"டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்யவில்லை" - முல்லர் விசாரணை அறிக்கை

டொனால்டு டிரம்ப் படத்தின் காப்புரிமை MANDEL NGAN
Image caption டொனால்டு டிரம்ப்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லர் விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், "கூட்டு சதியும் இல்லை, நீதிக்கு எவ்வித தடையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

முல்லரின் விசாரணையை அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வந்த டிரம்ப், "இதுபோன்ற விஷயங்களை நாடு கடந்து செல்ல வேண்டியது அவமானகரமான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை தேடி கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்ட விசாரணை நடத்தி வந்தார் ராபர்ட் முல்லர். அதன் ஒரு பகுதியாக டிரம்பின் பல நெருங்கிய முன்னாள் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

"இந்த அறிக்கையில் அதிபர் குற்ற செயலில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்படாத அதே சூழ்நிலையில், அவர் குற்றமற்றவர் என்றும் குறிப்பிடப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் முல்லர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?

படத்தின் காப்புரிமை Alamy
Image caption ராபர்ட் முல்லர்

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்பது குறித்த இந்த விசாரணை அறிக்கையின் முக்கிய கூறுகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் பார் தாக்கல் செய்துள்ளார்.

"அமெரிக்காவை சேர்ந்த குடிமகனோ அல்லது டிரம்பின் பிரச்சார குழுவை சேர்ந்தவர்களோ ரஷ்யாவுடன் சேர்ந்து சதித்திட்டமோ அல்லது வேண்டுமென்றே ஒத்துழைக்கவோ இல்லை என்று சிறப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று பாரின் கடிதத்தின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் இரண்டாவது பகுதியில் நீதியை தடைசெய்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

"நீதியை தடை செய்யும் வகையில் ஏதாவது செயல்பாடு இருந்துள்ளதா என்பது குறித்து சிறப்பு விசாரணையின் அறிக்கையில் எவ்வித வகையிலும் இறுதி முடிவு குறிப்பிடப்படவில்லை."

நீதிக்கு தடை ஏற்படுத்தும் வகையிலான குற்றத்தை அதிபர் டிரம்ப் இழைத்தார் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று பார் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லரின் விசாரணை அறிக்கையிலிருந்து மேலதிக விவரங்களை வெளியிட உள்ளதாக அந்த கடிதத்தின் குறிப்பிட்டுள்ள பார், ஆனால் அதிலுள்ள சில தகவல்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று கூறுகிறார்.

அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு?

படத்தின் காப்புரிமை BERIT ROALD
Image caption ஹிலாரி கிளிண்டன்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரிக்கு எதிராக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள், சமூக வலைதளங்களில் போலி செய்திகளை ரஷ்யா வெளியிட்டது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இந்த நடவடிக்கையில் டிரம்பின் அணியை சேர்ந்தவர்கள் இருந்தனரா என்பதை முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்தது.

டிரம்ப் தேர்தல் குழுவின் மூத்த அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனர் என தெரியவந்துள்ளது. ஆனால் முதலில் அது வெளிப்படையாக கூறப்படவில்லை.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்தார். முன்னாள் ஆலோசகரான ஜார்ஜ் பாப்புடோபுலஸ் தனது ரஷ்ய போக்குவரத்து குறித்து எஃப் பி ஐ யிடம் பொய் கூறியதாக ஒப்புக் கொண்டார்.

இதுவரை டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் டிரம்பின் பதவியுடன் தொடர்புடைய நான்கிற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து டிரம்ப் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது குற்றம்சுமத்த வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :