ஃபேஸ்புக்: வெள்ளை தேசியவாதத்தை கொண்டாடுகிறீர்களா? - இனி முடியாது, மற்றும் பிற செய்திகள்

ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளை தேசியவாதத்தை மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும், விதந்தோதும் பதிவுகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டும் அடுத்தவாரம் முதல் தடை செய்ய இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு தடை செய்யும் திறனை மேம்படுத்த இருப்பதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

அதுபோல, புண்படுத்தும் சொற்களை ஃபேஸ்புக்கில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நரேந்திர மோதி உரை: தேர்தல் நடத்தை விதிமீறலா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

பிரதமர் மோதி ஆற்றிய உரை தேர்தல் நடத்தை விதிமீறிலா என்பது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

எனவே இன்று பிரதமர் மோதி உரையாற்றியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதா என்று விசாரிக்கப்படவுள்ளது.

விரிவாக படிக்க: நரேந்திர மோதி உரை: தேர்தல் நடத்தை விதிமீறலா? விசாரிக்க குழு


"குடும்பத்திற்கு 72 ஆயிரம் அளிக்கும் 'நியாய்' திட்டம் சாத்தியமே": ப. சிதம்பரம்

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டில் உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதிசெய்யும் 'நியாய்' திட்டத்திற்கு தேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் செலவாகுமென முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

"காங்கிரஸ் காரிய கமிட்டி 'நியாய்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. தேர்தல் அறிக்கை வெளியாகும்போது இந்தத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும். இந்தியாவில் உள்ள ஐந்து கோடிக் குடும்பங்களுக்கு, அதாவது, சுமார் 25 கோடி மக்களுக்கு இந்தத் திட்டத்தினால் பயன் கிடைக்கும்." என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம் விளக்கினார்.

விரிவாக படிக்க:"குடும்பத்திற்கு 72 ஆயிரம் அளிக்கும் 'நியாய்' திட்டம் சாத்தியமே": ப. சிதம்பரம்


ஆரணி மக்களவைத் தொகுதி: பட்டுப் போன பட்டுப் பொருளாதாரம் தேர்தலைத் தீர்மானிக்குமா?

படத்தின் காப்புரிமை Getty Images

ஆரணி, பட்டுக்குப் பெயர் போன நகரம். அதிகம் பிரபலமாகாத இன்னொரு முகம் இந்தத் தொகுதிக்கு உண்டு. அதுதான் அரிசி உற்பத்தி.

களம்பூரைச் சுற்றி இருக்கும் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் தமிழக நுகர்வுக்கான நயம் அரிசிகளை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கிறது. தமிழகத்துக்கு வெளியேயும் செல்கிறது களம்பூர் அரிசி. இது தவிர தொகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் விவசாயத்தையும், சிறுவணிகம் சார்ந்து இயங்கும் சிறு நகரங்களையும் கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய சட்டமன்றப் பிரிவுகளையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்றப் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஆரணி மக்களவைத் தொகுதி.

சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் மிக அருகில் அமைந்துள்ள செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஷூ தொழிற்சாலை உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன.

ஒருபுறம் உழவு, நெசவு போன்ற பாரம்பரியத் தொழில்களின் நசிவு, மறுபுறம் செய்யாறு சிப்காட்டில் உருவாகும் ஆலைத் தொழில்கள். மக்களவைத் தேர்தலில் இவை எப்படி எதிரொலிக்கும்?

இந்த செய்தியை முழுமையாகப் படிக்க:ஆரணி மக்களவைத் தொகுதி: பட்டுப் போன பட்டுப் பொருளாதாரம் தேர்தலைத் தீர்மானிக்குமா?


கோவையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை

படத்தின் காப்புரிமை SPUKKATO

கோவை துடியலூர் பகுதியில் காணாமல்போன ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

திங்கள்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர்.

விரிவாக படிக்க:கோவையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை


செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை 7-8 ஆண்டுகால உழைப்பின் பலன்

Image caption செல்வமூர்த்தி.

இந்தியா புதன்கிழமை பரிசோதித்துப் பார்த்த செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையை ராணுவத்தில் சேர்ப்பதற்கு அதிக காலம் எடுக்காது என்று இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உயரதிகாரி டபிள்யூ.செல்வமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த 7-8 ஆண்டுகளாகப் பாடுபட்டுதான் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர் புதன்கிழமை நடந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றிருப்பதாகவும், தரையில் இருந்து ஏவக்கூடிய இந்த செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை சுமார் 300 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை விரிவாகப் படிக்க: "செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க அதிக காலம் ஆகாது"


இலங்கையில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது - மைத்ரிபால சிறிசேன

ஜெனிவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள விடயங்களை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை - மீகஹதென்ன பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட காணிகள் (நிலங்கள்), அதன் உரிமையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அவற்றை விடுவிக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இச்செய்தியை முழுமையாகப் படிக்க:இலங்கையில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது - மைத்ரிபால சிறிசேன

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :