மிஷன் சக்தி: அமெரிக்காவுக்கு எதிர்ப்பு; விண்வெளியில் கை கோர்க்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு

India missile படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2018இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோதியுடன் எடுக்கப்பட்ட படம்.

விண்வெளியில் பல நாடுகளின் சட்டபூர்வமான, ஒருங்கிணைந்த, கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவும் முயற்சிக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது ரஷ்யா.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என அந்த அறிவிப்பில் அவர் கூறினார்.

இந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

'மிஷன் சக்தி' என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செயல்படுத்தப்பட்டது என்றார் மோதி.

படத்தின் காப்புரிமை Getty Images / afp
Image caption கோப்புப்படம்

இதற்கிடையில் செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்கள் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.

"விண்வெளியை அசுத்தமாக்க வேண்டாம். விண்வெளி என்பது நாம் வணிகம் நடத்தும் இடமாக இருக்க வேண்டும். நாம் சுதந்திரமாக அங்கு செயல்பட வேண்டும்" என்று இந்தியாவின் சோதனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷனாஹன் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்யா இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக எதிர்வினையாற்றியள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் என்ன சொல்கிறது?

''கடந்த மார்ச் 27-ம் தேதி இந்தியா செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுத பரிசோதனை செய்துள்ளதை தாழ்வான உயரத்தில் பறக்கும் ஒரு செயற்கைக்கோளை இடைமறித்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியுள்ளதன் வாயிலாக அறிகிறோம்.

இந்த சோதனை குறிப்பாக எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல என இந்தியத் தலைமை அறிவித்திருக்கிறது. மேலும் விண்வெளியில் ஆயுதப் போட்டியில் நுழையும் நோக்கம் இல்லை என்றும் விண்வெளியில் ஆயுதங்களை செலுத்துவதை தடுப்பது குறித்தும் இந்திய வெளியுறவு கொள்கை மீண்டும் உறுதியாக கூறியிருக்கிறது என்பதை இங்கே முன்னிலைப்படுத்துகிறோம்.

''ஆனால் அதே சமயம் ஆயுத கட்டுப்பாட்டு களத்தில் கணிசமான அளவு சூழ்நிலை சீரழிந்திருப்பதன் விளைவுதான் இந்தியாவின் இந்த நடவடிக்கை என்பதை நாம் கூற வேண்டும்'' என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

'ரஷ்யா திரும்பத் திரும்ப அமெரிக்காவின் அழிவு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்து வந்துள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை அழிப்பு அமைப்பு ஒருதலைப்பட்சமாக வரம்பற்ற வளர்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் விண்வெளியை ஆயுதக் களமாக மாற்ற முனையும் திட்டங்களை கைவிட அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. மற்ற நாடுகள் தங்களது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த, விண்வெளியில் தங்களது ஆயுத வலிமையை மேம்படுத்த திட்டமிட அமெரிக்காவின் நடவடிக்கைகளே காரணம்,'' என்கிறது ரஷ்யா.

''முழுக்க முழுக்க எட்டவே முடியாத ஒரு விஷயமான உலகளாவிய ராணுவ ஆதிக்க திட்டத்தை பித்துப்பிடித்தது போல செயல்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா, நிலைமையை உணர்ந்து தனது திட்டத்தை கைவிட்டு பொறுப்பான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

''உலகின் பல்வேறு பிராந்தியங்களில் ஆயுதப் போட்டி விரிவதை தடுக்க இன்னமும் சாத்தியமான வழிகள் உள்ளன. சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் பொறுப்புள்ள நாடுகளுக்கு உதவுவது முக்கியமானது ''

''ரஷ்யா தனது பங்கிற்கு விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவமளிக்கும்.

ரஷ்ய - சீன வரைவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்வெளியில் ஆயுத போட்டியை தடுக்க ஒருமித்த சிந்தனையுள்ள நாடுகளுடன் இணைந்து விண்வெளியில் பலதரப்பு நாடுகளின் சட்டபூர்வமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவ திட்டம் இருக்கிறது. விண்வெளியில் உண்டாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாக இது இருக்க வேண்டும். விண்வெளியில் ஆயுதம் வைத்திருப்பது முதன்மையான அரசியல் கடமையாக இருக்கக்கூடாது என்பது குறிப்பாக இதில் முக்கியமானது.

சர்வதேச குழுவின் இந்த கூட்டு முயற்சியில் தீவிரமாக இணைய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கிறோம்'' என ரஷ்யா கூறியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :