எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி: விமர்சனத்துக்குள்ளாகும் போயிங், மற்றும் பிற செய்திகள்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

பட மூலாதாரம், Jonathan Druion

படக்குறிப்பு,

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்

எத்தியோப்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 157 பேரும் இறந்ததை அடுத்து, அந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு (கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இதே ரக விமானம் ஒன்று இந்தியோனீசியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி 190 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எத்தியோப்பிய விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அடிஸ் அபாபாவின் போலே சர்வதேச விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டெவோல்டே ஜெப்ரிமரியம் '' இந்த சூழலில் எதையும் உறுதியாக தெளிவாக கூறமுடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்'' என்றார்.

அந்த விமானத்தில் 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்ததாக ஜெப்ரிமரியம் குறிப்பிட்டார்.

கென்யர்கள் 32 பேர், கனடியர்கள் 18 பேர், எத்தியோப்பியர்கள் 9 பேர், இத்தாலியர்கள் 8 பேர், சீனர்கள் 8 பேர், அமெரிக்கர்கள் 8 பேர், பிரிட்டானியர்கள் 7 பேர், பிரெஞ்சுக்காரர்கள் 7 பேர், எகிப்தியர்கள் 6 பேர், ஜெர்மனியர்கள் 5 பேர், ஸ்லோவாகியர்கள் 4 பேர் மற்றும் இந்தியர்கள் 4 பேர் இதில் பயணித்துள்ளனர்.

ஆஸ்திரியர்கள் மூவர், சுவீடனைச் சேர்ந்த மூவர், ரஷ்யர்கள் மூவர், மொரோக்கோவைச் சேர்ந்த இருவர், ஸ்பெயினைச் சேர்ந்த இருவர், போலந்தைச் சேர்த்த இருவர், இஸ்ரேலியர்கள் இருவர் ஆகியோரும் இந்த விமானத்தில் இருந்துள்ளனர்.

இதைத் தவிர சவூதி அரேபியா, இந்தோனீசியா, நார்வே, உகாண்டா, சூடான், யேமென் உள்பட 15 நாடுகளில் இருந்து தலா ஒருவரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்கள்.

இந்த விபத்தை அடுத்து, எத்தியோப்பியா திங்கள்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கிறது.

''நீரவ் மோதி நாங்கள் அடையாளம் கண்டதைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்''

இந்தியாவில் சுமார் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக குற்றச்சாட்டப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக உள்ள நீரவ் மோதியை கடந்த வியாழக்கிழமை, லண்டன் நகர வீதிகளில் பார்த்த பிரிட்டனின் மூத்த செய்தியாளரான மைக் பிரவுன் நேர்காணல் செய்ய முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்றான 'தி டெலிகிராப்' நாளிதழின் மூத்த செய்தியாளரான மைக் பிரௌனை பிபிசி மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டது.

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

நீரவ் மோதி

"நாங்கள் நீரவ் மோதியை அடையாளம் கண்டு அணுகியபோது அவர் அதிர்ச்சியடைந்துவிட்டார். எனது கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து ஒரே வகையில் மறுப்புத் தெரிவித்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், இதை அணுகுவதற்கு வேறு வழியேதுமில்லை" என்று மைக் கூறினார்.

லண்டன் நகரின் வீதிகளில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த நீரவ் மோதியிடம், நாடு கடத்தப்படுவது, பிரிட்டனில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பார் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, அனைத்திற்கும் 'மன்னிக்கவும், கருத்து எதுவும் இல்லை' என்பதையே பதிலாக அளித்தார்.

டெலிகிராப் செய்தியாளர் தொடர்ந்து கேள்விகளை கேட்பதும், அதற்கு நீரவ் மோதி சரிவர பதிலளிக்காமல் அவ்வப்போது விலகி, டாக்ஸியை பிடிப்பதற்காக நடந்து செல்வதுமாக 'தி டெலிகிராப்' வெளியிட்ட 2 நிமிடங்கள் 13 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளி உள்ளது.

"நாங்கள் எடுத்த இந்த காணொளிக்கு, குறிப்பாக இந்தியாவிலிருந்து கிடைத்த மறுமொழியை பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். நீரவ் மோதி விவகாரம் இந்தியாவில் முக்கியத்தும் வாய்ந்தது என்று தெரிந்திருந்தாலும், அது இந்தளவுக்கு செல்லும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை" என்று மைக் கூறுகிறார்.

மக்களவை தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

மக்களவை தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

பட மூலாதாரம், Twitter

அதிமுக-தேமுதிக கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டதை அடுத்த, சில மணிநேரத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி குறித்த மூன்று வார கால இழுபறி நிலைக்கு பிறகு அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு

ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் விஞ்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

''வருவாய் குறித்த உண்மையை மறைக்கும் அரசியல் கட்சிகள்''

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பங்குபெறும் இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவையைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் பிராந்திய அரசியல் கட்சிகளின் வருடாந்திர வருவாய் குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆறு தேசியக் கட்சிகள் அல்லாத, 48 பிராந்தியக் கட்சிகளில் 37 கட்சிகளின், 2017-18ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் 237.27 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 11 கட்சிகள் தங்கள் வருடாந்திர தணிக்கை அறிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு பொது வெளியில் உள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு எனும் பொருள்படும் அஸோஸியேஷன் ஃபார் டெமோகிரெடிக் ரிஃபார்ம்ஸ், (ஏ.டி.ஆர்) இந்தியாவின் மாநிலக் கட்சிகளின் கடந்த ஆண்டுக்கான வரவு செலவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :