"குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், அவர்களை பலி கொடுப்பதற்கு ஈடானது" - போப் பிரான்சிஸ் மற்றும் பிற செய்திகள்

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

போப் பிரான்சிஸ்

சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார்.

அதுமட்டுமின்றி, தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பாகன் என்னும் பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை தனக்கு நினைவூட்டுவதாக போப் மேலும் கூறினார்.

தங்களது தேவாலயங்களில் உள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளை ஆயர்கள் எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

கடைசி பந்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா உடனான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடக்கும் டி20 போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துது.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்தியாவின் கடுமையான முயற்சிகளையும் மீறி ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது .

இதன்மூலம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

வெளியேறிய 30 லட்சம் பேர்,உச்சத்தில் போராட்டம் - வெனிசுவேலாவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், EPA

கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் உதவிப் பொருட்களை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தடுத்து நிறுத்தியதால் அந்நாட்டின் எல்லைப்புற நகரங்களில் கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

உதவிப் பொருட்களை பெற வந்த மற்றும் கொடுக்க வந்த மக்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டையையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர்.

இந்த கலவரத்தில் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியினர் இந்த உதவி பொருட்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இடங்களுக்கு சென்றடைய வேண்டும் என தெரிவிக்கின்றனர் ஆனால் இது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறார் மதுரோ.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு போதைப்பொருள் சிக்கியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய பயண பொதிகளுக்குள், 272 பொதிகளாக பொதியிடப்பட்ட நிலையில், இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"பழங்குடிகளை வெளியேற்றினால் காடு அழியும்" - தமிழகத்தின் நிலை என்ன?

பட மூலாதாரம், M NIYAS AHMED

இந்தியாவில் ஏறத்தாழ பத்து கோடி பழங்குடியினர் வசிக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம்.

இந்த 5 சதவீத பகுதியில்தான் 500 வன உயிர் சரணாலயங்களும், 90 தேசிய பூங்காக்களும் உள்ளன.

அண்மையில்வந்த நீதிமன்ற தீர்ப்பால் லட்சகணக்கான பழங்குடி மக்களும், காடுகளில் வாழ்வோரும் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பானது வனத்தில் வசிக்கும் மக்களை துன்புறுத்த வழிவகை செய்யும் என்று செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைக்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :