டிரம்ப் - கிம்: வியட்நாமில் சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு

விரைவில் கிம்மை வியட்நாமில் சந்திக்கவுள்ளேன்: டிரம்ப் அறிவிப்பு படத்தின் காப்புரிமை AFP

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் இந்த மாதத்தில் இரண்டாவது அணுஆயுத மாநாடு நடத்தவுள்ளதாக தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

''மகத்துவத்தை தேர்வு செய்தல்'' (Choosing Greatness) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் பேசிய டிரம்ப், எல்லை சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தி பேசினார்.

இதற்கிடையே இது குறித்த ஒரு மறுதலிப்பில் அமெரிக்காவின் மதிப்புகள் மற்றும் மாண்புகளை டிரம்ப் கைவிடுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் நடந்த மிக நீண்ட அரசாங்க பணிநிறுத்தத்தை தொடர்ந்து டிரம்ப்பின் இந்த முதன்மையான பேச்சு வெளிவந்துள்ளது.

வியட்நாமில் வரும் பிப்ரவரி 27-28 தேதிகளில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''நான் மட்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கபட்டிருக்காவிட்டால் இந்நேரம் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மிகப் பெரிய போர் உருவாகியிருக்கும்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

''அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகள் மேம்பாடில் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். ஆனால், கிம் ஜாங்-உன்னுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது'' என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு இந்த இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த வரலாற்று புகழ்மிக்க சந்திப்புக்கு பிறகு இவர்களுக்கு இடையே இரண்டாவது உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில்தான் முதல்முறையாக பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபரும், வட கொரிய அதிபரும் சிங்கப்பூரில் சந்தித்தனர்.

முன்னதாக, மெக்சிகோ எல்லைசுவருக்கான நிதி காங்கிரஸால் மறுக்கப்பட்டதையடுத்து அமெரிக்காவில் நீண்ட நாட்களுக்கு பகுதி அளவு அரசாங்க முடக்கத்தை மேற்கொண்டார் டிரம்ப். இது ஏறத்தாழ ஒரு மாதகால அளவுக்கு நீடித்தது.

ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அடுத்து அந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது. அந்த தற்காலிக ஒப்பந்தமானது வரும் பிப்ரவரி 15ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.

தனது கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் தேசிய அவசர நிலையையோ அல்லது மற்றொரு அரசு முடக்கத்தையோ மேற்கொள்வேன் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :