"வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவருக்கு பாதிப்பு வந்தால் பதிலடி தருவோம்": அமெரிக்கா

ஜான் போல்டன் படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜான் போல்டன்.

வெனிசுவேலா நாட்டில் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோவுக்கோ, அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அச்சுறுத்தல் சட்டத்தின் ஆட்சி மீதான மோசமான தாக்குதலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவும், வேறு 20 நாடுகளும் குவைடோ-வை இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே புதன்கிழமையும், சனிக்கிழமையும் அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் குவைடோ.

அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டிவரும் நிலையில், வெனிசுவேலாவில் அரசியல் அரசியல் சிக்கல் கொதிநிலையை அடைந்துள்ளது.

எண்ணெய் வளம் மிக்க தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவின் புகழ்பெற்ற அதிபர் ஹ்யூகோ சாவேஸ் 2013ல் இறந்தார். உடனே அடுத்த அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார். கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, இம்மாதத் தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார் மதுரோ. மே மாதம் நடந்த தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்தது. வாக்களிப்பு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

என்ன நடக்கிறது இப்பொழுது?

அமெரிக்காவுக்கான வெனிசுவேலாவின் ராணுவப் பிரதிநிதி கர்னல் ஜோஸ் லூயிஸ் சில்வா மதுரோ தரப்பில் இருந்து குவைடோ தரப்புக்குத் தாவினார். குவைடோவை அதிபராக ஏற்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் டிவிட்டர் மூலம் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார் போல்டன். புதன்கிழமை இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் குவைடோ.

இதனிடையே எட்டு நாள்களுக்குள் மறு தேர்தலுக்கான அறிவிப்பு வராவிட்டால், குவைடோவை அதிபராக ஏற்கப்போவதாக ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன.

ஆனால், இந்த அழைப்பை நிராகரித்த மதுரோ, அந்த நாடுகள் தாங்கள் விதித்த காலக்கெடுவை திரும்பப் பெறவேண்டும் என்று கூறினார். "வெனிசுவேலா ஐரோப்போவுடன் இணைக்கப்படவில்லை. இது (இந்த நாடுகளின் நடத்தை) மரியாதை குறைவானது" என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ சி.என்.என். துருக்கி சேவையிடம் தெரிவித்தார்

தாம் அதிபராக இருப்பதை எதிர்ப்பவர்களிடம் விரிவாகப் பேசத் தயாராக இருப்பதாக கூறிய மதுரோ, டொனால்டு டிரம்புக்கு பல தகவல்களை அனுப்பியதாகவும், ஆனால் அவர் தங்களை வெறுப்பதைப் போல இருக்கிறது என்றும் கூறினார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மதுரோ

பிறகு வெனிசுவேலாவின் மத்தியப் பகுதியில் உள்ள கரபோபோ மாநிலத்தில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரோ, குவைடோ செய்தது ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி என்று கூறியதுடன், அதை வெல்ல தற்போது "ஒற்றுமை, ஒழுங்கு, இணக்கம்" தேவை என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Google

குவைடோவை அமெரிக்கா அங்கீகரித்ததை தொடர்ந்து அமெரிக்காவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக மதுரோ வியாழக்கிழமை அறிவித்தார். அத்துடன் 72 மணி நேரத்தில் அமெரிக்கத் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த காலக்கெடு சனிக்கிழமை முடிவடைய இருந்த நிலையில், வெனிசுவேலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும், 30 நாள்களில் இரு தரப்பும் ஒன்று மற்றொன்றின் நாட்டில் பரஸ்பரம் "நல அலுவலகங்களை" அமைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

முறையான தூதரக உறவு இல்லாத நாடுகள், ஒரு அடிப்படையான தொடர்புக்கான புள்ளி வேண்டும் என்று நினைத்தால், ஒன்று மற்றொன்றின் நாட்டில் தங்கள் நலன்களைப் பாதுகாக்க இத்தகைய நல அலுவலகங்களை அமைத்துக்கொள்ளும்.

ஆனால், தங்கள் நாட்டின் தூதர்கள் வெளியேற வேண்டும் என்று கூறும் உரிமை மதுரோவுக்கு இல்லை என்று அமெரிக்க முன்னதாக கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்