சுதந்திர தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள் மற்றும் பிற செய்திகள்

தனி நாடு கோரிக்கை: மீண்டும் களமிறங்கிய கேட்டலோனியா மக்கள் படத்தின் காப்புரிமை EPA

கேட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பேரணியை நடத்தினர்.

சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றதாக கருதப்படும் இந்த பேரணியின்போது, கேட்டலன் கொடியை ஏந்திக்கொண்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 12 பிரிவினைவாத தலைவர்களுக்கு ஆதரவான முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

ஸ்பெனிலிருந்து கேட்டலோனியாவை பிரித்து தனி நாடாக்கும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் நடத்தப்பட்டு, தோல்வியடைந்த பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, அந்த கோரிக்கையை முன்னெடுத்த தலைவர்கள் மீதான விசாரணை மாட்ரிட் நகரத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பிரிவினைவாத தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சிலர் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.

ஸ்பெயின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கேட்டலன் பிரிவினைவாதிகள் சமீபத்தில் விலக்கிக்கொண்டதால், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்ததா?

படத்தின் காப்புரிமை Twitter

"தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை காங்கிரஸ் வழங்கும்" என்கிற ஒரு செய்தித்தாளின் புகைப்படப் பதிவு தீவிர வலது சாரி ஊடகக் குழுக்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்த பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சி.ஆர்.பி.எஃப் வாகன அணி மீது தற்கொலை குண்டுதாரி நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 46 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பகிர்வு ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு, பார்க்கப்பட்டுள்ளது.

"நமோ ஃபேன்" மற்றும் "பிஜேபி மிஷன் 2019" போன்ற ஃபேஸ்புக் குழுக்களில் இந்த புகைப்படம் கடந்த 48 மணிநேரங்களில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க: தீவிரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்ததா?

"இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது"

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போரில் ராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை அவர்கள் மனிதாபிமானப் போரையே நடத்தினர் என்று இதுவரை இலங்கை அரசு கூறிவந்தது.

விரிவாக படிக்க: “இலங்கை போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது”

காஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு?

படத்தின் காப்புரிமை HILAL SHAH

2018ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுத போராளிகள் அங்கிருந்த ஐந்து வீரர்களை கொன்றனர். எதிர்த்தாக்குதலின்போது அந்த இரண்டு ஆயுதப போராளிகளும் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த இரண்டு ஆயுத போராளிகளில், 15 வயதான ஃபார்டீன் அஹ்மத் காண்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் ஆயுத போராளிகள் குழுவில் சமீப காலத்தில் இணைந்த மிகவும் இளவயது போராளி காண்டேதான். பாம்போரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அதற்காக காரணம் குறித்து விளக்கும் காணொளி பதிவை காண்டே உருவாக்கியிருந்தார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லேத்போரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்து ஐந்து மாதங்களே ஆன, 21 வயதான ஆதில் அகமது நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

விரிவாக படிக்க: காஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு?

தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைவதை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து காணப்படுவது தொடர்பான வழக்கொன்றை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று தனது உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மாசடைந்து வருகின்றன. அவை சாக்கடையாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய மாநில அரசின் தோல்வியையே இந்நிகழ்வு காட்டுகிறது.

கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். ஆகவே, எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்.

மாநில அரசின் தோல்வியை கருத்திற்கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :