பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம்

பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம் படத்தின் காப்புரிமை TOLGA AKMEN

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இப்போதைய பிரெக்ஸிட் திட்டப்படி இந்த மாதம் 29-ம் தேதி பிரிட்டன் வெளியேற வேண்டும். ஆனால், இப்படி வெளியேறும்போது ஐரோப்பிய நாடுகளுடன் பிரிட்டன் பேண வேண்டிய உறவுகள் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுவிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதற்கெனத் தயாரிக்கப்பட்ட முதல் வரைவு ஒப்பந்தத்தை ஜனவரியில் நிராகரித்தது பிரிட்டன் நாடாளுமன்றம். இதையடுத்து வரைவு ஒப்பந்தம் புதிதாகத் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்டது. இதன் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் எதிராக வாக்களித்தனர்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தாக்கல் செய்த இந்த ஒப்பந்த நகல், 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது வரைவு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாமா என்று புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றம் விவாதித்து, அந்த யோசனையை நிராகரித்தது.

இதையடுத்து அடுத்த நாளே, பிரெக்ஸிட் திட்டத்தை தாமதிக்கும்படி கோரலாமா என்று விவாதித்த நாடாளுமன்றம், அது தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தியது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடக்கும் வாக்கெடுப்பு இது.

இதில் 413 எம்.பி.க்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும், தாமதிக்க வேண்டும் என பிரதமர் தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோர வேண்டும் என்று 413 பேரும், கூடாது என்று 202 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 211 வாக்குகள் வித்தியாசத்தில் தாமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை UKPARLIAMENT/MARK DUFFY

தாம் மீண்டும் அடுத்த வாரம் தாக்கல் செய்யவுள்ள பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதாக இருந்தால், மூன்று மாதம் தாமதிப்பதற்கு தாம் கோரிக்கை வைக்க முடியும் என்று பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.

மீண்டும் தெரீசா மே-வின் வரைவு ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் நீண்ட கால தாமதத்தைக் கோர முடியும். ஆனால், தாமதக் கோரிக்கைகளுக்கு பிரிட்டன் அல்லாத 27 ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

வியாழக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் தாமதிக்கும் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

எனவே, தாமதிக்க கோரிக்கை விடுக்கவேண்டும் என்ற தீர்மானம் வெற்றி பெறுவதற்கு தொழிலாளர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வாக்குககளையே பிரதமர் தெரீசா மே நம்பியிருக்க வேண்டியிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :