போயிங் மேக்ஸ்-8 விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை ரத்து செய்த கருடா நிறுவனம்

போயிங் நிறுவனத்தின் ஆர்டரை ரத்து செய்யும் விமான நிறுவனங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டு விமான விபத்துகளுக்குப் பிறகு, சர்ச்சைக்குள்ளாகியுள்ள போயிங் நிறுவனத்தின் '737 மாக்ஸ் 8' ரகத்தை சேர்ந்த 49 விமானங்கள் வாங்குவதற்கு முன்பு வழங்கிய ஆர்டரை ரத்து செய்துள்ளது இந்தோனீசியாவின் கருடா விமான நிறுவனம்.

இந்த இரண்டு விபத்துகளுக்குப் பிறகு, போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகத் தெரிகிறது.

போயிங் நிறுவனத்தின் மாக்ஸ் வகை விமானம் மீதான நம்பிக்கையை பயணிகள் இழந்துவிட்டதாக கருடா இந்தோனீசியா விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் இந்த குறிப்பிட்ட ரக விமானம், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்தில் சிக்குவது கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபர் மாதம் 'லயன் ஏர்' விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

"எங்களது ஆர்டரை ரத்து செய்யக்கோரி போயிங் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறிய கருடாவின் செய்தித்தொடர்பாளர் ரோஷன் போயிங் நிறுவனத்திடமிருந்து பதிலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கள் வாடிக்கையாளர்கள் விவாதிப்பதைப்பற்றி கருத்துத் தெரிவிக்க முடியவில்லை என்று போயிங் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கருடா கடந்த 2014ஆம் ஆண்டு ஐம்பது 737 மாக்ஸ் 8 ரக விமானங்களை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு விமானம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்திய விமான விபத்துகளுக்கு பிறகு போயிங் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் விரும்பிய விமான நிறுவனங்களில் கருடாவும் ஒன்று. ஆனால்,ஆர்டரை ரத்து செய்யும்படி கோரிய முதல் நிறுவனம் கருடாதான்.

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கும், லயன் ஏர் விமான விபத்துக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வல்லுநர்கள், இரண்டு விபத்துக்களுக்கும் இடையே தெளிவான தொடர்பிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விமான இன்ஜினின் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படும்போது, விமானம் தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டு, அதன் முன்பகுதி கீழ்நோக்கி செல்லும் வகையில் புதிய மென்பொருளை போயிங் நிறுவனம் புகுத்தியதே சமீபத்திய விமான விபத்துகளுக்கு காரணமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

'லயன் ஏர்' விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தனது மென்பொருளை மேம்படுத்தவுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :