குற்றங்களில் ஈடுபடும் மூத்த ஜப்பான் குடிமக்கள் மற்றும் பிற செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் - காரணம் என்ன?

பட மூலாதாரம், YO NAGAYA

அனாதையாக விட்டுச்செல்லும் குழந்தைகளால் வழி தெரியாது நிற்கும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஜப்பானில் நிலவும் வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் திருடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பெயர் வெளியிட விரும்பாத ஜப்பானிய பெண்ணொருவர் தனக்கு 53 வயதானபோது, குழந்தை பள்ளிக்கு செல்ல மறுத்ததால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புத்தகப்பை ஒன்றை திருடியபோது பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறுகிறார்.

மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு தற்போது 68 வயதாகும் நிலையில், தனக்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் அதை திருடியபோது பிடிபட்டு ஐந்தாவது முறையாக சிறைவாசத்தை அனுபவித்தார்.

இவ்வாறாக, ஜப்பானில் நிலவும் வேலையின்மை, பெற்றெடுத்த குழந்தைகளின் ஆதரவின்மை ஆகியவற்றின் காரணமாக மூத்தகுடிமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி

பட மூலாதாரம், Google

'உலகின் சிறந்த கழிவறை பேப்பர்' எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற உடன் சில வலைப் பதிவுகளில் தாக்குதல் பற்றி பேச தொடங்கியவுடன் எழுந்துள்ளது மேலும் வார இறுதியில் அது டிரண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டாரா கிரண் பேடி?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிந்துள்ள ட்வீட் ஒன்று நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலன் திட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த வாரம் 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட தொடங்கினார்.

நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் 'காக்கை யோகா' என்ற தலைப்பிட்டு அவர் பதிவேற்றிய புகைப்படமும், கருத்தும் பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

ஆளுநர் மாளிகை அருகேயுள்ள ஒரு மரத்திலிருக்கும் இரண்டு காகங்களை புகைப்படம் எடுத்து, யோகா அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்துடன் அதனை தனது ட்விட்டர் கணக்கில் பதிந்திருந்தார்.

ஸ்டெர்லைட் தீர்ப்பு: ஆலை நிர்வாகம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

"ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட்டவருமான ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "நீதி வென்றது, அண்ணா தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலைந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் 'காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு வேண்டும்' என கூறினாரா?

பட மூலாதாரம், Getty Images

நேற்றைய தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரியதாகவும், பாகிஸ்தான் கோரும் அதே விஷயத்தை கமல் ஹாசன் கோருகிறார் எனவும் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கோரும் விஷயத்தை கமல் ஹாசனும் தீர்வாக முன் வைக்கிறார் என 'டைம்ஸ் நவ்' உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த வியாழக்கிழமையன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :