வடகொரியா அணுகரு செறிவூட்டல் மையங்களை மூட உறுதியளித்தது: சொல்கிறது அமெரிக்கா

அணு திட்டங்களை கைவிட வட கொரிய அளித்த உறுதியை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஸ்டீபன் பீகன் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அணு திட்டங்களை கைவிட வட கொரிய அளித்த உறுதியை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஸ்டீபன் பீகன் தெரிவித்தார்.

அணுக்கரு செறிவூட்டும் மையங்கள் அனைத்தையும் அழித்துவிட வட கொரியா உறுதி அளித்ததாக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீபன் பீகன் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ வடகொரியா சென்றபோது இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தனது அணு மையங்களை வட கொரியா அழிப்பதற்கு பிரதிபலனாக அமெரிக்கா வழங்கும் "தொடர்புடைய நடவடிக்கைகளை" பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால், எந்த ஒரு ஒப்பந்தமும் போடுவதற்கு முன்னால், அணு சொத்துகள் அனைத்தின் முழுப்பட்டியலை அமெரிக்கா வழங்கவேண்டும்.

அமெரிக்காவும், வட கொரியாவும் "மிக பெரிய முன்னேற்றம்" கண்டிருப்பதாக முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் பேசுகையில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் உடன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உச்சி மாநாட்டுக்கான தேதியையும், இடத்தையும் விரைவில் அறிவிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

படத்தின் காப்புரிமை KCNA
Image caption தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனைகளை 2017ம் ஆண்டு வட கொரியா பலமுறை நடத்தியது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபருக்கும், வட கொரிய தலைவருக்கும் இடையில் முதல் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.

கலிபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், தென் கொரியாவுக்கும், அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவுக்கும் வட கொரியா இது பற்றி உறுதி அளித்துள்ளதாக பீகன் கூறினார்.

ஆனால், வட கொரியாவின் அணு திட்டத்தில் "நிபுணர்களின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை" அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் தயாராக இருக்கிறார். வட கொரியாவை நாம் ஆக்கிரமிக்க போவதில்லை. அங்கு நடைபெறும் ஆட்சியை கவிழ்க்க எண்ணவில்லை" என்று பீகன் கூறியுள்ளார்.

வட கொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு முழுமையடையும் வரை அமெரிக்கா அதன் மீதான தடைகளை அகற்ற போவதில்லை என்பதை வலியுறுத்திய அவர், ராஜீய முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்தால், அதனை எதிர்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கா வைத்துள்ளது என கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வட கொரி தலைவர் கிம் ஜாங்-உன்னும், தென் கொரிய அதிபர் முன் ஜியே-இன்னும் பலமுறை சந்தித்துள்ளனர்.

பிப்ரவரி 3ம் தேதி வட கொரிய சிறப்பு தூதரை பீகன் தென் கொரியாவில் சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து வரும் அமெரிக்க தடைகள் பற்றியும், தங்களின் உறவில் மெதுவாக மாற்றங்கள் ஏற்படுவது பற்றியும் வட கொரியா புகார் அளித்திருந்தது.

1953ம் ஆண்டு போர் நிறுத்தத்தோடு முடிவுக்கு வந்த கொரிய போருக்கு முறையான முடிவை கோரி, கடந்த ஆண்டு கிம் ஜாங்-உன் தென் கொரியாவோடு உறவுகளை மேம்படுத்தியுள்ளார்.

2018 பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்சில் வட மற்றும் தென் கொரிய விளையாட்டு அணிகள் ஒரு கொடியின் கீழ் அணிவகுத்து சென்றன. செல்லப் பிராணிகளை விரும்பும் அதிபர் முன் ஜே-இன் கிம் ஜாங்-உன் நாய் குட்டிகளையும் அமைதி பரிசாக அனுப்பினார்.

ஆனாலும், கொரிய தீபகற்பத்திலும் அமெரிக்காவிலும் இன்னும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் சமர்ப்பித்த உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், வட கொரியா அதன் ஆயுத திட்டங்களை கைவிட விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்ததைப் போல, இரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும் அது கூறியிருந்தது,

இதற்குத் தான் உளவுத்துறையினர் "மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்" என்று டிரம்ப் ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

வியாழக்கிழமை வெளியான இன்னொரு ட்விட்டர் பதிவு, செனட் அவையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை "ஊடகங்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :