பிரெக்ஸிட்: “நல்லதொரு ஒப்பந்தம் உருவாக பணிகளை தொடர்வேன்” - தெரீசா மே

தெரீசா மே படத்தின் காப்புரிமை Neal/Getty Images

பிரெக்ஸிட் தொடர்பான இரண்டாவது திட்ட வரைவு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், நல்லதொரு பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவாக்குவறத்கான பணிகளை தொடர்வேன் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அவர், தனது ஒப்பந்த வரைவு பிரிட்டிஷ் மக்கள் விரும்புகிற பிரெக்ஸிட் மாதிரியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

கடினமான தெரிவுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்றம், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்ற தெரீசா மே தெரிவித்துள்ளார்.

மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவதை தடை செய்வது தொடர்பாக முடிவு செய்ய இன்று புதன்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் இரண்டாவது பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இந்த வாக்கெடுப்பு வருகிறது.

இவ்வேளையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாதவைகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை குறைப்பதையும், ஒப்பந்தம் எதுவும் உருவாக்கப்படாவிட்டால், வட அயர்லாந்தோடு கடுமையான எல்லை வரையறையை தவிர்க்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதையும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமரின் இரண்டாவது வரைவு திட்டம் நிராகரிக்கப்பட்ட பின்னர், ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது இதுவரை நிகழ்ந்ததைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கிறது.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் இரண்டாவது வரைவு ஒப்பந்தத்தை 391 வாக்குகள் எதிராகவும், 242 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களித்து நிரகரித்திருப்பது தொடர்பாக பல ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

பிரெக்ஸிட்டில் ஒப்பந்தம் எதுவும் ஏற்படாவிட்டால், பிரிட்டனில் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு வரி விதிப்பு இருக்காது என்று புதன்கிழமை காலை அரசு அறிவித்துள்ளது.

முன்பு இருந்த 80 சதவீத பொருட்களைவிட அதிகமாக, தற்போதைய தற்காலிக திட்டத்தின்படி, பிரிட்டன் முழுவதும் 87 சதவீத இறக்குமதி பொருட்களுக்கு வரி எதுவும் வசூலிக்கப்படாது. விவசாயம் உள்பட சில தொழில்துறைகளை பாதுகாப்பதற்கு மட்டுமே வரிகள் வசூலிக்கப்படும்.

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவதாக இருந்தால் அயர்லாந்தில் இருந்து வட அயர்லாந்துக்கு செல்லும் பொருட்களுக்கு ஏதாவது புதிய நடவடிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் அல்லது தேவையான சுங்க அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரிட்டனின் நில எல்லை பற்றிய சர்ச்சையை தவிர்ப்பதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் கைவிடும் முடிவு தற்காலிகமாக எடுக்கப்படலாம். ஆனால், நீண்டகால தீர்வுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :