2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள், எலிகள் எகிப்தில் கண்டெடுப்பு மற்றும் பிற செய்திகள்

படத்தின் காப்புரிமை Reuters

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் எகிப்திலுள்ள சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் கிடைத்துள்ளது.

இரண்டு மனித மம்மிகளின் உடலை சுற்றி எலிகள் உள்பட மற்ற விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் காணப்படுகின்றன. இவை புதைக்கப்பட்டுள்ள அறையிலுள்ள சுவர் முழுவதும் இறுதிச் சடங்குகள் குறித்த ஓவியங்கள் உள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறையான இது, முற்காலத்தில் எகிப்தின் உயரதிகாரியாக இருந்த டுட்டு மற்றும் அவரது மனைவிக்கான ஓய்வெடுக்கும் பகுதியாக விளங்கியதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான இது, இனி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாட்டின் மற்றொரு பகுதியாக உருவெடுக்கும் என்று அந்நாட்டின் தொல்லியல் துறை நம்புகிறது.

பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி

படத்தின் காப்புரிமை AFP

தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வலதுசாரி கொள்கையை கொண்ட நெதன்யாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாக இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்த கருத்துடன் முரண்படுகிறது

வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள குடியேற்றங்களில் சுமார் நான்கு லட்சம் யூதர்களும், 25 லட்சம் பாலத்தீனியர்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் காந்தி

மாநிலத்திலுள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு அடுத்து, பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி சென்ற பேரணியில் பாகிஸ்தானின் கொடிகள் இடம்பெற்றதாகவும், கேரள காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டடம் "பச்சை இஸ்லாமிய நிறத்தில்" உள்ளதாகவும் சில சமூக ஊடக பயனர்கள் கூறியுள்ளனர்.

இந்த மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற இந்து மற்றும் இஸ்லாமிய மத வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

விரிவாக படிக்க: ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதா?

'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்

Image caption சீமான்

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது.

தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து.

கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதற்கு காரணம் என்ன?

பதில்: 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்தோம். ஒரு போர் தந்திரத்திற்காக அம்மையார் ஜெயலலிதாவை பயன்படுத்தி காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தினோம். இது போர் உத்தி. ஆனால் தற்போது நாங்களே வலிமையுடன் உள்ளோம். எனவே இந்த முறை நாங்கள் தனியாக களம் கண்டு வீழ்த்துவோம்.

விரிவாக படிக்க: 'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று சனிக்கிழமை நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாகக் களமிறங்கிய கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றிபெற்றுள்ள சென்னை அணி, எட்டுப் புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

விரிவாக படிக்க: கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :