கிராமத்து மனிதரின் முயற்சி - தன் மக்களுக்காக தனி ஆளாக சாலை அமைப்பவர் மற்றும் பிற செய்திகள்

நிக்கோலஸ் முசமி படத்தின் காப்புரிமை PHILIP KINYUNGU
Image caption நிக்கோலஸ் முசமி

தனது கிராமவாசிகளின் துயரை போக்க, தாமாகவே ஒரு சாலை கட்ட உள்ளதாக கென்யாவில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அடர்ந்த புதர்களின் வழியாக, அருகில் உள்ள கடைகள் வரை அந்த சாலையை அவர் அமைக்கப் போகிறார்.

மண்வெட்டி மற்றும் கோடாரியை பயன்படுத்தி நிக்கோலஸ் முசமி, ஆறு நாட்களில் இதுவரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை இதற்காக தயார்படுத்தியுள்ளார்.

உள்ளூர் தலைவர்கள் இதனை கட்ட முன்வராததால், தாமே இதனை எடுத்து செய்வதாக அவர் கூறுகிறார். ககநாடா கிராமத்தின் கதாநாயகனாக இவர் புகழப்படுகிறார்.

தினமும் 10 மணிநேரம் இதற்காகச் செலவிடும் முசமி, மழைக் காலம் வருவதற்குள் சாலையை அமைக்க முயல்கிறார்.

BBC Exclusive - பாலகோட்டின் தற்போதைய நிலை என்ன?

பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று (புதன்கிழமை) பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது.

பிபிசியின் உஸ்மான் ஜாகித்தும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அங்கு அவர் சென்று தான் கண்ட காட்சிகளை விவரித்திருக்கிறார்.

பாலகோட்டில் உள்ள இந்த பகுதியைத் தான், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய விமானப்படை அழித்ததாகக் கூறியது. பாகிஸ்தானின் கைபர் பக்தூங்வாவில் இந்த இடம் உள்ளது.

சம்பவ பகுதிக்கு இவ்வளவு தாமதமாக ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் பிபிசி நிருபர் கேட்டபோது, மக்களை அங்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு சூழ்நிலை சாதகமாக இல்லை என்று பதிலளித்தார்கள். தற்போது ஊடகங்களுக்கு அந்த இடத்தை காண்பிக்க சரியான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

விரிவாக படிக்க:பாலகோட் மலைக்கு பிபிசி செய்தியாளரின் பயணம்

தொடங்குகிறது இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல்

ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது.

இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

விரிவாக படிக்க:இந்தியாவின் 91 மக்களவைத் தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்

ஜாலியன்வாலாபாக் படுகொலை: வருத்தம் கோரியது பிரிட்டன்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆக போகிறது.

இந்த சூழலில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அந்நாடு இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

பிரிக்கப்படாத இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தப் படுகொலைகள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக உருவெடுத்தது.

விரிவாக படிக்க:ஜாலியன்வாலாபாக் படுகொலை: வருத்தம் கோரியது பிரிட்டன்

இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மாதுறுஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - உடன்படிக்கை கையெழுத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :