தாய்லாந்தில் குழப்பம் : தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்

தாய்லாந்தில் தேர்தல் படத்தின் காப்புரிமை Getty Images

தாய்லாந்தில் 2014-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ராணுவத்தின் பிடியில் அரசு இருக்கிறது. அதன் பிறகு முதன்முறையாக தாய்லாந்தில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் முடிவுகளை முழுமையாக அறிவிக்காமல் இருப்பதால் தாய்லாந்தில் குழப்பம் நிலவுகிறது.

ராணுவ ஆதரவு பெற்ற கட்சியான பாலங் பிரச்சா ரத் கட்சி தேர்தல் முடிவுகளில் முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் முதலில் கூறியது. இதன் படி தற்போதைய பிரதமர் ஜெனரல் ப்ரயுத் சான்-ஒகாவின் தலைமையில் அரசு அமைக்கப்படவேண்டும். ஆனால் தொடர்ச்சியான புகார்கள் மற்றும் முறையற்ற தரவுகள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை வெளிவந்த முடிவுகள் என்ன?

ஞாயிற்றுக் கிழமை மாலை வாக்குப்பதிவு முடிந்தபிறகு 90%-த்துக்கும் அதிகமாக வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது. பாலங் பிரச்சா ரத் கட்சி 7.6 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதாவது முந்தைய பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவுடன் தொடர்புடைய ப்யு தாய் கட்சியை விட அரை மில்லியனுக்கும் மேல் அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 2001-லிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஷினவத்ரா ஆதரவாளர்களே வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தல் குறித்த முழு முடிவுகளையும் வெளியிடாமல் தாமதப்படுத்தும் தேர்தல் ஆணையம், ஏன் முழுமையாக முடிவுகளை வெளியிட முடியவில்லை என்பதற்கான காரணங்களை கூறவில்லை.

திங்கள் கிழமையன்று பல்வேறு உள்ளூர் ஊடகங்களும் தேர்தல் ஆணையம் கூறிய எண்ணிக்கைகளை மேற்கோள்காட்டி ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் வென்றிருக்கின்றன என்பதில் வெவ்வேறு எண்ணிக்கையை கூறுகின்றன.

திங்கள் கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் முதல்கட்ட முடிவுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. மேற்கொண்டு தகவல்களை இன்று வெளியிடுகிறோம் என கூறியுள்ளது ஆனால் அதிகாரப்பூர்வமாக முழுமையான முடிவுகள் மே 9 வரை வெளியிடப்படாது என தெரிவித்துள்ளது,

50 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர். இருப்பினும் 2014-க்கு பிறகு முதல் முறையாக நடந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாக 64% வாக்குப்பதிவுதான் பதிவானது. பலர் இந்த எண்னிக்கை குறித்து கேள்வி எழுப்பினர் மேலும் தேர்தல் முடிவுகளில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடையே இருந்த முரண்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜெனெரல் ப்ரயுத் சான் -ஒகா

தேர்தல் ஆணையத்தின் செயலர் ( பொது) சாருங்வித் பும்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் இது ’மனித தவறு’ என்றார்.

ஒருபுறம் தேர்தல் ஆணையம் முழுமையாக முடிவுகளை அறிவிக்காத நிலையில் ப்யு தாய் மற்றும் பிபிஆர்பி கட்சியினர் கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

''பலருக்கும் இது சாதாரண விஷயமில்லை'

பேங்காக்கில் இருந்து பிபிசியின் நிக் பீக்

ராணுவ ஆதரவு கட்சி மூன்றாமிடம் பிடிக்கும் என பலரும் கணித்திருந்த நிலையில் எப்படி பெரு வாரியான மக்களின் வாக்குகளை பெற்றது என தாய்லாந்தில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் செயற்பாட்டளர்கள், செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

ஏன் வாக்குப்பதிவு குறைந்தது? ஏன் பல ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டது? ஏன் நியூசிலாந்தில் போடப்பட்ட 1500 ஓட்டுகள் எண்ணப்படவில்லை என பல்வேறு பிரத்யேகமான கேள்விகள் கேட்கப்பட்டன.

திங்கள் கிழமை மதிய நிலவரப்படி #ECisBust எனும் ஹேஷ்டேக் 8 லட்சம் தடவை ரீட்வீட் செய்யப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் குழப்பம் நிலவுவதையொட்டி ஒரு பிரபல செயற்பாட்டளர் சோம்பட் பூங்கமாஓங் தேர்தல் ஆணைய தலைவருக்கு ஒரு மிகப்பெரிய கால்குலேட்டரை பரிசளித்தார்.

முன்னதாக ஞாயிற்றுக் கிழமை வாக்கு எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடும் போது தேர்தல் ஆணையர் ''என்னிடம் கால்குலேட்டர் இல்லை.அதனால் தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும்'' எனக்கூறியிருந்தார்.

தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இந்த சூழலில் உறுதியாக சொல்வது கடினம்.

ஆனால் எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக இம்முறை கோப அலைகள் உருவாக்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்