்தத் தருணத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு, ஒரு போட்டோ வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்தேன்.

Image caption உடல் சூட்டை அதிகரித்துக் கொள்வதற்கு வசிலெய்யோஸ் -க்கு பேட்டரியால் இயங்கும் போர்வை தரப்பட்டது.

அந்த ஓட்டலில் இருந்து நான் தான் கடைசியாக வெளியே வந்தேன். உயிர்பிழைத்த அனைவரையும் காபூலில் இருந்த பிரிட்டிஷ் தளத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றார்கள். என்னுடைய சகா மைக்கேலை அங்கு பார்த்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதை என்னால் நம்பவே முடியவில்லை. அழுவதா அல்லது சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் கலந்த உணர்வுகளாக இருந்தது. பல நண்பர்களை - எங்களுடன் பணியாற்றிய பலரை - பைலட்கள், பணியாளர்கள், பொறியாளர்களை - நாங்கள் இழந்துவிட்டோம்.

ஓட்டலில் உயிர்தப்பிய அனைவரையும் மீட்டுவிட்டதாகவும், என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் என் குடும்பத்தினருக்கு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். எனவே நான் உயிர் பிழைக்கவில்லை என்று என் குடும்பத்தினர் நினைத்திருந்தனர். மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து அவர்களை நான் தொடர்பு கொண்டு, நலமாக இருப்பதாகக் கூறியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

Image caption தாக்குதல் நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓட்டலின் சில பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

நான் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவன். ஆனால் இப்போதெல்லாம் அது இன்னும் அதிகமாகிவிட்டது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நான் அனுபவிக்கிறேன், எனக்கு கிடைத்திருக்கும் விஷயங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். வாழ்க்கை ஒரு புதையலைப் போன்றது. அது இருக்கும் வரையில் நாம் அனுபவிக்க வேண்டும்.

கிரிஸ் நாட்டு கடற்கரையில் அமர்ந்து கொண்டு, பணப் பிரச்சினை என்றும், சில சவுகரியங்கள் இல்லை என்றும் பலர் புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ``வாருங்கள்! உங்களுடைய வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் அனுபவியுங்கள். கடற்கரையில் நீங்கள் மீன்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், மது அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். நாம் சுதந்திரமாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், சிரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு இதுதான் தேவை'' என்று சொல்லும் ரகம் நான்.

வேலையில், அழுத்தம் மிகுந்த விஷயங்களில், வாழ்க்கையில் கெட்ட தருணங்களைப் பற்றி கவனம் செலுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக நல்ல தருணங்களை உருவாக்குவது பற்றியும், நல்லவர்களுடன் இருப்பது பற்றியும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வாழ்க்கை மிகவும் அழகானது.

காபூல் சம்பவத்துக்குப் பிறகு - வாழ்க்கை மிகவும் அழகாகிவிட்டது என்று உண்மையில் நான் உணர்கிறேன். என்னை நம்புங்கள், ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவிக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :