அமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி - டிரம்ப் திட்டவட்டம் மற்றும் பிற செய்திகள்

டிரம்ப் படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா - மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, அமெரிக்க அரசுத்துறைகள் செயல்பாட்டுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் டிரம்ப் முரண்டு பிடித்தார்.

அதாவது, தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இசைவு தெரிவித்தால் மட்டுமே அமெரிக்க அரசுத்துறைகளின் பகுதியளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கோபமடைந்த டிரம்ப், நாட்டில் அவசரநிலையை அறிவித்துவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை கொண்டு எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதிக்கு தாமே ஒப்புதல் வழங்கவுள்ளதாக கூறி வருகிறார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பான 'ட்வீட்' - அலிகர் பல்கலைக்கழக மாணவர் இடைநீக்கம்

படத்தின் காப்புரிமை SM VIRAL TWEET GRAB

புல்வாமாவில் நடந்த தாக்குதல் தொடர்பாக 'எப்படி இருந்தது ஜெய்ஷ், அருமை சார்' என்ற வாசகத்துடன் ட்வீட் செய்த அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக (ஏஎம்யூ) மாணவர் அந்த பல்கலைகழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏராளமான சமூகவலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ள இந்த மாணவரின் ட்வீட் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் , பொறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் பலர் கருதுகின்றனர்.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு இந்த ட்வீட் பதிவு வெளிவந்துள்ளது.

விரிவாக படிக்க:புல்வாமா தாக்குதல் தொடர்பான 'ட்வீட்' - அலிகர் பல்கலைக்கழக மாணவர் இடைநீக்கம்

ராஜீவ் காந்திக்கு போஃபர்ஸ்ஸில் நடந்தது, ரஃபேலில் நரேந்திர மோதிக்கு ஏன் நடக்காது?

படத்தின் காப்புரிமை Getty Images

ரஃபேல் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மோதி அரசு 2014 மே மாதம் பதவிக்கு வந்தது. இன்னும் இரண்டு மாத காலத்தில் இந்த அரசு மக்களவை தேர்தல்களை சந்திக்க இருக்கிறது.

இந்த சூழலில்தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

மோதி அரசு தன்னுடைய ஆட்சி காலத்தில் சந்திக்கும் மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு, அரசியல் சவால் என்று ரஃபேல் விவகாரத்தை நிச்சயம் நாம் சொல்லலாம்.

விரிவாக படிக்க:ராஜீவ் காந்திக்கு போஃபர்ஸ்ஸில் நடந்தது, ரஃபேலில் நரேந்திர மோதிக்கு ஏன் நடக்காது?

சிக்கியது சின்னத்தம்பி - வரகளியாறு யானைகள் முகாம் செல்கிறது

மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை தற்போது கேரள பதிவு எண்ணுடைய லாரியில் ஏற்றப்பட்டு ரகளியாறு யானைகள் முகாமுக்கு அனுப்பப்படுகிறது. அதனுடன் ஒரு கும்கி யானை செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சின்னத்தம்பியை பிடிப்பதற்கு, கடைசியில் அது நின்று கொண்டிருந்த வாழைத்தோட்டத்தின் பாதி விளைநிலப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயக்க ஊசி போடப்பட்ட சின்னத்தம்பியை, சுயம்பு மற்றும் கலீம் என்ற இரு கும்கி யானைகளை கொண்டு போராடி லாரியில் ஏற்றியுள்ளனர்.

சுயம்பு என்கிற யானைக்கு சின்னத்தம்பியை கையாள்வதுதான் கும்கி யானையாக முதலாவது நடவடிக்கை. இதில் சுயம்பு நல்ல பங்காற்றியுள்ளது.

விரிவாக படிக்க:சிக்கியது சின்னத்தம்பி - வரகளியாறு யானைகள் முகாம் செல்கிறது

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சேவல் சண்டை

உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அரவக்குறிச்சி அருகே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சேவல் சண்டை நடந்தது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொழுது போக்கிற்காகவும், பாரம்பரிய சேவல் இனங்களை பாதுகாக்கும் பொருட்டும் சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பறவைகள் துன்புறுத்தப்படுதல் மற்றும் சில சம்பவங்களை சுட்டி காட்டி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதனால் பூலாம்வலசுவில் சேவல் சண்டை நிறுத்தப்பட்டது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சேவல்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, அதன் கால்களில் கத்தி கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பூலாம்வலசுவில் 3 நாட்கள் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்