பிரெக்ஸிட்: இந்திய வம்சாவளியினரை எப்படி பாதிக்கிறது?

இந்திய வம்சாவளி எம் பி ப்ரீத் கவுர் கில் படத்தின் காப்புரிமை TWITTER / PREET KAUR GILL
Image caption இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பின ப்ரீத் கவுர் கில்

பிரெக்ஸிட் ஒப்பந்தந்தால் பிரிட்டனில் பெரும் குழப்பம் நிலவும் சூழலில், அங்குள்ள நிலை குறித்தும், ஒப்பந்தம் ஏதும் எட்டாத நிலை எதை உணர்த்துகிறது, இதனால் தெற்காசிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில்லிடம், பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ககன் சபர்வால் பேசினார்.

பர்மிங்ஹத்தில் உள்ள எட்க்பஸ்டனின் நாடாளுமன்ற உறுப்பின ப்ரீத் கில். நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான இவரின் தொகுதியில் 18 சதவீத வாக்காளர்கள் தெற்காசிய பின்னணியை கொண்டவர்கள்.

கேள்வி: உங்கள் தொகுதியில் உள்ள மக்கள் பிரெக்ஸிட் குறித்து என்ன சொல்கிறார்கள்?

பதில்: மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். இந்த அரசாங்கம் தகுதியற்று இருப்பதாக நினைக்கிறார்கள். நாட்டை பாதிக்கும் உண்மையான பிரச்சனைகளை பார்க்காமல், மக்களுக்கு நல்லது செய்ய இந்த அரசு தவறிவிட்டதாக நினைக்கின்றனர்.

குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வீடு இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்ற பல முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது, பிரெக்ஸிட் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி : தொழில்கள் எந்த நிலையில் இருக்கின்றன?

பதில்: நிறைய சிறு தொழில்கள் இங்கு இருக்கின்றன. சொல்லப்போனால், அதிக அளவிலான ஆசியர்கள் இங்கு கடை வைத்திருக்கிறார்கள். சிலர் சிறு தொழில் செய்கிறார்கள். மேலும் சிலர் பெரிய அளவிலும் தொழில் செய்கிறார்கள். தங்களது தொழில்களுக்கான தேவைகளை அரசாங்கம் கவனிப்பதில்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Mike Kemp

கேள்வி : உங்கள் தொகுதியில் உள்ள உள்ளூர் சமூகங்கள் பிரெக்ஸிட்டால் எந்த மாதிரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்?

பதில்: நான் மருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் பேசும்போது, அவர்கள் எல்லையில் என்ன நடக்கப் போகிறது என்ற கவலையுடன் இருக்கிறார்கள். நாங்கள் மருந்துகள் மற்றும் மருத்துவமனைக்கான உபகரணங்கள் அனைத்தையும் நம்பித்தான் இருக்கிறோம். எல்லையில் இருந்து வருவது தாமதமானால், நிச்சயமாக எங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான பொருட்கள் வந்து சேராது.

கேள்வி : ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் ஏப்ரல் 12ஆம் தேதி, விலகிவிடும். இது பிரிட்டனுக்கு சாதகமானது என்று நினைக்கிறீர்களா?

பதில்:அவ்வாறு நடப்பது, பிரிட்டனுக்கு எந்த விதத்திலும் சாதகமாக இருக்காது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இதனால் எந்த ஒரு பயனும் இல்லை. ஐரோப்பியாவுடனான 70 ஆண்டுகால உறவில் இருந்து இவ்வாறு விலகுவது சரியானதல்ல.

கேள்வி : உங்கள் வாக்காளர்கள் உங்களை என்ன செய்ய சொல்கிறார்கள்? இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும் என்கிறார்களா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா?

பதில்:ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டும் என்று என் தொகுதியில் 52.7 சதவீத மக்கள் வாக்களித்தனர். சரிபாதியாக வாக்குகள் பிரிந்திருக்கின்றன. இரண்டு வார்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் இரண்டு வார்டுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :