போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானத்தின் தயாரிப்பு குறைப்பு மற்றும் பிற செய்திகள்

போயிங் நிறுவனத்தின் 737 ரக விமான தயாரிப்பு குறைப்பு படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான 737 ரக விமானத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நடந்து வரும் ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து 737 ரக விமானத்தின் தயாரிப்பு இலக்கு மாதத்துக்கு 52லிருந்து 42ஆக குறைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த உலகின் இரண்டு மிகப் பெரிய பயணிகள் விமான விபத்துகளோடு தொடர்புடைய இந்நிறுவனத்தின் 737 மாக்ஸ் ரக விமானத்தின் ஆர்டர்களை பெறுவதற்கு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். அதே போன்று கடந்த அக்டோபர் மாதம் 'லயன் ஏர்' விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவேறு விபத்துகளுக்கும் போயிங் நிறுவனத்தின் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணமென்று தொடக்க கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது

படத்தின் காப்புரிமை ARCHEOLOGICAL DEPARTMENT

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.

விரிவாக படிக்க: 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரிகம்: உறுதி செய்த கார்பன் சோதனை

பாஜக வளர வளர, இந்திய நாடாளுமன்றத்தில் வீழ்ச்சியடையும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆளப் போகும் கட்சியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன.

இந்த தேர்தலில் மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்துகளுக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட அமைதியில் நீடிப்பதுதான்.

அதாவது, இந்த தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. அதுமட்டுமின்றி, முஸ்லிம்களின் பிரச்சனைகளை அரசியல்மயமாக்கி, அதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை உருவாக்கிய அரசியல் கட்சிகளும் பெரியளவில் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், முஸ்லிம்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்து தேர்தலின்போது விவாதிக்கப்படவில்லை எனில், புதிய அரசு பதவியேற்றவுடன் மக்களவையில் இதுகுறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

விரிவாக படிக்க: இந்திய நாடாளுமன்றத்தில் பாஜக வளர்ச்சியும், முஸ்லிம்களின் வீழ்ச்சியும்

தமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா?

படத்தின் காப்புரிமை Twitter
Image caption ராமதாஸ், ஈ.ஆர். ஈஸ்வரன் (இடமிருந்து வலமாக)

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், உண்மையில் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது பலனளிக்கிறதா? தமிழக தேர்தல் களத்தில் ஜாதி ஒரு முக்கியமான அம்சமா?

இந்தியாவின் பல மாநிலங்களில் வேட்பாளர் தேர்வின்போது ஜாதி மிக முக்கியமான ஒரு அம்சமாகச் செயல்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ அந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு.

குறிப்பாக, ஜாதியை மறுக்கும் திராவிடக் கட்சிகள் எப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற கேள்வி எழுப்பப்படும்.

விரிவாக படிக்க: தமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா?

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு: முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் காந்தி

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வியாழக்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இதனையடுத்து "#RahulTharangam (ராகுல் அலை) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரது சகோதரியான ப்ரியங்கா காந்தியும் உடனிருந்தார்.

பாரம்பரியமாக ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியோடு, வயநாட்டிலும் அவர் போட்டியிடுவார் என்று கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு பேசிய ராகுல் காந்தி, "தென் இந்தியாவுடன் நாங்கள் நிற்போம் என்பதை வெளிப்படுத்தவே, வயநாட்டில் போட்டியிடுகிறேன்" என்றார்.

விரிவாக படிக்க: ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு: முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :