ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பூர்வகுடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை

அடிலெய்டு மைதானத்தில் பூர்வக்குடிகளுக்கு மறுக்கப்பட்ட நுழைவுச் சீட்டு படத்தின் காப்புரிமை Daniel Kalisz

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டியை காண வந்த பூர்வகுடி மக்களுக்கு டிக்கெட் வழங்கக் கூடாது என்று தனக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அதன் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

பூர்வகுடிகளின் கலாசாரத்தை கடந்த ஆண்டு கொண்டாடிய ஆஸி ரூல்ஸ் கால்பந்து போட்டியை காண வந்த அந்நாட்டின் பூர்வகுடி மக்கள் மைதானத்துக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறுமாறு அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக டிக்கெட் வழங்குநர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

காவல்துறையினரிடம் வந்த தகவல்களை சம்பந்தட்ட அதிகாரி தவறாக புரிந்துகொண்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அடிலெய்டு ஓவல் மைதான நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூர்வகுடிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கு மறுத்த பெண் ஏபிசி செய்தியிடம் பேசும்போது, "டிக்கெட் விற்பனையகத்தின் மேற்பார்வையாளர், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம், இனி பூர்வகுடிகளுக்கு டிக்கெட் வழங்க கூடாது என்று அறிவுறுத்தினார்," என்று கூறினார்.

"டிக்கெட் விற்பனையகத்தின் ஊழியர்கள் நகர காவல்துறையினரின் உத்தரவை அடுத்து, சூழ்நிலை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை யாருக்குமே சில மணிநேரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை," என்று டிக்கெட் விற்பனையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பூர்வகுடிகளுக்கு மைதான அனுமதி சீட்டு வழங்க மறுத்த, அதே ஊழியர் தான் சில ரசிகர்களிடம் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக பொய் சொன்னதாக கூறிய நிலையில், அதற்கு மறுதினமே அவர் பதவிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Daniel Kalisz

"டிக்கெட் வழங்குவது குறித்து மைதானத்தின் விற்பனையகத்திற்கு நாங்கள் எவ்வித உத்தரவையோ, வழிகாட்டுதலையோ வழங்கவில்லை" என்று பிபிசியிடம் பேசிய ஆஸ்திரேலிய காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"காவல்துறையினர் அளித்த தகவலை தவறாக புரிந்துகொண்ட டிக்கெட் விற்பனையகத்தின் மேற்பார்வையாளர், தவறு நேர்ந்த பிறகு கூட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று அடிலெய்டு ஓவல் மைதானத்தின் மேலாளர்களில் ஒருவரான டேரன் சாண்ட்லேர் பிபிசியிடம் கூறினார்.

"அடிலெய்டு ஓவல் மைதானத்திற்கு அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள், இங்கு பாகுபாடு எந்த விதத்தில் இருந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கோருவதுடன், இது மறுபடி நடைபெறாத வகையிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள அக்கார்ட் நட்சத்திர உணவகத்தின் ஊழியர் ஒருவர், விருந்தினர்களை இனரீதியாக பாகுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக உணவகத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் பற்றிய செய்திகள் வந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :