பாகிஸ்தானில் $20 பில்லியன் முதலீடு - சௌதி அரேபியா கையெழுத்து

பாகிஸ்தானில் $20 பில்லியன் முதலீடு - சௌதி அரேபியா கையெழுத்து படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சௌதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிகட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சௌதி அரேபியா கைக்கொடுத்துள்ளது.

சௌதி அரேபியாவின் $20 பில்லியன் முதலீட்டில் அதிகபட்சமாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவாடர் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு மட்டும் $8 பில்லியன் செலவிடப்படும்.

அதுமட்டுமின்றி, இரண்டு தரப்பினருக்கும் இடையே எரிசக்தி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளும், புரிந்துணர்வு ஒப்பந்தகளும் செய்யப்பட்டுள்ளன.

"இந்த முதலீடுகள் முதலாவது கட்டம்தான். இது கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும், ஆண்டும் வளர்ந்து இருநாடுகளுக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவி வரும் பணப்பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது நட்பு நாடுகளிடம் உதவிகளை எதிர்நோக்கி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானில் கடந்த 1980களில் இருந்து 13வது முறையாக ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு, சௌதி அரேபியா ஏற்கனவே ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கெங்கு செல்கிறார் இளவரசர் சல்மான்?

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வரும் சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை NARINDER NANU

பாகிஸ்தானிலிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வரும் சல்மான், புதன் மற்றும் வியாழக்கிழமை சீனாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது மட்டுமின்றி, கஷோக்ஜி விவகாரத்தால் சர்வதேச அளவில் பெற்ற அவப்பெயரை மாற்றுவதற்கு இந்த சுற்றுப்பயணத்தை சல்மான் பயன்படுத்துவார் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்