ஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை - சர்ச்சையில் ஜாக் மா மற்றும் பிற செய்திகள்

ஜாக் மா படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜாக் மா

சீனாவிலுள்ள அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்கும் செயல்முறையை ஆதரித்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

1970களின் பிற்காலத்திலிருந்து 2000ஆவது ஆண்டின் மத்தியப்பகுதி வரை சுமார் 25 ஆண்டுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 10 சதவீதமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தொடர் வீழ்ச்சிக்கு பிறகு 6 சதவீதத்தை நெருங்கி வருகிறது.

எனவே, சீனாவின் தொழில்துறையில் இயல்பான ஒன்றாக காணப்படும் '966' என்னும் செயல்முறையை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதன் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்று தொழிலதிபர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய இணையதள வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் இணை நிறுவனரும், தலைவருமான ஜாக் மா, இத்திட்டத்தை ஆதரித்து பேசியது மக்களிடையே கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுசெல்வதற்கு '966' செயல்முறை ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின்படி, காலை 9 மணி முதல் இரவு 9 வரை, வாரத்திற்கு ஆறு நாட்கள் சீனர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் அணி: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் இது தேர்தல் காலமாக இருப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் தேர்தலை நோக்கியே இருந்துவருகிறது. ஆனால், ஓரிரு விதிவிலக்குகள் உண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பும்.

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக அளவு ஆதரவு இருந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை என்பது தனிக்கவனம் பெறும் ஒன்றாக இருந்துவருகிறது.

பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12-ஆவது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே. எல். ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:விராட் கோலியின் இப்படை உலகக் கோப்பையை வெல்லுமா?

ஃபுகுஷிமா: சுனாமியால் உருகிய அணு உலையில் இருந்து எரிபொருள் அகற்றும் பணி தொடக்கம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படும் கருவி அணு எரிபொருள் ராடினை தூக்குவதைக் காட்டும் டெப்கோ அதிகாரி.

2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது அந்த அணு உலையை இயக்கிய நிறுவனம்.

மூன்றாம் எண் அணு உலைக்கு அருகே உள்ள எரிபொருள் இருப்பு வைக்கும் இடத்தில் இருந்து, எரிபொருள் ராடுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் கருவி வெளியில் எடுக்கிறது.

2011-ம் ஆண்டு சுனாமியை அடுத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்து, மிகப்பெரிய அணுக் கதிர்வீச்சு மாசுபாட்டைத் தோற்றுவித்தது. உலகில் நடந்த மிகப் பெரிய அணு உலை விபத்துகளில் ஒன்றாக ஃபுகுஷிமா விபத்து கருதப்படுகிறது.

இந்தப் பகுதியில் இருந்து அணு எரிபொருளை அகற்றும் சிக்கலான பணி முடிய இரண்டாண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க:சுனாமியால் உருகிய ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து எரிபொருள் அகற்றும் பணி தொடக்கம்

பிரசாரத்துக்கு தடை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யோகி ஆதித்யநாத்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப் போல மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான மேனகா காந்திக்கும் நாளை காலை முதல் 48 மணி நேரம் பிரசாரம் செய்யத் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் நேரங்களில் வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டதால், இருதலைவர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க:தேர்தல் விதி மீறல்: யோகிக்கு 72 மணி நேரம், மாயாவதி, மேனகாவுக்கு 48 மணி நேரம் தடை

ஜெயக்குமார் பேட்டி: டிடிவி தினகரன் அதிமுகவை தேர்தலில் பாதிப்பாரா?

பாஜகவுடன் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதால், அதிமுக 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகள் என எல்லா இடத்திலும் வெற்றியை பெறும் என உற்சகத்துடன் பேசுகிறார் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார். பேட்டியிலிருந்து:

கேள்வி:நீங்கள் எதிர்பார்ப்பது போல வெற்றி கிடைக்காமல் போனால், உங்கள் ஆட்சிக்கு வரும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வீர்கள்?

பதில்: முதல் கேள்விக்கு பதில் நேர்மறையானது என்பதால் இரண்டாவது கேள்விக்கு இடமே இல்லை. நாடாளுமன்ற தொகுதிகள், சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் வெற்றி பெறுவோம்.

மகத்தான வெற்றியை பெறுவோம். தமிழ்நாட்டில் அம்மாவின் அலை வீசிக்கொண்டிருக்கிறது. நீந்த தெரிந்தவனுக்கு ஆழத்தைப் பற்றிய கவலை இல்லை. நன்றாக படிக்கும் மாணவனுக்கு தேர்வு குறித்த பயம் இருக்காது. அதேபோல, எங்களுக்கு இந்த தேர்தல் பற்றிய கவலை இல்லை. தமிழ்நாட்டில் எந்த குறையும் இல்லை.

விரிவாக படிக்க:டிடிவி தினகரன் அதிமுகவை தேர்தலில் பாதிப்பாரா? விளக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :