போயிங் நிறுவனம் முடிவு: உலகம் முழுவதும் மேக்ஸ் 737 ரக விமானங்கள் பறக்கத்தடை மற்றும் பிற செய்திகள்

American Airlines Boeing 727 Max 8 படத்தின் காப்புரிமை Joe Raedle

சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனீசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங்.

உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்படும்.

எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனீசிய விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை.

எத்தியோப்பிய விபத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே இந்தியா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்துக்கு தடை விதித்திருந்தன. ஆனால், இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததையடுத்து இந்த விமானங்களை நிறுத்த அமெரிக்காவும் முடிவெடுத்தது.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து தொடர்பாக செயற்கைகோள் மூலமாக சீரிய புதிய தரவுகள் கிடைத்ததையடுத்து போயிங் மேக்ஸ் ரக விமானங்களை இயக்கத் தற்காலிகமாக தடை விதிப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் புதிதாக என்ன கண்டுபிடித்தது?

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளான பகுதியில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் இணைந்து எஃப் ஏ ஏ இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டது.

போயிங் நிறுவனம் என்ன சொல்கிறது?

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து முழு நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும் எஃப் ஏ ஏ மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பபு வாரியம் ஆகியவற்றுடன் நடத்திய ஆலோசனையின் பேரில் எச்சரிக்கை காரணமாகவும், விமான பாதுகாப்பு குறித்து அதில் பயணிக்கும் பொது மக்களுக்கு முழு உத்தரவாதமும் நம்பிக்கையும் அளிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் தனது மேக்ஸ் ரக விமானத்தின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

'' விசாரணையாளர்களுடன் இணைந்து இந்த விபத்துக்கான காரணங்களை புரிந்துகொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். பாதுகாப்பை மேம்படுத்தவும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஆவண செய்கிறோம்'' என போயிங் நிறுவன தலைவர் டென்னிஸ் முலென்பர்க் தெரிவித்துள்ளார்.

போயிங் நிறுவனம் தனது மேக்ஸ் ரக விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் சரிந்தன.

கடந்த வாரம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குளானதில் இருந்தே போயிங் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டதட்ட 26 பில்லியன் டாலருக்கு குறைந்துள்ளது.

''இதில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானம் ஆகியவற்றுக்கும் விபத்து தொடர்பாக மிக நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. அதாவது இரு விபத்திலும் விமானம் பறக்கத் தொடங்கிய பிறகு வான் வெளியில் அதன் வழித்தடத்தில் சென்ற பாங்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது'' என்கிறார் எஃப் ஏ ஏ செயல் நிர்வாகி டேன் எல்வேல்.

ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா

டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற இந்தியா தொடரை 2-3 என்று இழந்தது.

273 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதலே தடுமாறியது.இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 237 ரன்கள் மட்டும் எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, ஒருநாள் தொடரையும் இழந்தது.

படத்தின் காப்புரிமை Robert Cianflone

ராஞ்சியில் நடைபெற்ற முந்தைய போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை எடுத்த உஸ்மான் கவாஜா, நேற்றைய போட்டியில் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். அவரே ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

விரிவாக படிக்க - டெல்லி போட்டியில் அதிர்ச்சி தோல்வி: ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா

''நான் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை நம்புபவன்'' - ராகுல் காந்தி பேட்டி

நாகர்கோவிலில் தனது தமிழக தேர்தல் பிரசாரத்தைத் துவக்கியிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு செல்வதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் எப்படி இதுவரை செய்தியாளர் சந்திப்பை நடத்தாமல் இருக்கிறார். எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால், பிரதமர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

''தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் ஆட்சி செய்த மாநிலங்களுக்கும் இடையில் பா.ஜ.க. பாரபட்சம் காட்டுகிறது. அது தேச விரோதமானது. நாங்கள் அப்படிச் செய்வதில்லை. நான் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை நம்புபவன். நாட்டை பிரதமர் அலுவலகத்திலிருந்து வழிநடத்துவதை விரும்பாதவன். பிரதமர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம், பஞ்சாயத்து என எல்லா அமைப்புகளாலும் தேசத்தை வழிநடத்த வேண்டும்'' என ராகுல் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார்.

ராகுலின் பேட்டியை முழுமையாக படிக்க - "நாட்டை நாக்பூரிலிருந்து கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்": ராகுல் காந்தி

ஆபாச காணொளிகளை நீக்குவது எப்படி?

சமுக ஊடகங்களில் பெண்கள் எப்படி விழிப்புணர்வோடு இயங்குவது என்பது குறித்து பெண்ணுரிமை செயற்பாட்டாளர் பத்மாவதி பிபிசி தமிழிடம் பேசினார்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்த சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாக பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.image removal processing மூலமாக ஆபாசமாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கி விட முடியும். கூகுள் வலைத்தளத்தில் reverse image processor பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிர பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.

Image caption பத்மாவதி.

யூ ட்யூப் ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும். xxx வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில் abuse reporting form என்று ஒரு படிவம் உள்ளது.அந்த படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பதிவேற்ற பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்த காணொளியை நீக்கி விடுவார்கள் என்கிறார் பத்மாவதி.

விரிவாக படிக்க - பொள்ளாச்சி விவகாரம்: ஆபாச காணொளிகளை நீக்குவது எப்படி? - பத்மாவதி விளக்கம்

'முதலாளித்துவத்திற்கு தீவிர அச்சுறுத்தல்'

பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வுகளால், முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக எச்சரிக்கிறார், இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.

பிபிசி ரேடியோ 4- நிகழ்ச்சியில் பேசிய ராஜன், பொருளாதார சமத்துவமின்மை ஏற்படும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், ஏனென்றால், பெரும்பான்மையோருக்கு சமவாய்ப்புகள் கொடுக்கபடுவதில்லை என்றும், அவ்வாறு சம்பவிக்கும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என்று தாம் கருதுவதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். முன்பெல்லாம், சாதாரண கல்வி கற்றோருக்கும் கூட ஒரு நடுத்தர வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க - ‘முதலாளித்துவத்திற்கு தீவிர அச்சுறுத்தல்’ - ரகுராம் ராஜன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :