புல்வாமா தாக்குதல்: ''ஆதாரம் கொடுத்தபோது நடவடிக்கை எடுத்தீர்களா? - இம்ரான்கானுக்கு இந்தியா காட்டமான பதில்

நரேந்திர மோதி - இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது நம்பிக்கையற்ற வார்த்தைகள் என்று இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் இந்த சம்பவம் மற்றும் இந்தியாவின் குற்றச்சாட்டு குறித்து உரையாற்றினார்.

''காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்'' என்று இம்ரான்கான் தெரிவித்தார். ''தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார். இதற்கு இந்தியா காட்டமான எதிர்வினையாற்றியுள்ளது.

''புல்வாமாவில் எங்களது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை பயங்கரவாத செயல் என பாகிஸ்தான் பிரதமர் ஏற்க மறுத்தது எங்களுக்கு ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இந்த கொடிய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கவும் இல்லை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவும் இல்லை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தானால் திரும்பத் திருமபச் சொல்லப்படுகிறது. இந்த கொடிய செயலை ஜெய்ஷ் இ மொஹம்மத் எனும் தீவிரவாத இயக்கம் செய்ததாக கூறப்படுவதை பாகிஸ்தான் பிரதமர் மறுத்திருக்கிறார். ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆகவே நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்த ஆதாரம் போதாதா? '' என அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Anadolu Agency

இம்ரான் கான் தனது உரையின் போது ''இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது எதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராய்ந்தறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன். நாங்கள் இன்னொருவரின் அழுத்தத்திற்கு உள்ளாகி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மண்ணை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரி என உணர்கிறோம். அவர்கள் எங்களது விருப்பங்களுக்கு எதிரானவர்கள்'' என்றார்.

''பாகிஸ்தான் பிரதமர் இந்தியா ஆதாரம் கொடுத்தால் விசாரிக்கத் தயார் என்கிறார். இது ஓர் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மும்பையில் நடந்த நவம்பர் 26 தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு போதிய ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த வழக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எந்த முன்னேற்றமும் அடையவில்லை. பதான்கோட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 'உறுதியான நடவடிக்கை' எடுக்கப்படும் என பாகிஸ்தான் வாக்குறுதி வழங்குவது வாய்மையற்ற ஒன்று என்பதையே பாகிஸ்தானின் கடந்த கால செயல்கள் காட்டுகின்றன'' என வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காட்டமான வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் 'நயா பாகிஸ்தான்' என்ற பதத்தை பயன்படுத்துகிறார். புது சிந்தனையோடு புதிய பாகிஸ்தானாக இருக்கிறது என்கிறார். இந்த நயா பாகிஸ்தானில் தான் தற்போதைய அரசின் அமைச்சர்கள் வெளிப்படையாக ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்கள் என கூறுகிறது இந்தியா.

''ராணுவத்தின் மூலம் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியும் என இந்தியா நம்புகிறதா? ஆப்கானிஸ்தானில் 17 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒட்டுமொத்தக உலகமும் ராணுவ நடவடிக்கை தீர்வை தராது என்பதை உணர்ந்திருக்கின்றன. பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்னைகளை தீர்க்க உதவும்'' என இம்ரான் கான் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Hindustan Times

இதற்கு தனது அறிக்கையில் பதிலளித்துள்ளது இந்தியா.

பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். மேலும் பயங்கரவாதம் குறித்து பேச தயார் என்கிறார். நாங்கள் திரும்ப திரும்பச் சொல்வது பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற வெளியில் விரிவான இரு தரப்பு உரையாடலுக்கு இந்தியா தயாராக இருக்கிறது என்பதே என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

''பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம்'' என இம்ரான்கான் கூறிய நிலையில், இந்தியா தனது அறிக்கையில் இதனை உண்மைக்கு புறம்பானது என்கிறது.

'' பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு தாங்கள்தான் என்கிறது. இது உண்மைக்கு மாறானது. பயங்கரவாத நரம்பு மையம் பாகிஸ்தான் என்றே சர்வதேச சமூகம் நன்கு அறிந்து வைத்துள்ளது'' என இந்தியா தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் தனது உரையில் '' இந்தியாவில் தேர்தலுக்காக பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதாக கூறுவதன் மூலம் ஒருவித எழுச்சியை ஏற்படுத்த முயல்வதை பார்க்க முடிகிறது'' என குறிப்பிட்டார். இதனை இந்தியா நிராகரித்துள்ளது.

''மக்களவை பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா இப்படி எதிர்வினையாற்றுகிறது என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் பிரதமர். இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. இந்தியா இதனை நிராகரிக்கிறது. உலகத்துக்கே இந்தியா தான் மக்களாட்சிக்கான மாதிரியாக விளங்குகிறது. இதனை பாகிஸ்தான் புரிந்து கொள்ளப்போவதில்லை'' என்கிறது இந்தியா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :