பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து - தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி வழங்க பலர் உறுதி

850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் பெரும் தீவிபத்து படத்தின் காப்புரிமை Getty Images

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ரடாமில் ஒரு மிக புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.

ஆனால், இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கிய பகுதி தீ விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்தில் உள்ள ஏராளமான புராதனமான கலைப்பொருட்களை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் 'இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு' என்று வர்ணித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

இந்த தீ விபத்தினால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், 'மிகவும் மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்று கூறினார். மேலும் புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை தொடங்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவாலயத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் சில சீரமைப்பு பணிகளின் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவாலய சுவரில் சில வெடிப்புகள் ஏற்பட்டதையொட்டி, அந்த கட்டடத்தின் அமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடும் என அச்சத்தில் சீரமைப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

நோட்ர-டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி தருவோம் என பலர் உறுதியளித்துள்ளனர். 850 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு தேவாலயம் ஒன்று பகுதியளவு தீ விபத்தால் அழிந்திருக்கும் சூழலில் இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் நிதி வழங்குவதற்கு பல்வேறு நபர்கள் உறுதியளித்துள்ளனர்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டடத்தை புனரமைக்க சர்வதேச அளவில் நிதி திரட்ட முயற்சிக்க போவதாக தெரிவித்தார். இந்நிலையில் இரண்டு பிரெஞ்சு தொழிலதிபர்கள் சுமார் 300 மில்லியன் யூரோக்கள் நிதி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.

பிரான்கோ ஹென்றி பினால்ட் எனும் பில்லியனர் நூறு மில்லியன் யூரோ நிதி தருவதாக உறுதி அளித்திருக்கிறார் என ஏ எஃப் பி செய்தி முகமை கூறியிருக்கிறது. ஹென்றி பினால்ட் கெரிங் குழுவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராவார்.

பெர்னார்ட் அர்னால்ட் குடும்பம் மற்றும் அவரது நிறுவனமான எல் வி எம் ஹெச் வியாபார சாம்ராஜ்யம் 200 மில்லியன் யூரோ நிதியளிக்க முன்வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஒரு பெரும் எண்ணெய் வியாபாரியும் 100 மில்லியன் யூரோ நிதி தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த பிரெஞ்சு தேவாலயத்தை புனரமைக்க சர்வதேச அளவில் நிதி கோரும் முயற்சியை துவங்கியுள்ளது பிரெஞ்சு தொண்டு நிறுவனமான டு பெட்ரிமோய்ன்.

உலக நாடுகளிடம் இருந்து தற்போது இந்த தேவாலயத்தை புனரமைக்க ஆதரவு பெருகிவருகிறது. தன்னுடைய நிபுணர்களை தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப அனுப்புவதில் மகிழ்ச்சியடைவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசு தேவாலய கட்டுமானத்துக்கு தன்னால் என்ன உதவி வழங்கமுடியும் என சிந்தித்துக்கொண்டிருக்கிறது என பிரான்சுக்கான பிரிட்டன் தூதர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் கலாசார அமைச்சரும் உதவும் வழிகளை ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.

துயரத்துடன் காணப்பட்ட மக்கள்

தீ விபத்து ஏற்பட்ட தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேவாலயத்தில் இருந்து கிளம்பிய தீ பிழம்புகளை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தனர்.

மக்களில் சிலர் வீதிகளில் அழுதவாறு காணப்பட்டனர். வேறு சிலர் பிரார்த்தனை பாடல்களை பாடியவாறு வேண்டினர்.

கத்தோலிக்க மக்கள் புனித வாரம் கொண்டாடவுள்ள சமயத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை வேதனையுடன் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பாரீஸில் உள்ள பல தேவாலயங்களிலும் இந்த தீ விபத்து ஏற்படுத்திய சோகத்தை பதிவு செய்யும் விதத்தில் தேவாலய மணிகள் ஒலித்தன.

உள்ளூர் நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்த தீ விபத்து, மிக குறுகிய நேரத்திலேயே தேவாலயத்தின் மேற்கூரையை சேதப்படுத்தியது.

மேலும், தேவாலயத்தில் இருந்த கண்ணாடிகளால் ஆன சாளரங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு அமைப்பு ஆகியவை இந்த தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தைவிட இந்த தேவாலயத்துக்கு ஓவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் மக்கள் கூடுதலாக வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :