பிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த எம்.பி.க்கள்

பிரெக்ஸிட் படத்தின் காப்புரிமை HOC

பிரெக்ஸிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய தெரிவை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் நடவடிக்கையை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தலைமைக்கு எதிரானதாக பார்க்கப்பட்ட இந்த மசோதாவிற்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 302 வாக்குகளும் பதிவானது. 27 வாக்குகள் வித்தியாசத்தில் இது வெற்றி பெற்றது.

இதன் மூலம், புதன் கிழமை அன்று நடைபெறும் பிரிட்டனின் நாடாளுமன்ற கூட்டத்தின்போது பிரெக்ஸிட் தொடர்பாக தங்கள் முன் உள்ள தெரிவுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே விவாதித்து இறுதி செய்வார்கள்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சர் ஆலிவர் லிட்வின் கொண்டுவந்த இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்ப்பியன், பிரெக்ஸிட் விவகாரத்தில் 'அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

"பிரெக்ஸிட் விவகாரத்தில் அரசாங்கம் தோற்றுவிட்டது; ஆனால், நாடாளுமன்றம் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெரீசா மே

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக துறை, "திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு 'ஆபத்தான, கணிக்கவியலாத முன்னுதாரணத்தை எதிர்காலத்திற்கு ஏற்படுத்தியுள்ளது' என்று இதுகுறித்து தெரிவித்துள்ளது.

"நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் வகையிலான செயல்பாட்டு முறையை அளிப்பதற்கு அரசாங்கம் தெளிவான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது, அந்த ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளாமலே வெளியேறுவதற்கு எதிராக பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்களித்தது.

வெளியேறுவதை தாமதப்படுத்த ஒப்புதல்

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற தீர்மானம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இப்போதைய பிரெக்ஸிட் திட்டப்படி இந்த மாதம் 29-ம் தேதி பிரிட்டன் வெளியேற வேண்டும். ஆனால், இப்படி வெளியேறும்போது ஐரோப்பிய நாடுகளுடன் பிரிட்டன் பேண வேண்டிய உறவுகள் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதற்கெனத் தயாரிக்கப்பட்ட முதல் வரைவு ஒப்பந்தத்தை ஜனவரியில் நிராகரித்தது பிரிட்டன் நாடாளுமன்றம். இதையடுத்து வரைவு ஒப்பந்தம் புதிதாகத் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்டது. இதன் மீது கடந்த மார்ச் 13ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான இதையடுத்து அடுத்த நாளே, பிரெக்ஸிட் திட்டத்தை தாமதிக்கும்படி கோரலாமா என்று விவாதித்த நாடாளுமன்றம், அது தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தியது.

அதில் பிரதமர் தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், தாமதிக்க வேண்டும் என்று 413 பேரும், கூடாது என்று 202 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 211 வாக்குகள் வித்தியாசத்தில் தாமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :