நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

இறந்த ஃபராஜ் ஆஷன் (இடது), மற்றும் காயமடைந்த ஜகாங்ஹீர் (வலது)
Image caption இறந்த ஃபராஜ் ஆஷன் (இடது), மற்றும் காயமடைந்த ஜகாங்ஹீர் (வலது)

நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களில் தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட ஐந்து இந்தியர்கள் பலியாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரி நடத்திய தாக்குதலில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த 31 வயதான ஃபராஜ் ஆஷன் என்பவரும், குஜராத்தின் பாருஷ் நகரத்தை பூர்வீகமாக கொண்ட முசா வாலி சுலேமான் பட்டேல் ஆகிய இருவர் உள்பட மொத்தம் ஐந்து பேர் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரகம், "கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை குடும்பத்தினர் தெரிந்துக்கொள்வதற்காக சிறப்பு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Mark Tantrum
Image caption ஜெசிந்தா ஆர்டர்ன்

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிரைஸ்ட்சர்ச் நகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், "கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், அந்த தாக்குதலை தொடுப்பதற்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் முன்னதாக அதுகுறித்த அறிக்கை ஒன்றை, தனக்கு உள்பட 30 பேருக்கு மின்னஞ்சல் செய்தார்" என்று கூறினார்.

இருப்பினும், அந்த மின்னஞ்சலில், தாக்குதல் நடத்தப்படுவதற்காக குறிப்பிட்ட காரணமோ அல்லது நிகழ்விட தகவலோ அதில் குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மின்னஞ்சல் தனக்கு கிடைக்கப்பெற்ற இரண்டே நிமிடங்களில் அதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

"ஆஷனுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அல் நூர் மசூதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வு குறித்து தெரியவந்ததும் அவரின் மொபைலுக்கு அழைத்தேன்.

ஆனால் எந்த பதிலும் இல்லை. இதைக்கேட்டு எனது மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார். பிறகு எனது மகனுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது" என்று ஃபராஜின் தந்தை பிபிசி தெலுங்கு சேவையின் சங்கீதம் பிரபாகரிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இந்தியர் இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

"இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எனது சகோதரரான முசா வாலி சுலேமான் பட்டேல், மருத்துமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்துவிட்டார்" என்று அவரது சகோதரரான ஹஜி அலி பட்டேல் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பாருஷ் நகரத்தை சேர்ந்த முசா, இந்த தாக்குதலுக்கு சற்று முன்னதாக தான் தனது மனைவியுடன் மசூதிக்கு செல்லவுள்ளதாக அலைபேசியில் தெரிவித்தாக ஹஜி கூறுகிறார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்தில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய நியூசிலாந்தின் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி, 'ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும், இந்திய வம்சாவளியை சேந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை என்றும், இதனை இன்னமும் நியூசிலாந்து அரசு உறுதி செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் இந்த சம்பவத்தில் ஹைதாரபாத்தை சேர்ந்த அகமத் இக்பால் ஜஹான்கீரும் காயமடைந்துள்ளார்.

"எனது சகோதரர் 15 வருடங்களாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். பல வேலைகளை செய்து வெற்றிபெற முடியாமல் அனைத்தையும் விடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு முன் ஓர் உணவு விடுதியை தொடங்கினார். எனது சகோதரர் இந்த துப்பாக்கிச் சம்பவத்தில் பலமாக காயமடைந்துள்ளார். ஆனால் அறுவை சிகிச்சையில் குண்டு அகற்றப்பட்டு தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறார்."

"எனது தாயிடம் அவர் வெள்ளியன்று பேசினார். எனது தாய்க்கு 80 வயது அவரால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தாங்கி கொள்ள முடியாது. ஆனால், தற்போது அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. தெரிந்த நேரத்தில் இருந்து அதிர்ச்சியில் உள்ளார்" என்கிறார் காயமடைந்த அகமத் இக்பால் ஜஹான்கிரீன் சகோதரர் குர்ஷித் ஜஹான்கீர்

என்ன நடந்தது?

முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல்-நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்துபவர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இந்திய நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தி வெளியிட்டிருந்தன.

தாக்குதல் நடப்பது குறித்து உறுதிசெய்யப்பட்ட 15 நிமிடங்களில் அந்நகரம் முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், அலுவவலகங்கள் என அனைத்தும் மாணவர்கள், ஊழியர்களை வெளியேற்றாமல் மூடப்பட்டன. மேலும், இரண்டு மசூதிகளுக்கு அருகிலுள்ள வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் காவல்துறையினரால் செயலிழக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :