"துருக்கி விமானங்கள் என் ஹெலிகாப்டரை நடுவானில் துன்புறுத்தின" - கிரேக்க பிரதமர் புகார் - மற்றும் பிற செய்திகள்

(கோப்புப்படம்)
படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தான் சென்ற ஹெலிகாப்டருக்கு துருக்கியின் போர் விமானங்கள் 'தொந்தரவு' கொடுத்ததாக கிரேக்க பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) கிரேக்கத்தின் வான் எல்லைக்குள் நுழைந்த துருக்கியின் போர் விமானங்கள், தனது ஹெலிகாப்டரை 'தாழ்ந்து பறக்கும்' நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சீப்ரஸ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, துருக்கியின் செயலை அவர், "அர்த்தமற்ற முட்டாள்தனமான நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அலெக்சிஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள துருக்கி ராணுவம், தங்கள் நாட்டுப் போர் விமானங்கள் வழக்கமான ஒத்திகையிலேயே ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

கிரேக்கம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள இஜியன் தீவு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - கள ஆய்வு

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் மீர் மொஹல்லா பகுதியின் ஹாஜன் என்ற ஊரில், ஏறக்குறைய சிதைந்து போயிருக்கும் ஒரு வீட்டின் முன் மக்கள் கூட்டமாக நிற்கின்றனர்.

மொஹம்மத் ஷஃபி மீர் என்பவரின் வீடு அது. அவருடைய 12 வயது மகன் ஆதிஃப் அஹமத் மீர் என்ற சிறுவனையும் அவனது சித்தப்பாவையும் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் வீட்டை சுற்றி வளைத்ததும், தீவிரவாதி்களுடன் மோதல் ஏற்பட்டது. பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த சிறுவனை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர்.

அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

வியாழனன்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் வீடு மிகவும் சேதமடைந்துவிட்டது. வீட்டிற்கு அருகில் போடப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்திருக்கும் ஆதிஃபின் தந்தை அமைதியாக இருக்கிறார்.

சினூக் ஹெலிகாப்டர் இப்போது இந்திய விமான படையில் - இதில் என்ன சிறப்புகள்?

படக்குறிப்பு,

சினூக் ஹெலிகாப்டர்

திங்களன்று இந்திய விமான படையில் சினூக் ஹெலிகாப்டர் புதியதாக இணந்துள்ளது. சினூக் ஹெலிகாப்டர்களை ''ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்தது'''என இந்திய விமான படை கூறுகிறது.

''இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது. பல்வேறு வகையான நிலப்பரப்பை கொண்டிருக்கும் இந்தியாவில் செங்குத்தாக மேலே எழும்பும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது'' என்கிறார் விமான படை தலைமை படைத்தளபதி பி எஸ் தானோ.

''இந்த ஹெலிகாப்டர் இந்திய விமான படை பல்வேறு ராணுவச் சரக்குகளை மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்ல உதவும். பீரங்கி துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை மட்டும் சுமந்துச் செல்ல பயன்படபோவதில்லை, இந்த ஹெலிகாப்டர் மூலமாக மனிதநேய உதவிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் பேரழிவை எதிர்கொள்பவர்களை காப்பாற்ற உதவும்'' என தானோ கூறினார்.

"நாங்கள் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம்?"

படக்குறிப்பு,

தில்ஷத்

"இந்த வீட்டை காலி செய்துகொண்டு நான் என்னுடைய கிராமத்திற்கு செல்லவுள்ளேன். என்னுடைய குழந்தைகளை அவர்கள் என் கண்ணெதிரே தாக்கியதை நான் நேரடியாக பார்த்தாலும், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் இங்கு தொடர்ந்து வசிக்க விரும்பவில்லை. நான் கடன் வாங்கி இந்த வீட்டை கட்டியிருந்தாலும், அச்சத்தின் காரணமாக நான் இங்கு விரும்பவில்லை" என்று சொல்லும்போதே முகமது சஜித் அழத் தொடங்குகிறார்.

அவருக்கு அருகே அமர்ந்திருக்கும் ஒருவர் சஜித்தின் கண்ணீரை துடைத்து விடுகிறார். சஜித்தின் இடது கையில் கட்டு போடப்பட்டுள்ளதுடன், அவரது கால்களில் தீவிரமான காயங்கள் தெரிகின்றன. இவருக்கு ஏன்? எப்படி? எதற்கு? இந்த நிலை ஏற்பட்டது என்ற கேள்விக்கு அவருக்கே பதில் தெரியவில்லை.

திருநங்கை வாக்காளர்கள் அதிகம் உள்ள வட சென்னை மக்களவைத் தொகுதி

வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சுதா, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக அல்லது அதிமுக என இரண்டு பெரும் கூட்டணியில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்க்கமாக யோசித்துவருகிறார்.

சுதாவைப் போன்ற திருநங்கை வாக்காளர்கள் கடந்த இரண்டு தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயாக கடமையை செய்துவருவதில் பெருமிதம் கொள்வதாக கூறுகின்றனர்.

வரவுள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றப் பொது தேர்தலின்போது தமிழகத்தில் 5,472 திருநங்கைகள் வாக்களிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் திருநங்கை வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாக வடசென்னை தொகுதி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி சுமார் 447 திருநங்கைகள் இங்கு வாக்களிக்க உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :