'பயங்கரவாத தாக்குதல்' நடத்த திட்டமிட்ட அமெரிக்க கடற்படை அதிகாரி

பட மூலாதாரம், Reuters
பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேரிலாந்தில் உள்ள கிரிஸ்டொஃபர் பால் ஹசொனின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.
சில முக்கிய ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிகளை அவர் இலக்காக வைத்திருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரையும் கொலை செய்த நார்வே நாட்டை சேர்ந்த ஆண்டர்ஸ் ப்ரெய்விக் போல தான் கொலை செய்ய நினைத்ததாக ஹசொன் தெரிவித்தார்.
"அப்பாவியான பொதுமக்களை கொலை செய்வதே அவரது நோக்கமாக இருப்பதாக" நீதிமன்ற ஆவணங்களில் அட்டர்ணி ராபர்ட் ஹர் குறிப்பிட்டுள்ளார்.
"கிரிஸ்டொஃபர் பால் ஒரு உள்நாட்டு தீவிரவாதி. மனித உயிர்களை கொலை செய்து, அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என அவர் நினைத்திருக்கிறார்."
ஜூன் 2017ல் ஹசொன் எழுதிய ஒரு மின்னஞ்சலில், "இந்த உலகில் உள்ள கடைசி நபரைக்கூட கொல்லும் வழிகுறித்து சிந்திக்கிறேன். தொற்று நோய், ஸ்பானிஷ் காய்ச்சல், நச்சேற்றம் போன்ற ஏதேனும் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்," என்று அவர் எழுதியுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.
பட மூலாதாரம், Reuters
49 வயதாகும் அவர், வாஷிங்டனில் கடலோர பாதுகாப்பு தலைமையகத்தில் லெஃப்டினன்ட்டாக உள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
15 துப்பாக்கிகள் மற்றும் பல வெடிபொருட்கள் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதோடு அங்கு சட்டவிரோதமான போதைப் பொருட்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக சபையின் சபாநாயகர் நான்ஸி பெலொசி, மற்றும் செனட் மைனாரிட்டி தலைவர் சக் ஸ்குமர், மேலும் சில ஊடக பிரபலங்கள் ஹசொனின் இலக்காக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :