ஆசியா பீபி: பாகிஸ்தானில் மதத்தையும் கடவுளையும் பழித்தால் இதுதான் நடக்கும்

ஆசியா பீபி

ஆசியா பீபி வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு, கோபமாக இருந்த கும்பலால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தன்னுடைய செந்த கிராமத்துக்கு ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாது.

தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பத்தாண்டுகளுக்கும் மேல் துன்பங்களை அனுபவித்த பிறகு, கடைசியில் விடுதலை ஆகியிருக்கிறார்.

அத்தியாயம் 1: ஆசியா பீபி

கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் வீட்டில் இருந்து புறப்பட்டு ஆசியா பீபி வயலை நோக்கிச் சென்றார்.

லாகூரில் இருந்து தென்கிழக்காக 40 மைல் தொலைவில் உள்ள இட்டன்வாலா கிராமம் பசுமையான வயல்கள், பழத் தோட்டங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. பஞ்சாபில் மிகவும் செழிப்பான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

அந்தக் கிராமத்திலுள்ள பல பெண்களைப்போல, ஆசியா பீபிவும் விவசாயக் கூலி வேலை செய்கிறார். அந்த ஜூன் மாதத்தில் பெண்கள் பழங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் உழைத்துவிட்டு, தாகம் ஏற்பட்டு, களைத்த பெண்கள், சிறிது ஓய்வுக்காக வேலையை நிறுத்தியிருந்தனர்.

அருகில் உள்ள கிணற்றில் இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வருமாறு ஆசியாவை கேட்டுக் கொண்டனர்.

ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு அவர் சென்றார். ஆனால், திரும்பி வந்தபோது, உடன் வேலை பார்த்த மற்ற இஸ்லாமிய தொழிலாளிகளுக்குத் தருவதற்கு முன்பு அவர் சிறிது தண்ணீர் குடித்திருக்கிறார். இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

ஆசியா ஒரு கிறிஸ்தவர். பாகிஸ்தானில், அடிப்படைவாத நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்கள் மற்ற மத நம்பிக்கையாளர்களுடன் உணவு உண்பதையோ தண்ணீர் குடிப்பதையோ விரும்புவதில்லை. இஸ்லாமியர் அல்லாதவர்கள் தூய்மையற்றவர்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

பீபி ''சுத்தமற்றவர்'' என்று இஸ்லாமிய சக தொழிலாளர்கள் கூறினர். தாங்கள் பயன்படுத்தும் கோப்பையில் தண்ணீர் குடிக்கத் தகுதி இல்லாதவர் என்று குறிப்பிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் கடுமையான வார்த்தைகள் பரிமாறப்பட்டன.

Image caption ஆசியா பீபி தண்ணீர் எடுத்த நீர் தொட்டி

ஐந்து நாட்கள் கழித்து, ஆசியாவின் வீட்டுக்குள் திடீரென நுழைந்த காவல் துறையினர், முகமது நபிகளை அவமதிப்பு செய்ததாகக் குற்றஞ்சாட்டினர்.

மத எதிர்ப்புக் கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டிய அந்தக் கிராமத்து மதகுரு உள்ளிட்டோரை உள்ளடக்கிய பெரும் கூட்டம் வீட்டுக்கு வெளியே இருந்தது. ஆசியா பீபி வெளியே இழுத்து வரப்பட்டார்.

காவல் துறையினரின் கண்ணெதிரே கூட்டத்தினர் ஆக்ரோஷமாக அவரை அடித்தனர். அவர் கைது செய்யப்பட்டு, மத்திற்கு எதிராக நிந்தனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

தாம் ஓர் அப்பாவி என்று விசாரணையில் ஆசியா பீபி தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளை அவர் தனிமைச் சிறையில் கழித்துள்ளார்.

பாகிஸ்தானில், இஸ்லாமுக்கு எதிராக மற்றும் நபிகளுக்கு எதிராகப் பேசினால் அதற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை என்பதுதான் நியதியாக இருக்கிறது.

ஆனால், தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அடிக்கடி இந்தக் குற்றச்சாட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

மதத்திற்கு எதிரான பிரசாரம் செய்ததாக ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தவுடன், அந்த வழக்கு விசாரணைக்குச் செல்வதற்கு முன்னதாக, அவரும் அவருடைய குடும்பத்தினரும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு ஆசியாவின் கணவர் ஆசிக்கை ரகசிய இடத்தில் நான் சந்தித்தேன். ஆசியா கைது செய்யப்பட்ட பிறகு, ஆசிக்கும், அவருடைய பிள்ளைகளும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தனர்.

``நேசத்துக்குரிய ஒருவர் இறந்துவிட்டால், சில காலத்தில் மனம் ஆறுதல் அடைந்துவிடும். ஆனால், தாய் உயிரோடு இருந்து, பிள்ளைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தால், ஆசியா எங்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட விதம்போல இருந்தால், துயருக்கு முடிவே கிடையாது,'' என்று ஆசிக் கூறினார்.

கூரையிட்ட வராண்டாவில் அமர்ந்திருந்த ஆசிக்கின் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. இருந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்தார்.

``எப்போதும் பயத்திலேயே நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எப்போதும் பதற்றமும், பாதுகாப்பில்லாத உணர்வுகளும் உள்ளன. பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு மட்டும் அனுப்புகிறேன் - அவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அனுமதி இல்லை. எங்கள் சுதந்திரத்தை நாங்கள் இழந்துவிட்டோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பில்லாத மற்றும் நிச்சயமற்ற நிலையில் பல ஆண்டுகளைக் கழித்துள்ளபோதிலும், ஆசியாவை ஒருபோதும் ஆசிக் விட்டுக் கொடுத்துவிடவில்லை.

``எனது சுதந்திரம், வாழ்வாதாரம் மற்றும் வீட்டை நான் இழந்துவிட்டேன். ஆனால் நம்பிக்கையை கைவிட நான் தயாராக இல்லை. ஆசியாவின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவேன்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிறகு கடந்த ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி, ஆசியா கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழித்து, ஆசிக்கின் பிராத்தனைகளுக்கு கடைசியாக பலன் கிடைத்தது.

ஆயிரக்கணக்கான அடிப்படைவாத இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக, போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி முந்தைய தீர்ப்பை ரத்து செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், ஆசியா பீபியை விடுதலை செய்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பால் கோபம் அடைந்தவர்கள், சில மணிநேரத்தில் தெருக்களுக்கு வந்து போராடினர். அவர்களின் ஒரே கோரிக்கை ஆசியா பீபிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதே.

அத்தியாயம் 2: எதிர்வினை

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அரசு தங்களின் கோரிக்கைக்குப் பணிய வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்த போராட்டக்காரர்கள் முயற்சி செய்தனர்.

பிரதானச் சாலைகள் அடைக்கப்பட்டன. கார்களும், பேருந்துகளும் எரிக்கப்பட்டன. சுங்கச்சாவடிகள் சூறையாடப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

குறிப்பாக, கிழக்கிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில், பல அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் மூடப்படும் நிலை ஏற்பட்டு, பயணம் செல்வதே சிரமம் ஆகிவிட்டது.

அரசு என்ற ஒன்று இருக்கிறதா எனற கேள்வி எழும் அளவுக்கு, வன்முறைகள் நிகழ்ந்ததை நாட்டு மக்கள் பார்த்தனர்.

முதலில் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக ஆற்றிய உரையில், '' அரசாங்கத்துடன் மோத வேண்டாம்,'' என்று போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், கொந்தளிப்புகள் மூன்று நாட்களாக நீடித்ததை அடுத்து, ரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, போராட்டக்காரர்களுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்தது.

ஆசியாவின் விடுதலைக்குப் பிறகு, காதிம் ஹுசேன் ரிஸ்வியும் அவருடைய மதம் சார்ந்த அரசியல் கட்சியான தெஹ்ரிக்-இ-லப்பாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சியும், அமைதியை சீர்குலைக்கவும் வன்முறைக்கும் சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர்.

ஆசியாவை விடுதலை செய்த நீதிபதிகள் கொல்லப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். ராணுவப் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், ராணுவத் தளபதி மதத்திற்கு எதிரானவர், அவர் இஸ்லாத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறினர்.

தங்களுடைய கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களின் ஆதரவை அவர்கள் திரட்டினர். சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூகத்தில் அனைத்துத் தரப்புகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் வந்து போராடும் நிலையை ஏற்படுத்தினர்.

மதகுரு அரசியல்வாதியான கதை

உச்ச நீதிமன்றத்தின் முடிவு வெளியான அந்த நாளில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் 53 வயதான மதகுரு ரிஸ்வி என்பவர், ஆசியாவின் விடுதலையானது நீதிக்கு எதிரானது என்றும், வெறுப்பு பேச்சுகளை தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது என்றும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார்.

Image caption பணம் கிடைக்கும் என்பதற்காகவும், மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கிடைக்கும் என்பதற்காகவும், வேண்டுமென்றே சிலர் மதத்திற்கு எதிராக பேசுகின்றனர் - மதகுரு ரிஸ்வி

மேற்கத்திய நாடுகள் இஸ்லாமுக்கு எதிராகவும், நபிகள் நாயகத்துக்கு எதிராகவும் மதத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதை ஊக்குவிக்கின்றன என்று ரிஸ்வி குற்றஞ்சாட்டினார்.

பணம் கிடைக்கும் என்பதற்காகவும், மேற்கத்திய நாடுகளில் புகலிடம் கிடைக்கும் என்பதற்காகவும், வேண்டுமென்றே சிலர் மதத்திற்கு எதிராக பேசுகின்றனர் என்று அவர் ட்வீட் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஸ்வி, உள்ளூரில் சிறிய மசூதியில் மத குருவாக இருந்தார். அவர் அரசு ஊழியராக, கடைநிலை அளவில் இருந்தார். ஆனாலும் சர்ச்சைக்குரிய சமய உரைகளால் அவர் பெரிதும் அறியப்பட்டிருந்தார்.

மதப் பிரசாரம் செய்யும்போது, சல்மான் டஸீர் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்திப் பேசுவார்.

ஆசியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, மதத்திற்கு எதிரான சட்டங்களை திருத்த வேண்டும் என்று குரல் கொடுத்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் டஸீர்.

Image caption ஆளுநர் சல்மான் டசீரை சந்தித்தபோது, அசியா பீபியின் கைநாட்டை வாங்கும் காவல்துறை அதிகாரி

பஞ்சாபின் ஆளுநராக இருந்த டஸீர், 2010 ஆம் ஆண்டு ஷேக்புரா சிறையில் ஆசியா பீபியை சந்தித்துள்ளார்.

முகத்திரையிட்டு அருகில் ஆசியா அமர்ந்திருக்க, தொலைக்காட்சி மூலம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டஸீர், அந்தப் பெண்மணிக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த சில வாரங்களில், ஜனவரியில் குளிரான ஒரு நாளில், பட்டப்பகலில், தன்னுடைய மெய்க்காப்பாளரால் டஸீல் படுகொலை செய்யப்பட்டார்.

பரபரப்பாக இருக்கும் இஸ்லாமாபாத்தின் கோஷாரா சந்தையில், 26 வயதான போலீஸ் கமாண்டோ மாலிக் மும்தாஜ் ஹுசேன் காத்ரி, அருகில் இருந்து ஆளுநர் மீது 27 முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

Image caption பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் முஜ்தாஜ் ஹூசேன் காத்ரி (இடது) “இறைதூதர் முகமதுவின் கௌரவத்திற்காக எங்களது உயிரை தியாகம் செய்யவும் தயார்” என்று கத்துகிறார்.

ஒரே நாளில் லட்சக் கணக்கானவர்களின் ஹீரோவாக ஆகிவிட்டார் காத்ரி. அதிகாரிகளிடம் சரண் அடைந்த காத்ரி, டஸீரை கொன்றதற்காக தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அது தனது மதக் கடமை என்றும் கூறினார்.

''மதத்திற்கு எதிராக பேசுவதற்கான தண்டனை மரணம்தான்,'' என்று காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, நடைமுறைகளை விரைவுபடுத்தி சில நாட்களில் அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காத்ரியின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி ரோஜா மலர்களைத் தூவினர்.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2016ல் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Image caption 2016ல் நடைபெற்ற மும்தாஜ் ஹுசேன் காத்ரியின் இறுதிச்சடங்கு

காத்ரியை தியாகி என்று பாராட்டி மத விளக்க உரையாற்றியதற்காக மதகுரு பணியில் இருந்து ரிஸ்வி நீக்கப்பட்டார். அவர் அரசியலில் நுழைந்து TLP கட்சியைத் தொடங்கினார்.

கட்சி தொடங்கிய சில மாதங்களில் ரிஸ்வியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலைகளை அடைத்து, தலைநகர் இஸ்லாமாபாத் நகரை 20 நாட்கள் முடக்கிவிட்டனர். திருத்தப்பட்ட தேர்தல் உறுதிமொழியில் முகமது நபியின் குறிப்புகள் விடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டு, அரசு மத விரோத செயலில் ஈடுபட்டுள்ளது என்று ரிஸ்வி குற்றஞ்சாட்டினார்.

பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், முகமது நபியின் மாண்பை காப்பவர்கள் என்று கூறிக்கொண்ட, இந்த சிறிய கட்சி 20 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

காத்ரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, உன்னத நோக்கத்துக்காக தியாகம் செய்தவர் என்று கூறி, அவர்கள் பிரசாரம் செய்தனர்.

Image caption காதிம் ஹூசேன் ரிஸ்வி (நடுவில்)

பாகிஸ்தான் முழுக்க TLP நடத்திய மூன்று நாள் போராட்டங்களை அடுத்து அரசு பணிந்தது. ஆசியாவின் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை எதிர்ப்பது இல்லை என்று அரசு ஒப்புக்கொண்டது. ஆசியா நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதித்தது.

மனு தாக்கல் செய்யப்பட்டது, பெருங்கூட்டம் கலைந்துவிட்டது, ஆசியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார், ஆனால் தடுப்புக் காவலில் கொண்டு செல்லப்பட்டார்.

ஆசியா கடைசியாக விடுதலை பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆயின.

அத்தியாயம் 3: பெருங்கூட்டத்தின் நீதி

கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் முகமது நபிகளுக்கு எதிராகப் பேசினால் மரண தண்டனை விதிக்கப் படுகிறது. ஆனால், ஒருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

முகமது நபிக்கு எதிராகப் பேசியது அல்லது குரானை அவமதித்தது போன்ற மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 1,549 வழக்குகள் உள்ளன என்று பாகிஸ்தான் சமூகநீதி மையம் தெரிவிக்கிறது.

அவற்றில், குற்றஞ்சாட்டப்பட்ட 75 பேர் விசாரணைக்கு முன்னதாகவே கொலை செய்யப்பட்டுள்ளனர். பலரும் காவல் துறையினரின் பாதுகாப்பில் அல்லது கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்.

Image caption ஷாஹ்ஜத் மற்றும் ஷாமா மஸீஹ் மறைந்திருந்த அறை

அவற்றில் ஒரு சம்பவம் லாகூர் நகரில் இருந்து தெற்கில் 30 மைல் தொலைவில் உள்ள கோட் ராதா-கிஷன், இரண்டு இந்துக் கடவுள்களின் பெயரில் அமைந்துள்ள சிறிய கிராமத்தில் நிகழ்ந்தது.

சுற்றுப் பகுதிகளில் பசுமையான வயல்வெளிகள். ஆனால் எல்லா திசைகளிலும் அல்லது அரை மைலுக்கு ஓர் இடத்தில் செங்கல் சூளைகளின் உயரமான புகைபோக்கிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், நூற்றுக்கணக்கான செங்கற்கள் வரிசைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஷாஹ்ஜத் மற்றும் ஷாமா மஸீஹ் என்ற கிறிஸ்தவ தம்பதியினர் 2014ஆம் ஆண்டு இவற்றில் ஒரு செங்கல் சூளையில் உயிருடன் வைத்து கொளுத்தப்பட்டனர்.

அந்தக் கொலைகளுக்குக் காரணமான நிகழ்வுகளை உள்ளூர் பத்திரிகையாளர் ரானா காலித் நினைவுபடுத்திக் கூறினார்.

''தம்பதியினர் இந்த அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தனர்,'' என்று செங்கல் சூளைக்கு அருகில் உள்ள சேறு மற்றும் செங்கல் கட்டடம் ஒன்றைக் காட்டினார். ''பெரும் கூட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுவதாக அப்படி வைக்கப்பட்டனர்,'' என்றார்.

ஆனால், உள்ளூர் மதகுருவின் தலைமையில் வந்த கூட்டத்தினர் மிகவும் கோபமடைந்து, சிலர் கூரையின் மீது ஏறியதாக காலித் விவரிக்கிறார். கூரை வழியாக உள்ளே இறங்கி, தம்பதியினரை அவர்கள் வெளியே இழுத்து வந்தனர்.

''கட்டைகளாலும், செங்கற்களாலும் அவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களை செங்கல் சூளைக்கு இழுத்துச் சென்று உள்ளே வீசிவிட்டனர்,'' என்று அவர் தெரிவித்தார். ஷாமா நான்கு மாத கர்ப்பமாக இருந்தார்.

அந்தச் சம்பவம் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக, சில குப்பைகளுடன் சேர்த்து குரானின் பல பக்கங்களை இருவரும் எரித்துவிட்டனர் என்று அந்த கும்பல் நம்பியிருந்தது.

ஷாஹ்ஜத்தின் குடும்பத்தினர் இப்போதும் இதை மறுக்கின்றனர். தங்கள் தந்தையின் பழைய ஆவணங்கள் சிலவற்றை தம்பதியினர் எரித்ததாகக் கூறுகின்றனர்.

ஷாமா மற்றும் ஷாஹ்ஜத் கொலைக்காக, உள்ளூர் மதகுரு உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வன்முறையைத் தூண்டியதாக எட்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டின் சர்ச்சைக்குரிய சட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல. பாகிஸ்தானின் அஹமதி முஸ்லிம்கள் மீது வழக்கு தொடர்வதற்கும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மக்கள் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினராக அரசால் கருதப்படுகின்றனர். சட்டப்படி, அஹமதி மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவோ அல்லது குர்-ஆனில் உள்ளவற்றைக் கூறவோ அல்லது எந்த வகையிலும் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்தவோ முடியாது.

Image caption அஹமதிய இனத்தைச் சேர்ந்த விவசாயி அஸ்லம் ஜமீத்

அஹமதிய இனத்தைச் சேர்ந்த விவசாயி அஸ்லம் ஜமீத் (உண்மையான பெயர் அல்ல), 2009ல் பஞ்சாபில் தெற்குப் பகுதியில் தன்னுடைய கோதுமை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் கிராமத்தினரில் ஒரு தம்பதியினர் அவரை நாடிச் சென்றனர். ஓடிவிடுமாறு அவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

முகமது நபியை அவமதித்துவிட்டார் என்று அஸ்லம் மீது உள்ளூர் இமாம் குற்றஞ்சாட்டியுள்ளதால், அவரை கும்பல் ஒன்று தேடி வந்து கொண்டிருந்தது.

''இறைவன் என்னை மன்னிக்க வேண்டும், இறைதூதரின் பெயரை கழிவறையில் எழுதுமாறு நான்கு அஹமதி சிறுவர்களை நான் தூண்டினேன் என்று மதகுரு புகார் கூறியுள்ளார்,'' என்று கண்ணீருடன், துக்கம் தொண்டையை அடைக்க அஸ்லம் தெரிவித்தார்.

அஸ்லம் இரவு வரையில் காத்திருந்துவிட்டு, பின்வாசல் வழியாக வெளியே ஓடியிருக்கிறார். அதிக தூரம் சென்றுவிடவில்லை. அப்படி ஓடி ஒளிவது பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும் என்று அவர் உணர்ந்தார். அப்படி இருந்தாலும் எங்கே ஓடுவது?

மறுநாள் காலை உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

அவருடைய வழக்கு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. அவர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.

''நீதிபதிக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்கள்,'' என்று சிவந்த முகத்துடன் கூறினார் அஸ்லம். ``நீதிமன்ற அரங்கம் முழுக்க மதகுருக்கள் இருந்தனர். ஆனால் அவர் (நீதிபதி) மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினார்.''

சாட்சியங்கள் இல்லை என்று கூறி அஸ்லம் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் வீட்டுக்குத் திரும்பியபோது, வீடு கொள்ளையடிக்கப் பட்டிருந்தது, கால்நடைகள் திருடப் பட்டிருந்தன. நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும் என்று அவர் அறிந்து கொண்டார். கனடாவில் அவர் புகலிடம் கோரினார்.

''என் குடும்பத்தினரை அச்சுறுத்தி, துன்புறுத்தினார்கள், என் வாழ்வும், வாழ்வாதாரமும் சிதைக்கப்பட்டு விட்டது. எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற வேண்டியதாயிற்று,'' என்று அவர் தெரிவித்தார்.

Image caption அஹமதியரான ஷகில் வாஜித்

மத விரோத குற்றச்சாட்டுக்கு ஆளாகி, விசாரணைக்கு உட்படுபவர்களுக்கு அந்த பிம்பம் நீதிமன்ற அறையில் இருந்து சிறைச்சாலைகள் வரை தொடர்கிறது.

விசாரணைகளின் போது பெருங்கூட்டம் கூடுவதாக மற்றொரு அஹமதியரான ஷகில் வாஜித் (அவருடைய உண்மையான பெயர் அல்ல) தெரிவித்தார்.

''விசாரணைகளின்போது பெருமளவில் கூடும் மதத் தீவிரவாதிகளிடம் இருந்து கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் (உயர் நீதிமன்றங்களைவிட) அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்,'' என்று ஷகில் விவரிக்கிறார்.

''நீதிபதிகளுக்கு சரியான பாதுகாப்பு கிடையாது. எனவே தங்களுடைய உயிரைப் பற்றியும் அவர்கள் கவலைப்பட வேண்டியுள்ளது,'' என்றும் குறிப்பிட்டார்.

மத விரோத செயல்களில் ஈடுபட்டார் என்று கூறி, பஞ்சாபில் அதிக பாதுகாப்புள்ள மூன்று வெவ்வேறு சிறைகளில் ஷகில் மூன்று ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.

மதத்திற்கு விரோதமாக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்கள் எப்படி தனியாக வைக்கப்படுகிறார்கள் என்று அவர் விவரிக்கிறார்.

அதிக பாதுகாப்பு உள்ள பகுதிகளில், பெரும்பாலும் மனநிலை சரியில்லாத மற்ற சிறைவாசிகளுடன் வைக்கப் படுகிறார்கள். பெரும்பாலான நேரம் சிறையில் அறைகளில் அவர்கள் பூட்டி வைக்கப்படுகிறார்கள்.

சிறையில் மற்றவர்கள் அவர்களுக்கு விஷம் வைத்துவிடலாம் என்று கருதி, பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற சிறைவாசிகளுடன் சேர்ந்து சாப்பிடுவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

''ராவல்பிண்டியில் என்னுடன் சிறையில் இருந்தவர்களில் ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியர். ''சொர்க்கம்'' மற்றும் ''நரகம்'' பற்றி அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு மாணவர், அவருக்கு எதிராக மத விரோத குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறார்,'' என்று ஷகில் தெரிவித்தார்.

தனக்கு மீண்டும் விடுதலை கிடைத்திருப்பது, மிகவும் அதிர்ஷ்டமான விஷயம் என்று ஷகில் நம்புகிறார். ஆனால், விடுதலையைக் காட்டிலும், குற்றச்சாட்டில் இருந்து தன் பெயரை நீக்கிக் கொள்வதில் அவர் குறியாக இருக்கிறார்.

''மதத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்ற முத்திரை, மரணத்தின் அச்சத்தைவிட மோசமானது. அது அந்த அளவுக்கு மோசமான குற்றச்சாட்டு என்பதால், அந்தக் குற்றச்சாட்டுடன் நான் சாக விரும்பவில்லை. என் குடும்பத்தினர் இந்தச் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்க நான் விரும்புகிறேன்,'' என்று அவர் கூறினார்.

அத்தியாயம் 4 : மரண தண்டனை

பாகிஸ்தானில் ஒருசார்பான நிலை தீவிரம் அடைந்ததை அடுத்து 1980களில், மத விரோத சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டன.

1979ல் சோவியத் யூனியன் பாகிஸ்தானில் காலடி வைத்தபோது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்கா மறைமுக நடவடிக்கைகளைத் தொடங்கியது. அப்போது அமெரிக்காவின் முன்வரிசை நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்தது.

ஆப்கன் ஜிஹாத்தில் பாகிஸ்தான் பங்கேற்றதற்கு கணிசமான பொருளாதார ஆதாயங்கள் இருந்தன. ஆனால் அது மத அடிப்படைவாதத்தையும் வளர்த்துவிட்டது.

அடுத்த தசாப்தத்தில், அடிப்படைவாத குழுக்களின் அரசியல் மற்றும் சமூக செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்தது.

பேச்சுகள் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் அது கண்கூடாக வெளிப்பட்டது. இஸ்லாமில் அதிக அடிப்படைவாத வஹாபியை, ஜெனரல் ஜியா-உல்-ஹக் தலைமையில் அரசு வெளிப்படையாக ஊக்குவித்தது.

பாகிஸ்தான் ''உண்மையான இஸ்லாமிய'' நாடாக ஆக்குவதற்கு ஷரியத் சட்டத்தை அமல் செய்வதற்கு சட்டங்கள் திருத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் 1986ல் மத விரோத சட்டங்கள் நாடாளுமன்றத்தில் மாற்றப்பட்டன.

முதன்மையாக 1860-ல் இந்தச் சட்டத்தை பிரிட்டிஷார் உருவாக்கியிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இடையே மத மோதல்களைக் கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாக இருந்தது.

அது வழிபாட்டுத் தலங்களையும், புனிதமான விஷயங்களையும் பாதுகாப்பதாக இருந்தது. மத ரீதியில் கூடும் நிகழ்வுகளுக்கு இடையூறு செய்வது குற்றமாகக் கருதப்பட்டது.

அடக்க ஸ்தலங்களில் அத்துமீறி நுழைவது, எந்தவொரு நபரின் மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவமதித்தல் ஆகியவையும் குற்றமாகக் கருதப்பட்டன. அதற்கு பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று சட்டம் இருந்தது.

1972ல் அரசியல் பதற்றம் மற்றும் வெவ்வேறு சமுதாயத்தினரிடையே மோதல்கள் காரணமாக, சட்டம் இன்னும் கடுமையாக்கப் பட்டது.

ஆனால், 1986 வரையில் மத விரோத சட்டம் எந்த குறிப்பிட்ட மதத்துக்கும் ஆதரவானதாக இருக்கவில்லை. அந்த ஆண்டில், முகமது நபிக்கு எதிராக அவதூறான கருத்துகளைக் கூறுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற பிரிவை நுழைத்து, புதிய திருத்தங்களை பாகிஸ்தான் செய்தது.

அது 295-சி சட்டப்பிரிவு. அதை ஒரே ஓர் அரசியல்வாதி மட்டுமே எதிர்த்தார். அவருடைய பெயர் முகமது ஹம்சா.

இப்போது 90 வயதைக் கடந்துவிட்ட ஹம்சா, இந்த விஷயம் தேசிய நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார்.

Image caption 90 வயதைக் கடந்துவிட்ட ஹம்சா

1986-ல் உரையாற்றியபோது, சட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கு முன்னதாக, மரண தண்டனை விதிப்பது தொடர்பாக இஸ்லாமிய புத்தகங்களில் உள்ள கருத்துகளை மத அறிஞர்களைக் கொண்டு விரிவாக ஆராய வேண்டும் என்று ஹம்சா வாதிட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் ஆழமான விவாதம் நடத்துவதைத் தவிர்த்ததில், நாடாளுமன்றம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்று அவர் கூறினார்.

''விருப்பத்தின் அடிப்படையிலான நீதி முறையைக் கொண்டு நாட்டை நிர்வகிக்க முடியாது. சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் என்றால் அந்தச் சட்டத்தால் என்ன பயன் இருக்க முடியும் என்பது என்னுடைய உறுதியான கருத்து,'' என்று ஹம்சா கூறினார்.

''எங்கள் மக்களிடம் ஆழமான சிந்தனை இல்லை. காரணம் இல்லாமல் மத விஷயங்களுக்கு உணர்ச்சிவசப் படுகிறார்கள். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் அதை நான் எதிர்த்தேன்,'' என்று அவர் தெரிவித்தார்.

295-சி சட்டப்பிரிவு நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட்ட அந்த நாளில் எதிர்ப்புக் குரல் கொடுத்த ஒரே நபர் ஹம்சா மட்டுமே.

Image caption பஞ்சாப்பில் கோஜ்ரா நகரில் குழந்தையுடன் செல்லும் பெண்

பஞ்சாப்பில் கோஜ்ரா நகரில் தன்னுடைய பழைய தொகுதியில் ஹம்சா இன்னும் வசிக்கிறார்.

அசியா கைது செய்யப்பட்ட 2009-ம் ஆண்டில், நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவக் குடியிருப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றதால் கோஜ்ரா நகரம் சர்வதேச அளவில் தலைப்புகளில் இடம் பிடித்தது.

குரானின் பக்கங்கள் அழிக்கப்பட்டதாக வெளியான புரளிகளை அடுத்து, இஸ்லாமிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமான வீடுகளைக் கொள்ளையடித்துவிட்டு, தீயிட்டுக் கொளுத்தினர். எட்டு கிறிஸ்தவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டனர்.

Image caption தீ வைக்ப்பட்ட வீ்ட்டில் இரு கிறிஸ்தவர்கள்

அந்தத் தாக்குதல்கள் பற்றி கம்பீரத்துடன், தாழ்ந்த குரலில் நினைவுகூர்ந்தார் ஹம்சா.

``அதுவொரு சோகமான நாள். அந்தப் புகாருக்கு ஆதாரமே கிடையாது. ஆனால், கும்பல் உணர்ச்சிவசப் பட்டிருந்தது. அதிகாரிகள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை அவர்கள் கேட்கவில்லை. அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது'' என்றார் அவர்.

மரண தண்டனை என்ற திருத்தம் செய்யப்பட்ட பிறகு, மத விரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது என்று பாகிஸ்தான் சமூக நீதி மையத்தின் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

``நான் ஊக்கம் இழந்துவிட்டேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம், சக்திமிக்க அரசியல் ஆயுதமாக மதம் மாறிவிட்ட நிலைமை, இது இனிமேலும் ஆசிபெற்ற நிலை கிடையாது, துரதிருஷ்வசமாக இது சாபமாகிவிட்டது'' என்று ஹம்சா கூறினார்.

புனித நூல்களில் உள்ள விஷயங்களை அடிப்படை அளவில் தவறுதலான விளக்கங்கள் தந்திருப்பதால் தான் , மத விரோத குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்கின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மதரஸாக்களுக்கு அல்லது இஸ்லாமிய தங்குமிட பள்ளிகளுக்கு குறைந்த நிதி அளிக்கப்படும் அரசு பள்ளிகளுக்கு மாற்று வழியாக அனுப்பப் படுகின்றனர்.

பல மதரஸாக்களில் இஸ்லாமுக்கு அடிப்படைவாத நோக்கில் விளக்கங்கள் தரப்படுகின்றன. மத விரோதம் பற்றி தொடர்ச்சியாக சொல்லப் படுகிறது.

எனவே, சிலருக்கு உளவியல் ரீதியாக, மதத்திற்கு விரோத என்பது அவமானத்துக்குரியது என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி விடுகிறது. அதற்காக தங்களுக்கு ஊறு ஏற்படுத்திக் கொள்ளவும் அவர்கள் தயாராகிறார்கள்.

16 வயதான காதீர் (அவருடைய உண்மையான பெயர் அல்ல) பதின்ம வயது சிறுவன். ஓகரா மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய வயதை ஒத்த மற்ற சிறுவர்களைப் போல, வயலில் தன்னுடைய தந்தைக்கு அவரும் உதவியாக இருந்தான்.

கல்வி அறிவு குறைவாக உள்ள பாகிஸ்தானின் பல கிராமப் பகுதிகளில் பொதுவாக காணப்படுவதைப் போல, மதம் சம்பந்தமான அனைத்து விஷயங்களுக்கும் இந்த சிறுவனும், அவனுடைய குடும்பத்தினரும் உள்ளூர் இமாம் சொல்படி நடப்பார்கள்.

2016 ஜனவரியில், உள்ளூர் மசூதியில் அவன் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அங்கிருந்தவர்களிடம் மத எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்காக, ''உங்களில் யார் முகமது நபியை பின்பற்றுபவர்கள்,'' என்று வழிபாட்டை நடத்திய மதகுரு கேள்வி எழுப்பினார்.

கூட்டத்தில் மற்ற அனைவரும் கைகளைத் தூக்கினர், இந்தச் சிறுவன் சிறிது தூக்கத்தில் இருந்தான்.

''முகமது நபியின் போதனைகளில் யாருக்கெல்லாம் நம்பிக்கையில்லை,'' என்று கூட்டத்தைப் பார்த்து அடுத்த கேள்வியைக் கேட்டார் மதகுரு.

அரை தூக்கத்தில் இருந்த காதீர், அறியாத நிலையில் கையைத் தூக்கிவிட்டான்.

அந்த அறையில் நிசப்தம் நிலவியது. பொது இடத்தில் அந்தச் சிறுவனை மதகுரு அவமானப்படுத்தி, முகமது நபி கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

Image caption அன்வரின் உள்ளூர் மசூதி

அந்த டீன் ஏஜ் பையனுக்கு மன உளச்சல் ஏற்பட்டது. எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிவிட்ட பிறகு, ஆறுதலைத் தேடும் நிலையில் அவன் மசூதியிலேயே இருந்தான்.

''முகமது நபி மீதுள்ள அன்பை நிரூபிக்க நான் விரும்பினேன்,'' என்று அவன் கூறினான்.

தனது நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்காக, தன்னுடைய கையை வெட்டிக் கொள்வது ஒன்று தான் வழி என்று அந்த சிறுவன் முடிவு செய்தான். புல் வெட்டும் கருவியில் வலது கையை வைத்து, ஒரே வெட்டில் மணிக்கட்டை துண்டாக்கிக் கொண்டான்.

''வலி என்ற கேள்விக்கே இடமில்லை. எனது இறை தூதர் மீது கொண்டுள்ள பற்றுதலுக்காக நான் அதைச் செய்தேன், அவருடைய பெயரால் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்,'' என்று அவன் கூறினான்.

துண்டிக்கப்பட்ட கையை ஒரு தட்டில் வைத்து, வெள்ளைத் துணியால் மூடி, மதகுருவிடம் மன்னிப்பு கேட்பதற்காக மசூதியில் கொடுத்தான்.

அடுத்த சில நாட்களில், இறை தூதர் மீது அவன் கொண்டிருந்த பற்றுதலைப் பாராட்டுவதற்காக அருகிலுள்ள கிராமங்கள் மர்றும் நகரங்களில் இருந்து நிறைய பேர் காதீரை தேடி வந்தார்கள்.

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது உள்ளூர் மதரஸாவில் குரான் படிப்பதில் பெரும்பாலான நேரத்தை அவன் செலவிடுகிறான்.

ஆனால், இதில் எந்த வருத்தமும் இல்லை என்று தொடர்ந்து கூறுகிறான்.

''மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கும், இறைதூதருக்கும் இடையிலுள்ள விஷயம் இது. உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது,'' என்று அவன் தெரிவித்தான்.

அத்தியாயம் 5: சுதந்திரம்

லாகூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மால் சாலையில், மற்ற கட்டடங்களைவிட லாகூர் உயர் நீதிமன்றம் உயர்ந்து நிற்கிறது.

சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டு, உயரத்தில் அரைக்கோள வடிவத்தில் வெள்ளை கோபுரம் உள்ள அந்தக் கட்டடம், கடந்த காலனி ஆதிக்க காலத்தை நினைவுபடுத்தும் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தைச் சுற்றிலும், குறுகிய நடைபாதைகளில் பல வழக்கறிஞர்களின் அறைகள் உள்ளன. பெரும்பாலும் குப்பைகள் நிறைந்து அழுக்காக, நெரிசலாக இருக்கும்.

உயர் நீதிமன்றத்துக்குப் பின்புறம் ஒரு சிறிய வணிக வளாகத்தில், பரபரப்பாக இயங்கும் ஒரு தேநீர் கடைக்கு மேலே, வழக்கறிஞர் குலாம் முஸ்தபா சௌத்ரியின் அறை உள்ளது.

Image caption வழக்கறிஞர் குலாம் முஸ்தபா சௌத்ரி

கஹாட்டம்-இ-நபுவத் என்ற மத துவேஷத்துக்கு எதிரான வழக்கறிஞர் அமைப்பின் தலைவராக சவுத்ரி உள்ளார். ``இறைதூதரின் முழுமைநிலை'' என்று அர்த்தமாகும் வகையில் இந்தப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. மது துவேஷ வழக்கு தொடரும் எந்த முஸ்லிமுக்கும் இந்த அமைப்பு இலவச சட்ட உதவி அளிக்கிறது.

நாடு முழுக்க 800 தன்னார்வலர் வழக்கறிஞர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.

``நாட்டில் எந்த இடத்தில், இதுபோன்ற (மத துவேஷ) நிகழ்வுகளை எப்போது நாங்கள் கவனித்தாலும், புகார் கொடுத்தவர்களை நாங்கள் அணுகி, இலவச சட்ட உதவிகள் அளிக்கிறோம்'' என்று விளக்குகிறார் சவுத்ரி.

``அல்லாவின் ஆசியை பெறவும், இறைதூதர் முகமது நபியின் பெருமையைப் பாதுகாக்கவும் தான் நாங்கள் இதைச் செய்கிறோமே தவிர, லாப நோக்கம் எதுவும் கிடையாது'' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பை ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கறிஞராக தொழில் தொடங்கிய உடனே, சவுத்ரி தொடங்கியுள்ளார். இப்போது 50 வயதைக் கடந்துள்ள அவர், தனது லட்சியத்தில் இன்னும் அதிகமான உந்துதல் இருப்பதாகத் தெரிவித்தார்.

''இது மிகவும் துரதிருஷ்டவசமானது - மத துவேஷம் அதிகமாகிவிட்டது. லாகூர் நகரில் மட்டும் மத துவேஷம் தொடர்பாக 40 வழக்குகள் விசாரணையில் உள்ளன.''

''மத துவேஷம் செய்பவர்கள் ஹீரோபோல போற்றப் படுகிறார்கள், இது சோகமான விஷயம்,'' என்கிறார் அவர்.

ஆசியா பீபி வழக்கு எப்படி கையாளப்பட்டது என்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.

''அந்தப் பெண்மணி இறைதூதரை அவமதித்துள்ளார், ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் ஹீரோ ஆகிவிட்டார்'' என்று அவர் கூறினார்.

Image caption மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், ஊடகங்களிடம் பேசும் அசியா பீபியின் வழங்கறிஞர்.

சல்மான் டசீரை கொலை செய்த முன்னாள் மெய்காப்பாளர் மும்தாஜ் காத்ரி தரப்பில் ஆஜரானவர் சவுத்ரி. மத துவேஷ சட்டமானது ``நல்ல விஷயம்'', உண்மையில் பெருங்கூட்டத்தினரின் நியாயத்துக்கு ``கடும் எதிர்ப்பானது'' என்று அவர் கூறுகிறார்.

''முன்னாள் ஆளுநர் மீது (மத துவேஷ) காவல் துறையில் புகார் கொடுக்க அணுகியிருக்கிறார் மும்தாஜ் காத்ரி. ஆனால் அவருடைய புகார் ஏற்கப்படவில்லை.''

''சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், அவர் துப்பாக்கியை கையில் எடுத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது,'' என்றும் அவர் கூறினார்.

ஆசியாவின் விஷயத்தில், சட்டம் தன் கடமையைச் செய்தது. நாட்டின் மிக உயரிய நீதிமன்றம் வரை சென்றது. அந்தப் பெண்மணியைத் தண்டிப்பதற்குப் எதிராக, போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கூறியபோதிலும், போராட்டங்கள் வெடித்தன.

Image caption அசியா பீபியின் கணவர் ஆஷிக் மசிக் (இடது), மகள்கள் ஈசா (நடுவில்) மற்றும் இஷாம் (வலது)

அக்டோபர் 31ஆம் தேதி அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் நீதிபதிகள் பின்வருமாறு எழுதினர்:

``குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஆசியா என்ற பெயர் அரபி மொழியில் 'பாவம் நிறைந்தவர்' என்று அர்த்தமாவது எதிர்மறையாக உள்ளது. இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் அவர், ஷேக்பியரின் கிங் லியரில் கூறியபடி 'பாவம் செய்ததைவிட அதிக பாவக் குற்றச்சாட்டுக்கு ஆளானவராக' இருப்பதைப் போலத் தெரிகிறது.

இப்போதும் ஆசியாவின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு அரசு ஒப்புக்கொண்டது. போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால், தெஹ்ரிக்-இ- லப்பாய்க் கட்சியினரை பாகிஸ்தான் ஒடுக்கியது.

டி.எல்.பி கட்சியின் ஆவேசமான தலைவர் காதிம் ஹுசேன் ரிஸ்வியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Image caption காரி சலிம் (இடது) மற்றும் அவரது வழங்கறிஞர் குலாம் முஸ்தபா சௌத்ரி (வலது)

ஆசியாவின் குடும்பத்தினர் சுமார் மூன்று மாத காலம் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டனர்; அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது, ஆனால் அவர் விடுதலை பெறவில்லை.

இறுதியாக மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சில மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. பீபியின் வழக்கில் புகார்தாரரான குவாரி சலீம் தரப்பில் வழக்கறிஞராக குலாம் முஸ்தபா சவுத்ரி ஆஜரானார்.

அசியாவை விடுதலை செய்த தீர்ப்பில் எந்தத் தவறையும் அவரால் சுட்டிக்காட்ட முடியாமல் போனது. மனுவை நிராகரித்த நீதிமன்றம், ஆசியாவை விடுதலை செய்யும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.

ஆசியாவுக்கு எதிராக, சாட்சிகளின் வாக்குமூலங்களில், மாறுபட்ட நிலைப்பாடுகள் இருப்பதாக தலைமை நீதிபதி கூறினார். ``பொய்யான சாட்சி வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒருவரை நாங்கள் (நீதிமன்றம்) எப்படி தூக்கிலிட முடியும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுயபரிசோதனையாக, பொய்யான வாக்குமூலங்களால் நாட்டில் சமூக கட்டமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைக் காட்டுவதாக இது இருந்தது.

ஆனால், இறுதியில் அரசாங்கம் தனது வல்லமையைக் காட்டியது, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப் பட்டது.

பெருங்கூட்டமாக சேர்ந்து சர்வாதிகாரமாக நடந்து கொண்டு பாகிஸ்தானை ஆட்சி செய்ய முடியாது என்று விஷயம் தெளிவாக்கப்பட்டது.

மத விரோத சட்டங்களை இனிமேலும் நாட்டில் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பதையும் இந்த வழக்கு தெளிவுபடுத்திவிட்டது. பாகிஸ்தானுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

ஆனால் அந்தச் சட்டம் இன்னும் இருக்கிறது. அதைத் திருத்துவது அல்லது ரத்து செய்வது பற்றிப் பேசும் அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்லை.

சல்மான் டஸீர் மற்றும் சிறுபான்மையின அமைச்சர் சல்மான் பாட்டி ஆகியோரின் கொலைகள் நாட்டு மக்கள் மனதை இன்னும் உறுத்தலாக நினைவிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :