வெள்ளத்தில் சிக்கியபின் மாமரத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய் மற்றும் பிற செய்திகள்

அமெலியா மற்றும் அவரது மகள் படத்தின் காப்புரிமை UN
Image caption அமெலியா மற்றும் அவரது மகள்

இடாய் சூறாவளி காரணமாக மத்திய மொசாம்பிக்கில் இருந்து வெள்ளத்தில் இருந்து தப்பி, மாமரத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.

அமெலியா தனியாக வாழ்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது தனது இரண்டு வயது மகனுடன் மாமரத்தின் கிளை ஒன்றை பற்றிக்கொண்டார். அந்தக் கிளை மீதே தனது பெண் குழந்தை சாராவை ஈன்றெடுத்தார்.

இரண்டு நாள்கள் கழித்து அக்கம்பக்கத்தினர் அக்குடும்பத்தை மீட்டது. இந்த சூறாவளியில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்றதொரு அதிசயத்தக்க நிகழ்வு 20 ஆண்டுகளுக்கு முன் தெற்கு மொசாம்பிக்கில் நடந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய பெண் ஒருவர் ஒரு மரத்தில் தனது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ரோசிதா மபியாங்கோ எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்த 20 ஆண்டுகள் கழித்து சாராவும் மரத்தில் பிறந்திருக்கிறார்.

''நான் என்னுடைய இரண்டு வயது மகனுடன் வீட்டில் இருந்தேன், எந்தவித எச்சரிக்கையுடன் விடப்படாத நிலையில் தண்ணீர் எங்கள் வீட்டுக்குள் புகுந்தது. எனக்கு வேறு வாய்ப்புகளே இல்லை. அதனால் மரத்தில் ஏறிவிட்டேன். அங்கே எனது மகனுடன் தனியாக இருந்தேன்,'' என ஐநாவின் குழந்தைகள் முகமையான யுனிசெஃப்பிடம் அமெலியா தெரிவித்திருக்கிறார்.

அமெலியாவும் அவரது இரண்டு குழந்தைகளும் தற்போது பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். நல்ல உடல்நிலையுடன் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோசிதா மபியாங்கோவுக்கு தற்போது வயது 19. வெள்ளம் சூழ்ந்த நிலையில் ஒரு மரத்தில் இருந்த அவரும் அவரது தாயும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்ட செய்திகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

Image caption ரோசிதா மபியாங்கோ

உள்ளூர் நாளிதழான மெயில் மற்றும் கார்டியனிடம் பேசிய அவரது தாய் சோஃபியா '' எனக்கு நடந்த பிரசவம் மிகவும் வலிமிக்கதாக இருந்தது. நான் அழுதேன், கத்தினேன். சில சமயம் குழந்தை வெளியே வருவது போல தோன்றியது. ஆனால், ஒருவேளை பசியால் இப்படி கத்துகிறேனோ எனத் தோன்றியது. வெள்ளத்தில் பலர் தங்களைது உயிர் உடைமைகளை இழந்த கதை உண்டு. நானோ வெள்ளத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்,'' என தனது கதையை பகிர்ந்துள்ளார்.

ரோசிதா மபியாங்கோ பிபிசியிடம் பேசுகையில் '' அரசு எங்களுக்கு உதவித்தொகை அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்திருந்தது. மேலும் அமெரிக்க அரசாங்கத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல நிதி உதவியளிப்பதாக கூறியது. ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை,'' என்கிறார்.

'' எனது படிப்புக்கு எனது அம்மாதான் செலவு செய்கிறார். நான் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. சரி, எங்களுக்கு அரசு ஒரு வீடு கட்டித்தந்தது உண்மைதான். ஆனால் அது நல்ல நிலையில் இல்லை. மழை வந்தால் வீட்டில் நீர் கசியும். குறைந்தபட்சம் அரசு மராமத்து பணிக்காவது உதவ வேண்டும்'' என்கிறார்.

இரு நதிகள் பாயும் நிலத்தில் வசிப்பவர்கள் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்?

மக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.

"அன்று என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஆரோக்கியமாக இருந்திருப்பேன்" என்று தன் உரையாடலை தொடங்குகிறார் செல்வி.

செல்வி பணத் தேவைக்காக தனது சிறுநீரகத்தை சில ஆண்டுகளுக்கு முன் விற்றவர். இப்போதும் ஏழ்மையில் உழன்று கொண்டிருப்பவர். தனது தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போராடிக் கொண்டிருப்பவர்.

இரு நதிகள் ஓடும் மருத நிலமான ஈரோட்டில் அவரை சந்தித்தோம்.

விரிவாக படிக்க - ‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - மருத நில மனிதர்களின் துயர்மிகு கதை

ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிடுவதேன்?

தனது அரசியல் பயணத்தில் முதல் முறையாக, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி தோல்வியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் சிக்மங்களூரிலிருந்து போட்டியிட்டு அடுத்த ஆண்டே மக்களவை உறுப்பினரானார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக தானோ அல்லது குடும்பத்தினரோ போட்டியிடும் உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதி மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் கேரளாவிலிருந்தும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி (இடமிருந்து வலமாக)

ராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருந்த நிலையில் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அமேதி தொகுதியிலிருந்து வெற்றிபெற முடியாது என்ற பயத்தின் காரணமாகவே ராகுல் காந்தி தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது, இந்திரா காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து தற்போது ராகுலும் வாக்கு அரசியலில் தென்னிந்தியாவை சார்ந்து இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

வரலாற்றை திரும்பி பார்த்தால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

விரிவாக படிக்க - அன்று இந்திரா, சோனியா; இன்று ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிடுவதேன்?

நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது கவன ஈர்ப்பா, முன் மாதிரியா?

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை.

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளிடம் பேசினோம். அவர், "இங்கு இயல்பாகவே ஒரு சமத்துவமின்மை நிலவுகிறது. ஏறத்தாழ 50 சதவீதம் பெண்கள் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது சமூக அநீதி" என்கிறார்.

"நான் போட்டியிடும் வடசென்னை தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பெண்கள். அதாவது சரிபாதிக்கு மேல். ஆனால் அது வேட்பாளர்கள் சதவீதத்தில் பிரதிபலிக்கிறதா? இல்லைதானே." என்கிறார்.

படத்தின் காப்புரிமை Facebookl

மேலும் அவர், "ஐம்பது சதவீதம் என்பதை அரசே சட்டமாக்க வேண்டும். இது சலுகை அல்ல; உரிமை. கவன ஈர்ப்புக்காக செய்யவில்லை. முன் மாதிரி அரசியலை நாம் தமிழர் கட்சி இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது" என்கிறார்.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலங்களவையில் 2008ஆம் ஆண்டு நிறைவேறியது. ஆனால் இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை. இந்திய அளவில் பிஜூ ஜனதா தளம் 2019 மக்களவைத் தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக சமூகத்தை மேன்மையடைய செய்கிறது என்கிறது பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச ஆய்வு நிறுவனம்.

விரிவாக படிக்க - நாம் தமிழர் கட்சி செய்வது கவன ஈர்ப்பா, முன் மாதிரியா?

''உலக வங்கியில் எனக்கு 4 லட்சம் கோடி கடன்'' - பெரம்பூர் சுயேச்சை வேட்பாளர்

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், தம் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அவரது இந்த வேட்புமனு ஏற்கப்பட்டு, அவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க - உலக வங்கியில் தமக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்ட வேட்பாளர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :