போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தியாவில் பறக்க தற்காலிக தடை மற்றும் பிற செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் படத்தின் காப்புரிமை Anadolu Agency

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து இந்தியாவும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தமது வான் எல்லையில் பறப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு இந்தியா இம்முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். முன்னதாக 5 மாதங்களுக்கு முன்பு இந்தோனீசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இதே ரக விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர்.

ஐந்து மாத இடை வெளியில் ஒரே ரக விமானம் இரண்டு பெரும் விபத்துகளை சந்தித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன.

''இந்த விமானங்களில் முறையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பாக இயக்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும் வரை இந்திய வான் எல்லையில் அவை பறக்க அனுமதிக்கப்படாது. பயணிகள் பாதுகாப்பே எப்போதும் முக்கியமானது'' என்று கூறிய இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இத்தடையை உடனடியாக அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு முகமை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இந்த ரக விமானம் இயங்குவதற்கான அனுமதியை நிறுத்திவைப்பதாக அறிவித்தது.

நேற்று பிரிட்டனும் சீனாவும் இதே போன்ற தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்காவில் செனட்டர்களிடம் இருந்து அழுத்தம் வந்தபோதும் அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமான எஃப் ஏ ஏ இந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை முறையாக எந்த செயல்திறன் குறைபாடும் இல்லை. ஆகவே போயிங் 737 மேக்ஸ்-8 விமானம் பறப்பதற்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மட்டுமே சுமார் 13 போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இவ்விமானங்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் எதையும் எந்தவொரு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இயக்கவில்லை. சில்க் ஏர் மற்றும் ஃபீஜி ஏர்வேஸ் என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கி வருகின்றன.

இந்த விமானத்திலுள்ள பாதுகாப்பு ஆபத்துக்களை மீளாய்வு செய்து,மேலதிக தகவல்களை பெறும் வரை இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயணியர் விமான பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் ஷான் கார்மோடி கூறியுள்ளார்.

தென் கொரியாவில் மேக்ஸ் 8 ரக விமானத்தை வைத்திருக்கும் ஒரேயோரு விமான நிறுவனமான ஈஸ்டர் ஜெட் நிறுவனத்திடம், அந்த விமானங்களை புதன்கிழமை முதல் நிறுத்தி வைக்க அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதாக ஏஃஎப்பி நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டியும், விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்தது எப்படி?

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அந்த விமானத்தில் கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

நிர்மலா தேவிக்கு ஓராண்டுக்குப் பின் ஜாமீன்

தன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நிர்மலா என்பவர் அந்தக் கல்லூரியின் கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒலிநாடா ஒன்று வெளியானது.

படத்தின் காப்புரிமை Facebook

அந்த ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தன் தரப்பை விளக்கினார்.

விரிவாக படிக்க - நிர்மலா தேவிக்கு ஓராண்டுக்குப் பின் ஜாமீன்

தேர்தலில் போட்டியாடாத போதும் வெற்றி பெற்ற கிம் ஜாங் உன்

வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை.

படத்தின் காப்புரிமை Getty Images

இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும்.

கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிம் ஜாங்-உன்னின் இளைய சகோதரியான இவர், மெதுவாக செல்வாக்கு மிக்கவராக உருவாகி வருகிறார்.

விரிவாக படிக்க - வட கொரிய தேர்தல்: கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கனிமொழி குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு நிச்சயம் அரசியல் பின்னணி உண்டு என பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஒவ்வொருவரும் தலைகுனிந்து நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக ஒரு கும்பல் இதை செய்து வருகிறது, 250 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை நான்கு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்,

காவல்துறை யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் என தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.

விரிவாக படிக்க - "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புள்ளவர்களுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு"

புல்வாமா, பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு எதிர்கட்சிகளின் வியூகம்

2019 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலைத் தாக்குதல் மற்றும் அதன் பிறகு பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய அரசியல் நிலைமைகள் மாறிவிட்டன. மாறிய இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகளின் வியூகங்களும், கூட்டணிக் கட்சிகளின் இணைப்பும் மாறுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, லோக்தள் அடங்கிய கூட்டணி காங்கிரஸ் கட்சிக்காக, ரே பரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுத்திருப்பதன் அர்த்தம் காங்கிரசும் தங்கள் கூட்டணியின் அங்கம் என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால், மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது.

இதனிடையே மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில், கூட்டணியின் கணக்கீடுகளில் ஏதாவது மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

விரிவாக படிக்க - புல்வாமா, பாலகோட் சம்பவங்களுக்கு பிறகு எதிர்கட்சிகளின் வியூகம் எப்படி மாறியுள்ளது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :