எல்ஜிபிடி: தன்பாலின உறவில் உள்ள பிரதமரின் இணைக்கு பிறந்த ஆண் குழந்தை மற்றும் பிற செய்திகள்

கோப்புப் படம்: எல்ஜிபிடி உரிமைகளை வென்றெடுத்ததற்காக கொல்கத்தாவில் நடந்த விழாவில் எடுப்பட்ட படம். படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்: எல்ஜிபிடி உரிமைகளை வென்றெடுத்ததற்காக கொல்கத்தாவில் நடந்த விழாவில் எடுப்பட்ட படம்.

தன்பாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சர்வதேச அளவில் தன்பாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என்கிறது செர்பிய பிரதமரின் அலுவலகம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச்

பழமைவாத நாடான செர்பியாவில் ஆனா பெர்னபிச் பிரதமரானது அனைவரையும் முதலில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இன்னும் அந்த நாட்டின் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.

ஆனா பெர்னபிச் பிரதமரான பின்னும் எல்ஜிபிடிகளின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை எனும் விமர்சனமும் செர்பியாவில் இருந்து வருகிறது.

'திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவானது'

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

படத்தின் காப்புரிமை DMK

தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோருடன் இன்று மாலை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

விரிவாக படிக்க:திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவானது: 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி

சர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன?

படத்தின் காப்புரிமை DEA / N. CIRANI

இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, குல்புஷன் ஜாதவ் வழக்கு ஐ. சி.ஜே (International Court of Justice) எனும் சர்வதேச நீதிமன்றத்தில் பொது விசாரணைக்கு வந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றன.

சர்வதேச நீதிமன்றம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன என்பது உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கான விடைகள் இங்கே.

சர்வதேச நீதிமன்றமே ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மையான நீதிமன்றம். நெதர்லாந்தின் த ஹேக்கில் இயங்கும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய வேலை நாடுகளுக்கு இடையில் உள்ள சச்சரவுகளை தீர்த்து வைப்பதே.

கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பண்டாரி பணியாற்றியிருக்கிறார்.

விரிவாக படிக்க:சர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்ன? 5 கேள்வி - பதில்கள்

கொல்லப்பட்ட பாகிஸ்தான் கைதி

படத்தின் காப்புரிமை RAJESH ASNANI-BBC

ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

விரிவாக படிக்க:பாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்

இந்திய மக்களுக்கு ஆதரவு

படத்தின் காப்புரிமை SEHYR MIRZA / FACEBOOK

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானில் உள்ள சில இளம் பெண்கள் சமூக ஊடகப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் செஹிர் மிர்ஸா #AntiHateChallenge எனும் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

"நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலைக் கண்டிக்கிறேன்," எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையைத் தாம் ஏந்திக்கொண்டிருக்கும் படத்தை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

விரிவாக படிக்க: காஷ்மீர் தாக்குதல்: இந்திய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :