காஷ்மீர் தாக்குதல்: இந்திய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்

  • ஷுமைலா ஃஜாப்ரி
  • பிபிசி
காஷ்மீர் தாக்குதல்

பட மூலாதாரம், Sehyr Mirza / facebook

படக்குறிப்பு,

செஹிர் மிர்ஸா

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள சில இளம் பெண்கள் சமூக ஊடகப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் செஹிர் மிர்ஸா #AntiHateChallenge எனும் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

"நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன்," எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையைத் தாம் ஏந்திக்கொண்டிருக்கும் படத்தை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ள மிர்ஸா, #AntiHateChallenge, #NotoWar, #WeStandWithIndia, #CondemnPulwamaAttack உள்ளிட்ட ஹேஸ்டேகுகளை பயன்படுத்தி இந்திய மக்களுக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

"இந்திய மக்கள் கோபத்துடனும், வலியுடனும் இருப்பதை உணர முடிகிறது," என பிபிசியிடம் பேசிய செஹிர் மிர்ஸா கூறினார்.

பட மூலாதாரம், facebook

செஹிர் மற்றும் அவரது நண்பர்கள் பாகிஸ்தான் மக்கள் தரப்பில் இருக்கும் மௌனத்தைக் களைய வேண்டும் என்று நினைத்தனர். 'அமன் கீ ஆஷா' (Aman ki Asha) எனும் ஃபேஸ்புக் குழுவில், தனது பதிவில் இந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதிப் புகழ்பெற்ற கவிஞர் ஷாஹிர் லூதியான்வியின் கீழ்காணும் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

'குருதி நமதோ அவர்களுடையதோ, அது மனிதர்களின் குருதிதான்.

போர்கள் கிழக்கிலோ அல்லது மேற்கிலோ தொடங்கலாம், அது உலக அமைதியைக் கொல்வதுதான்.

குண்டுவீச்சைச் சந்திப்பது வீடுகளோ எல்லைகளோ, காயம்படுவது ஆன்மாவின் ஆலயம்தான்.

போரே ஒரு பிரச்சனைதான் எனும்போது அது பிரச்சனைகளை எப்படித் தீர்க்கும்?

இன்று அது நெருப்பையும் குருதியையும் பொழியும்;

நாளை பசியையும் பஞ்சத்தையும் தரும்.'

செஹிர் மிர்ஸா உடன் அவரது சில தோழர்களும் இணைந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவர் லாகூரில் உள்ள வழக்கறிஞர் ஷுமைலாகான்.

"இரு தரப்பிலும் தேசியவாதம் மற்றும் செயற்கையான மிகைப்படுத்தல்களே முன்னிறுத்தி விவாதிக்கப்படுகின்றன. இந்தப் பிரசாரம் மூலம் அமைதியையும் குடிமக்களின் எண்ணங்களையும் முன்னிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்," என்கிறார் ஷுமைலா கான்.

இதுவரை இந்த முன்னெடுப்பில் சுமார் ஒரு டஜன் பெண்கள் பங்கெடுத்துள்ளனர். இதற்கான ஆதரவும் அதிகமாக உள்ளது.

எல்லைகள் கடந்து இருநாட்டு மக்களும் இதை ஆதரிக்கின்றனர். "பாகிஸ்தானில் உள்ள வேறு யாரும் செய்யத் துணியாத ஒன்றை முன்னெடுத்த இந்தப் பெண்ணைப் போற்றுகிறேன்," என ராஜீவ் சிங் எனும் இந்தியர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

படக்குறிப்பு,

பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் வெடிபொருட்கள் நிறைந்த கார் சி.ஆர்.பி.எஃப் வாகன அணிவகுப்பு மீது மோதி நடந்த தற்கொலை தாக்குதலில் இந்தியப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

எனினும், தங்களுக்கு கலவையான எதிரிவினைகளே வந்ததாக செஹிர் மிர்ஸா கூறுகிறார். இணையத்தில் தங்களுக்கு ஆதரவு மட்டுமல்லாது, விமர்சனங்களும் ஏளனங்களும் வந்தன என்கிறார் அவர்.

இத்தகைய பிரசாரத்தை எதிர்ப்பவர்கள், "காஷ்மீர் மக்கள் பல பத்தாண்டுகளாக இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளானதற்கு எதிர்வினையே இந்தப் புல்வாமா தாக்குதல்," என்று கூறுகிறார்கள்.

"பாகிஸ்தான் எதிர்வினையாற்ற சிறந்த வழி எது என்பது குறித்த விவாதத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பங்களையும் உணர்வுகளையும் மனதில் வைத்துக்கொண்டு பாகிஸ்தான் இதில் எப்படி தனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்," என்கிறார் ஷுமைலா கான்.

"இரு தரப்பிலும் குடிமக்கள் தொடர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால் இரு அரசுகளும், தேசியவாதத்தை முன்வைத்து தங்களுக்கு வசதியான வகையில் இந்த விவாதத்தைத் திசை திருப்பிவிடும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :