குல்புஷன் ஜாதவ் வழக்கு - சர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்ன? 5 கேள்வி - பதில்கள்

ICJ

பட மூலாதாரம், DEA / N. CIRANI

படக்குறிப்பு,

சர்வதேச நீதிமன்றம் செயல்படும் இடம்

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குல்புஷன் ஜாதவ் வழக்கு ஐ. சி.ஜே (International Court of Justice) எனும் சர்வதேச நீதிமன்றத்தில் பொது விசாரணைக்கு வந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றன.

சர்வதேச நீதிமன்றம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன என்பது உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கான விடைகள் இங்கே.

சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் த ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை நாடுகளுக்கு இடையில் உள்ள சச்சரவுகளை தீர்த்து வைப்பதே.

கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பண்டாரி பணியாற்றியிருக்கிறார்.

ஒரு நாட்டின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வரும்போது, தொடர்புடைய நாட்டின் நீதிபதி யாரும் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வில் இல்லையெனில், அந்நாடு தற்காலிக நீதிபதியாக ஒருவரை அக்குறிப்பிட்ட வழக்குக்காக நியமிக்கலாம்.

பாகிஸ்தான் நீதிபதிகள் யாரும் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லையென்பதால் கடந்த ஆண்டு தற்காலிக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி தஸாடக் ஹுசைன் ஜிலானி தற்போது குல்புஷன் வழக்கை விசாரிக்கும் அமர்வில் தற்காலிக நீதிபதியாக செயல்படுகிறார்.

பட மூலாதாரம், AFP

சர்வதேச நீதிமன்றம் என்ன செய்யும்?

ஒவ்வொரு நாடும் தன்னிடம் கொண்டு வரும் சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது சர்வதேச நீதிமன்றத்தின் முக்கிய வேலை.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள் ஆகியவை இதனை அணுகும்போது சட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதும் இதன் பணி.

15 நீதிபதிகளை கொண்டது இந்நீதிமன்றம். நீதிபதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபையால் நியமிக்கப்படும் இந்நீதிபதிகளுக்கு பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் தத்தமது நாடுகளின் பிரதிநிதிகளாக செயல்படமாட்டார்கள். ஆனால் சுதந்திரமான மாஜிஸ்டிரேட்டாக செயல்படுவார்கள்.

பட மூலாதாரம், INTERNATIONAL COURT OF JUSTICE

படக்குறிப்பு,

குல்புஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதிட்டது

யார் யார் தமது பிரச்சனைகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்?

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களே சர்வதேச நீதிமன்றத்தை அணுகமுடியும்.

தனது அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் கொண்டு வரும் வழக்குகளை மட்டுமே இந்நீதிமன்றம் விசாரிக்கும். முதலில் சம்பந்தப்பட்ட நாடுகள் வழக்கை பதிவு செய்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பிறகே நேரடியாக பொது விசாரணையில் தங்களது வாத விவாதங்களை எடுத்து வைக்க முடியும்.

சர்வதேச நீதிமன்ற முடிவுகள் கட்டாயமாக அமல்படுத்தப்படுமா?

இரு தரப்பின் வாத விவாதங்களை கேட்ட பிறகு தனி கூட்டம் நீதிமன்றத்தில் நடக்கும். அதன் பின்னர் சர்வதேச நீதிமன்றம் பொது அவையில் தீர்ப்பு வாசிக்கப்படும். இந்த தீர்ப்பே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது.

சம்பந்தப்பட்ட தரப்பு தீர்ப்பை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் மற்றொரு தரப்பு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்லும்போது, ஐ.நாவின் உறுப்பினர்களில் உள்ள ஐந்து வீட்டோ நாடுகளும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டை போட முடிவு செய்துவிட்டால் அந்த விவகாரத்துக்கு தீர்வே கிடைக்காமல் போகக்கூடும்.

1946களிலிருந்து இந்நீதிமன்றம் எல்லை சார்ந்த விவகாரங்கள், பிராந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்கள், பணயக்கைதிகள், தஞ்சம் கோரும் உரிமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பட மூலாதாரம், Anadolu Agency

சர்வதேச நீதிமன்றம் வெற்றிகரமாக செயல்படுகிறதா?

முழுமையாக வெற்றிகரமாக மட்டுமே செயல்பட்டுள்ளது எனக் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது ஆனால் இதனை உருவாக்கியவர்கள் சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இதனை கருதினார்கள். அதனை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது த ஹேக்கில் இயங்கும் இந்நீதிமன்றம். இதற்கு காரணம் பல்வேறு அரசுகளே.

1984-ல் நிகராகுவாவின் சான்டிநிஸ்டா அரசு ஒரு வழக்கு தொடுத்தது. அமெரிக்க ஆதரவு கான்ட்ரா கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் புகார் தொடுத்தது.

இதனை தனது அதிகார எல்லைக்குட்பட்ட விஷயமாக நீதிமன்றம் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மறுத்தது.

1977-ல் அர்ஜென்டினா மற்றும் சிலி இடையிலான பீகில் கால்வாய் தொடர்பான சச்சரவில் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுத்தது அர்ஜென்டினா. போப் இதில் தலையிட்ட பின்னரே போர் தடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP

.சி.ஜே மற்ற சர்வதேச நீதிமன்றங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை மட்டுமே இது விசாரிக்கிறது. தனிநபர்களை தண்டிக்கமுடியாது. ஐ.சி.சி (International Criminal Court) எனப்படும் நீதிமன்றத்தோடு இதனை குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஐ.சி.சி நீதிமன்றம் என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். மோசமான குற்றங்கள், இனப்படுகொலை, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உலகத்தின் எந்த பகுதியில் நடக்கும் போர் குற்றங்களை இந்த குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :