நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு; தாக்குதல்தாரி கைது - ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவரா?

துருக்கி படத்தின் காப்புரிமை @POLITIEUTRECHT / TWITTER

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், இதற்கு காரணமான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில் சிலருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளது.

37 வயதான கோக்மென் டானிஸ் என்ற அந்த துருக்கி நாட்டு நபர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கட்டடத்தில் சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரியின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

நேற்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச்சூடை தொடர்ந்து யூட்ரெக்ட் நகரம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. மேலும். நகரில் இருந்த கல்விநிலையங்கள் உடனடியாக மூடப்பட்டது.

முன்னதாக, திங்கள்கிழமையன்று உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு, 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், யூட்ரெக்ட் நகரம் முழுவதும் டிராம் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

சதுக்கத்தில் அதிகாரிகள்உடனே குவிந்தனர். அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை EPA

இந்த சம்பவம் குறித்து "மிகுந்த கவலைக் கொள்வதாக" தெரிவித்த அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே, இந்த வாரத்தில் நடைபெற இருந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை ரத்து செய்தார்.

"ஒரு ஆள் துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்" என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்தார்.

காயடைந்த பெண் ஒருவரை கைகள் மற்றும் அவரது ஆடைகளில் ரத்தம் வழியப் பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் ஒருவர் கூறினார்.

"அவரை என் காருக்கு அழைத்து வந்து உதவினேன். போலீஸ் வந்தபோது அவர் மயக்கத்தில் இருந்தார் " என அவர் குறிப்பிட்டார்.

யார் இந்த தாக்குதல்தாரி?

திங்கள்கிழமையன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த துப்பாக்கிசூடு சம்பவம் ஒரு தீவிரவாத செயலாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். ஆனால், மாலையில் இது குறித்து பேசிய ஓர் அரசு வழக்குரைஞர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடும்ப காரணங்களால் நடைபெற்று இருக்கலாம் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை EPA

சந்தேக தாக்குதல்தாரியான் கோக்மென் டானிஸ் யாரென்று நெதர்லாந்து நாட்டு போலீசார் அறிந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

பிபிசி துருக்கி சேவைப்பிரிவிடம் பேசிய ஓர் உள்ளூர் தொழிலதிபர், சந்தேக நபரான கோக்மென் டானிஸ் முன்பு செச்சன்யா குடியரசில் நடந்த போராட்டங்களில் பங்குபெற்றார் என்று கூறினார்.

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐஎஸ் குழு உள்பட பல ஜிஹாதி குழுக்கள் செச்சன்யா பகுதியில் மிகவும் தீவிரமாக இருந்ததாக அவர் கூறினார்.

'' ஐஎஸ் குழுவுடன் தொடர்பு இருந்ததாக கோக்மென் டானிஸ் முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்'' என்று அந்த தொழிலதிபர் பிபிசியிடம் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்